இடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா?
அப்துந்நாஸிர்
பொதுவாக நாம் தரையில் அமரும் போது கையை ஊன்றி அமர்வது வழக்கம். இவ்வாறு அமரும் போது இடது கையைத் தரையில் ஊன்றி அமர்வதற்கு ஹதீஸ்களில் தடை உள்ளது எனச் சிலர் கூறுகின்றனர்.
தொழுகையின் போது இடது கையைத் தரையில் ஊன்றி அமர்வதற்குத் தடை உள்ளதாக ஹதீஸ்களில் காணப்படுகின்றது. ஆனால் தொழுகைக்கு வெளியே இவ்வாறு ஊன்றி உட்கார்வதை தடை செய்தது தொடர்பாக வரும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகவே உள்ளன.
இது தொடர்பான செய்திகளையும், அந்த அறிவிப்புகள் எவ்வாறு பலவீனமாக உள்ளன என்பதையும் காண்போம்.
அபூதாவூதின் அறிவிப்பு :
அஷ்ஷரீத் பின் ஸுவைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நான் எனது இடது கையை எனது முதுகுக்குப் பின்புறமாக வைத்து என்னுடைய கையின் உள்ளங்கையை ஊன்றி உட்கார்ந்திருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டானோ அவர்களின் இருப்பைப் போன்று நீ அமர்ந்திருக்கின்றாயா? என்று கேட்டார்கள்.
நூல் : அபூதாவூத் 4848
இடது கையை முதுகிற்குப் பின்புறமாக ஊன்றி உட்காருவது கூடாது என்று கூறுபவர்கள் மேற்கண்ட செய்தியைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
ஆனால் மேற்கண்ட அறிவிப்பு பலவீனமானதாகும்.
இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு ஜுரைஜ் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் முதல்லிஸ் ஆவார். அதாவது அதாவது தம்முடைய ஆசிரியரிடமிருந்து அவர் செவியேற்காத செய்திகளையும் செவியேற்றதைப் போன்று பொருள் தரக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவிப்பவர் ஆவார்.
இது போல் தத்லீஸ் செய்யும் அறிவிப்பாளர்கள் இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று அறிவிக்காமல் இவரிடம் நான் கேட்டேன் என்றோ என்னிடம் இவர் சொன்னார் என்றோ நேரில் கேட்டதைத் தெளிவுபடுத்தும் சொற்களைப் பயன்படுத்தி அறிவித்தால் தான் அது ஏற்கப்படும் என்பது ஹதீஸ்கலையில் உள்ள விதியாகும்.
இப்னு ஜுரைஜ் என்பார் தத்லீஸ் செய்யக் கூடியவர் என்று பல அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
இமாம் அஹ்மத் கூறுகிறார் :
இன்னார் கூறினார், இன்னார் கூறினார் என்றோ எனக்கு அறிவிக்கப்பட்டது என்றோ இப்னு ஜுரைஜ் அறிவித்தால் நிராகரிக்கத்தக்க செய்திகளைக் கொண்டுவருவார். (அஹ்பரனீ) இன்னார் எனக்கு அறிவித்தார் என்றோ (ஸமிஃத்து) நான் செவியேற்றேன் என்றோ கூறினால் அதுதான் அவர் (செய்திகளில்) உனக்கு போதுமானதாகும். இப்னு ஜுரைஜ் உண்மையாளர் ஆவார். அவர் ஹத்தஸனீ என்று கூறினால் அது அவர் நேரடியாகச் செவியேற்றதாகும். அவர் அஹ்பரனீ என்று கூறினால் அது அவர் ஆசிரியரிடம் படித்துக் காட்டியதாகும். அவர் சொன்னார் என்று கூறினால் அது அவர் செவியேற்காதவையும், அல்லது ஆசிரியரிடம் படித்துக் காட்டாதவையும் ஆகும்.
இமாம் தாரகுத்னீ கூறுகிறார்:
இப்னு ஜுரைஜ் தத்லீஸாக அறிவிப்பவற்றை விட்டும் தூர விலகி விடுங்கள். ஏனெனில் அவர் மிக மோசமாகத் தத்லீஸ் (இருட்டடிப்பு) செய்பவர் ஆவார். அவர் குறை கூறப்பட்ட அறிவிப்பாளர்களிமிடருந்து தாம் செவியேற்றவற்றில் தான் தத்லீஸ் செய்வார்.
