அரஃபா  நோன்பு எப்போது யார் வைக்க வேண்டும்?

https://youtu.be/6OEPv6UhgsI

ஹஜ் பயணிகள் தவிர மற்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு வைக்க வேண்டும் என்று தான் ஹதீஸில் உள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு விளக்கமும், அந்த ஹதீஸின் தமிழாக்கமும் வெளியிடவும்.

சவூதியில் அந்த நாள் என்பது ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் கூடியிருக்கும் நாளைத் தான் குறிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் நீங்கள், நமக்கு எப்பொழுது பிறை ஒன்பது வருகிறதோ அன்று தான் அரஃபாவுடைய நாள் என்று கூறி அன்று நோன்பு வைக்க சொல்கிறீர்கள்?

இதையும் விளக்கவும்.

ஹாஜிகள் அரஃபா நாளில் நோன்பு நோற்பது நபிவழி அல்ல.

மைமூனா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அரஃபா நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குடித்தார்கள்.

நூல் : புகாரி 1989

ஹாஜிகள் அல்லாத மற்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு வைப்பதற்கு பின்வரும் செய்தி ஆதாரமாக அமைந்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல் : முஸ்லிம் 1796

மேற்கண்ட ஹதீஸில் அரஃபா நாளில் நோன்பு வைத்தால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

அடுத்து அரஃபா நாள் என்பது எது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சவூதி அரசாங்கம் அரஃபா நாள் என்று எதை அறிவிக்கிறதோ அந்த நாள் ஹாஜிகளுக்கு அரஃபா நாள் என்றாலும் மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கும் அதுவே அரஃபா நாளாகுமா?

அல்லது அவரவர் பகுதியில் பிறை பார்க்கப்பட்ட அடிப்படையில் ஒன்பதாவது நாள் அரஃபா நாள் ஆகுமா?

அரஃபா நாள் என்ற சொல்லை வைத்து ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளே அரஃபா நாள் என்று சிலர் வாதிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல் விளக்கம் இதற்கு மாற்றமாக உள்ளது.

துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பதாவது நாளே அரஃபாவுடைய நாள். அவரவர் பகுதியில் பிறை பார்க்கப்பட்டு எப்போது துல்ஹஜ் மாதம் பிறை 9 வருகின்றதோ அந்த நாளே அவருக்கு அரