நபிகளாருக்கு கைபரில் நஞ்சு பூசப்பட்ட இறைச்சி வழங்கப்பட்டதா?
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதப் பெண் ஒருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை (அன்பளிப்பாக)க் கொண்டுவந்தாள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். பிறகு அவள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அவளிடம் அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தர்கள்.
அப்போது அவள், “நான் உங்களைக் கொல்ல விரும்பினேன்” என்றாள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதற்காக, அல்லது எனக்கெதிராக அல்லாஹ் உன்னைச் சாட்டியிருக்க வில்லை” என்று கூறினார்கள். மக்கள், “அவளை நாங்கள் கொன்றுவிடலாமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்நாக்குச் சதையில் அ(ந்த விஷத்தின் அடையாளத்)தை நான் தொடர்ந்து பார்த்துவந்தேன்.
– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
(முஸ்லிம்:4408)
மேலுள்ள ஆதார பூர்வமான ஹதீஸில் ஒரு யூதப்பெண் நபிகளாரை கொள்ளும் முகமாக நபிகளாருக்கு கைபரில் நஞ்சு வழங்கியதாகவும் அதை நபிகளார் சாப்பிட்டதாகவும் கூறுகின்றது
அதுமற்றுமின்றி நபிகளார் “”எனக்கெதிராக அல்லாஹ் உன்னைச் சாட்டியிருக்க வில்லை” என்று கூறினார்கள்””
என்ற செய்தியும் ஹதீஸில் இடம்பெற்றுள்ளது
அதே சந்தர்பத்தில் நபிகளாரின் மரணத்தருவாயில் ஏற்பட்ட நோயின் போது பின்வருமாறு விஷம் கலந்து கொடுக்கப்பட்ட உணவை சாப்புட்டதின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழய் அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது” என்று வருத்தத்தை கூறுகின்றார்
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது,
“ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழய் அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது” என்று கூறினார்கள்.
ஷஹீஹ்
(புகாரி 4428)
மேலே உள்ள ஹதீஸ் மரணத்தருவாயில் ஏற்பட்ட வருத்தத்துக்கு கைபரில் நஞ்சு வழங்கப்பட்டதை காரணமாக கூறுவதை அவதானித்திருப்பீர்கள்
அல்லாஹ் அல் குர்ஆனில் கூறும் பொது:
5:67. தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
விஷம் என்றால் என்ன?
அதை கொடுத்தவர் என்ன நோக்கத்துடன் கொடுத்தாள்?
விஷத்தைப் பொறுத்தமட்டிலே உண்ட மாத்திரத்தில் உயிரைப் பறிப்பதாகும். அதை நினைத்து தான் அந்த யூதச்சி அண்ணலார்(ஸல்) அவர்களுக்கு கொடுக்கிறாள். ஆனால், அது அவர்களைக் கொல்லவில்லை.
விஷத்தின் பொருட்டு நபி(ஸல்) அவர்கள் இறக்க மாட்டார்கள் என்பதற்கான ஹதீஸ் அதே புஹாரியில், 3169 வது ஹதீசாக உள்ளது.
3169. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி(ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவுடன்) நபி(ஸல்) அவர்கள், ‘இங்கேயுள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே, அவர்கள் ஒன்று திரட்டி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்கள். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள்,
‘நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப் போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மையைச் சொல்வீர்களா?’
என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்கள், ‘சரி (உண்மையைச் சொல்கிறோம்)” என்று பதிலளித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் தந்தை யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘இன்னார்” என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார் தான்” என்று கூறினார்கள். அவர்கள், ‘நீங்கள் சொன்னது உண்மை தான்” என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள், ‘நான் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டால் அதைப் பற்றி நீங்கள் என்னிடம் உண்மையைச் சொல்வீர்களா?‘ என்று கேட்டார்கள்.
அவர்கள், ‘சரி சொல்கிறோம், அபுல்காசிமே! இனி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் தந்தை விஷயத்தில் நாங்கள் பொய் சொன்னதை நீங்கள் அறிந்ததைப் போன்றே அதையும் அறிந்து கொள்வீர்கள்” என்றார்கள்.
நபி(ஸல்) அவர்கள், ‘நரகவாசிகள் யார்?‘ என்று கேட்டார்கள். அவர்கள், ‘நாங்கள் அதில் சில காலம் மட்டுமே இருப்போம். பிறகு, எங்களுக்கு பதிலாக அதில் நீங்கள் புகுவீர்கள்” என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அதில் நீங்கள் இழிவுபட்டுப் போவீர்களாக! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அதில் உங்களுக்கு பதிலாக ஒருபோதும் புக மாட்டோம்” என்று கூறினார்கள்.
பிறகு, ‘நான் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மையைச் சொல்வீர்களா?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘சரி, அபுல் காசிமே!” என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘ஆம் (கலந்திருக்கிறோம்)” என்று பதில் சொன்னார்கள். நபி(ஸல்) அவர்கள்,
‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘நீங்கள் பொய்யராக இருந்(து விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.
நீங்கள் இறைத் தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்கு செய்யாது” என்று பதிலளித்தார்கள்.
Volume : 3 Book :58
யூதர்கள் என்ன சொல்கிறார்கள்…, ”நீங்கள் இறைத் தூதராக இருந்தால் உங்களுக்கு விஷமானது தீங்கு செய்யாது” அது தான் சத்தியம்.
இந்தச் சத்தியத்தை யூதன் விளங்கி வைத்திருந்துள்ளான். ஆனால், சத்தியக் குரல் எனத் தன்னைப் பீற்றிக் கொள்ளும் அசத்தியக் குரல் விளங்கவில்லை.
அல்லாஹ்வின் தூதரின்(ஸல்) முன்னறிவுப்பு.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ஒரு முறை உஹத் மலையின் மீது ஏறுகிற பொழுது, அது ஒரு விதமான நடுங்குவதை உணர்ந்தார்கள், அப்பொழுது, நபியவர்கள்,
”(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர், உமர், உஸ்மான்(ரலி) ஆகீயோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும், (நானும்) ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்” என்று கூறினார்கள்.
Volume :4 Book :62 அறிவிப்பாளர்: அனஸ்(றளி) . எண் 3675.
என்று கூறியதை நாம் காண முடிகிறது.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் விஷம் உண்டதின் காரணத்தால் இறந்திருந்தால், அவர்களும் சஹீதின் அந்தஸ்தை அடைவார்கள். அதனடிப்படையில், இந்த முன்னறிவுப்புச் செய்யக் கூடிய ஹதீசில், நபியவர்கள் , உன் மீது மூன்று உயிர் தியாகிகள் எனக் கூறியிருக்க வேண்டும், ஆனால், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இரண்டு தியாகிகள் எனக் கூறியதிலிருந்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கொல்லப்படவில்லை, மாறாக மரணித்தார்கள் என்று தெளிவாக விளங்க முடியும்.
அடுத்து நபி(ஸல்) அவர்கள் மரணித்த பொழுது, அபூ பக்கர் சித்திக்(ரலி) அவர்கள் பார்த்து விட்டு அவர்கள் கொல்லப்பட்டதாகச் சொல்லவில்லை. அவர்கள் கொல்லப்பட்டிருந்தால், நபியவர்கள் சஹீத் ஆவார்கள். ஷஹீத்களை இறந்து விட்டதாகச் சொல்லக் கூடாது என்கிற இறைக் கட்டளையை அறியாதவர்கள் அல்லர் அபூபக்கர் சித்தீக்(றளி) அவர்கள். நபி(ஸல்) அவர்களுக்கு வந்தது இயற்கையான மரணம் என்பதால் தான், அபூபக்கர்(றளி) அவர்கள் மரணித்து விட்டார்கள் எனக் கூறினார்கள்.
1242. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார்.
உமர்(ரலி) மீண்டும் மறுக்கவே அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் உமர்(ரலி) பக்கமிருந்து அபூ பக்ர்(ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூ பக்ர்(ரலி) ‘உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான்.
மேலும், அல்லாஹ் கூறினான்: முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்” (திருக்குர்ஆன் 3:144) என்றார்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள்.
Volume :2 Book :23
யூதர்களும் அல்லாஹ்வின் தூதரை(ஸல்) கொல்ல இயலாது என விளங்கி வைத்திருந்தனர். அல்லாஹ்வின் தூதருடைய அன்புத் தோழரும் அல்லாஹ்வின் தூதரைக் கொல்லவில்லை என உறுதிப்படுத்தினார்கள். அது மட்டுமின்றி, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் தான் கொல்லப்பட மாட்டோம் என அவர்கள் வாயினாலேயே முன்னறிவுப்புச் செய்து விட்டார்கள்.