இவர் தத்லீஸ் செய்பவராக இருந்தார் என இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும் விமர்சித்துள்ளார்கள்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் . பாகம் 6 பக்கம் 359
மேற்கண்ட அறிஞர்களின் விமர்சனங்களிலிருந்து இப்னு ஜுரைஜ் தம்முடைய ஆசிரியரிடமிருந்து நேரடியாகச் செவியேற்றதற்கான வாசகங்களைப் பயன்படுத்தினால் தான் அது ஸஹீஹான ஹதீஸாகும். இல்லையென்றால் அது பலவீனமானதாகும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் மேற்கண்ட செய்தியின் அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு ஜுரைஜ் நேரடியாகச் செவியேற்றதற்கான எந்த வார்த்தைகளும் வரவில்லை.
இந்தச் செய்தி இடம் பெற்ற அனைத்து அறிவிப்புகளையும் கீழே கொடுத்துள்ளோம்.
அஹ்மதுடைய அறிவிப்பு
பைஹகி குப்ராவின் அறிவிப்பு
பைஹகியின் ஆதாப் அறிவிப்பு
இப்னு ஹிப்பான் அறிவிப்பு
தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் அறிவிப்பு
தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் மற்றொரு அறிவிப்பு
அல்அஹ்காமுஸ் ஷரயிய்யா
இப்படி மேலே நாம் எடுத்துக்காட்டிய எல்லா அறிவிப்புக்களிலும் நான் கேட்டேன் என்னிடம் சொன்னார் என்பது போன்ற வாசகங்களைப் பயன்படுத்தி இப்னு ஜுரைஜ் அறிவிக்கவில்லை. எனவே இது பலவீனமான அறிவிப்புகளாகும்.
ஆயினும் பின் வரும் முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் அறிவிப்பில் இப்ராஹீம் எனக்கு அறிவித்தார் என்று இப்னு ஜுரைஜ் கூறியுள்ளார்.
தொழுகையில் இருப்பில் இருப்பவர் தன்னுடைய இடது கையை (பின்புறமாக ஊன்றி) வைக்கும் விசயத்தில் இது எவர்கள் மீது கோபம் கொள்ளப்பட்டதோ அவர்களுடைய இருப்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு இப்னு அஸ்ஸரீத்
நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (3057)
மேற்கண்ட அறிவிப்பில் இப்னு ஜுரைஜ் தத்லீஸ் செய்யவில்லை. ஆனாலும் இதில் வேறு பலவீனம் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் சஹாபியாக – நபித்தோழராக இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழாத ஒருவர் நபிகள் நாயகம் சொன்னதாக அறிவித்தால் அது முர்ஸல் எனும் பலவீனமான அறிவிப்பாகும்
இந்த ஹதீஸை அம்ரு இப்னு அஸ்ஸரீத் என்பார் நபியவர்களிடமிருந்து அறிவிக்கின்றார். இவர் தாபியீ (இரண்டாம் தலைமுறை) ஆவார். இவர் நபியவர்களைச் சந்தித்தவர் கிடையாது. எனவே இது அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த பலவீனமான செய்தியாகும்.
ஒரு வாதத்திற்கு மேற்கண்ட செய்தியை ஸஹீஹ் என்று வைத்துக் கொண்டாலும் மேற்கண்ட செய்தியில் தொழுகையின் இருப்பில் கைகளை ஊன்றி வைப்பது கூடாது என்றுதான் வந்துள்ளது. எனவே தொழுகை அல்லாத நிலைகளில் அவ்வாறு ஊன்றி இருப்பதைத் தவறு என்று கூறமுடியாது.
தொழுகையின் அத்தஹிய்யாத் இருப்பில் இடது கையைப் பின்புறமாக ஊன்றி இருப்பதைத் தான் நபியவர்கள் தடை செய்துள்ளார்கள் என்பது ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளில் மிகத் தெளிவாக வந்துள்ளது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
தொழுகையின் இருப்பின் போது ஒருவர் தனது இரண்டு கைகளின் மீது ஊன்றி இருப்பதை நபியவர்கள் தடை செய்தார்கள்.
நூல்: அஹ்மத் (6347)
பின்வரும் அறிவிப்பில் இடது கையின் மீது ஊன்றி இருப்பதைத் தடை செய்தார்கள் என்று வந்துள்ளது.
தொழுகையிலே தமது இடது கையின் மீது ஊன்றி இருந்த ஒரு மனிதரை நபியவர்கள் தடுத்து இது யூதர்களின் தொழுகை என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : ஹாகிம் (1007)
இதுவும் அறிவிப்பாளர்கள் தொடர் வலிமையான ஸஹீஹான ஹதீஸ் ஆகும்.
எனவே தொழுகையின் இருப்பில் இடது கையை ஊன்றி அமர்வது தான் தடை செய்யப்பட்டுள்ளதே தவிர தொழுகை அல்லாத நேரங்களில் அவ்வாறு இருப்பது தவறு கிடையாது. அது தொடர்பாக வரும் செய்திகள் பலவீனமானவையாகும்.
ஏகத்துவம்