அப்படியானால், அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய, அசத்தியக் குரல் பதிந்த, அந்த ஹதீசை எப்படி அல் குர் ஆனுக்கு முரனில்லாமல் விளங்குவது? என்றால்,
அந்த ஹதீசிலேயே பதில் இருக்கிறது,
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது,
“ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக் குழாய் அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது” என்று கூறினார்கள்.
ஷஹீஹ்
(புகாரி 4428)
இதில் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் முதல் வரியை ஆராய்ந்தால், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நோயினால் இறந்தார்களா? இல்லை விஷத்தினால் கொல்லப்பட்டார்களா? என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும்.
நபியவர்கள்(ஸல்) நோயினால் தான் இறந்துள்ளார்கள்.
அப்படியானால், இரண்டாம் பத்தியில் வரக்கூடிய வாசகங்களை நாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக நாம் உட் கொள்ளும் உணவு கூட சில வேளைகளில் நச்சாக உள்ளிருந்து ஒரு விதமான நோயை நமக்கு ஏற்படுத்தி அதன் மூலம் நம் உயிரைக் குடிக்க இயலும் என்பதை நாம் அறிகிறோம். அது போன்று சில நோய்களுக்காக கொடுக்கப்படும் மருந்துகளும் நம் உடம்பில் வேறு விதமான எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்தி, நோய்வாய்ப்பட்டு, மனிதர்களை மரணிக்கச் செய்துள்ள எத்துனையோ நிகழ்வுகளை நாம் அறிகிறோம்.
அதற்காக உணவு கொடுத்தவர்களையோ, அல்லது மருந்து கொடுத்த மருந்துவரையோ கொலையாளி என்று சொல்லவோ குற்றஞ் சாட்டவோ இயலாது. மாறாக அதை ஒவ்வாமை என்றே கூறுவோம்.
அப்படியானால், ஹதீசின் பின் பகுதியில் அண்ணலாரின் கூற்றாக வருகிற செய்தி நமக்கு சொல்ல வருகிற விடயம் என்ன?
அந்த விசமும் அண்ணலாரின்(ஸல்) நோயிற்கு ஒரு காரணியாக அமைந்திருக்கிறது, அவ்வளவு தான்.
இங்கே ஒரு கேள்வி எழலாம்?
என்னவெனில், அல்லாஹ் மனிதர்களால் தீங்கிழைக்க இயலாது என்று கூறிய பின்னர் எப்படி யூதச்சி கொடுத்த விசம் தீங்கிழைத்து இருதயத்தின் நாளத்தை அறுக்கிற அளவிற்கு ஆயிற்று எனக் கேட்கலாம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அருந்து போவதை உணர்கிறேன் என்று கூறுவது உண்மையாகவே அருந்து போவது என்று அர்த்தம் கொள்ள இயலாது. உண்மையாகவே அறுந்து போனால் அல்லாஹ்வின் தூதரால் பேசியிருக்கவோ, அதன் பின்னர் செயலாற்றி இருக்கவோ இயலாது. அப்படி ஒரு வேதனையை உணர்ந்தார்கள் என்பதே சரியான விளங்குதலாக இருக்கும்.
இரண்டாவது தீங்கு என்று திருமறை வசனம் கூறுவது எதனடிப்படையில் என்று பார்த்தால், எடுத்துக் காட்டிற்கு, அந்த விசம் கலந்த உணவை மற்ற மனிதர்கள் உண்டிருந்தால் அந்த இடத்திலேயே மரணித்து இருப்பார்கள். இது தான் இறைவனின் இயற்கை விதி. ஆனால், அதற்கு மாற்றமான முறையில் அல்லாஹ் இறைத் தூதர்(ஸல்) அவர்களைப் ஐந்து ஆண்டுகள் பாதுகாக்கிறான்.
அது மட்டுமல்ல,மேலே நாம் மேற் கோள் காட்டிய மனிதர்களால் இறைத் தூதர்(ஸல்) அவர்களை கொல்ல இயலாது என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய(புஹாரி 3169வது) வேரொறு ஹதீசில் வருவதன் மூலம், மனிதர்கள் நபி(ஸல்) அவர்களை மனிதர்கள் கொல்ல இயலாது என்றும்,
மேலும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உஹத் மலையின் மீது ஏறுகிற பொழுது உமர் மற்றும் உஸ்மான்(றளி) ஆகிய இருவரை மட்டும் சஹீத் என முன்னறிவுப்புச் செய்ததிலிருந்து, அவர்கள் கொல்லப்பட மாட்டார்கள் என்றும் நாம் விளங்க முடியும்.
ஏகத்துவம்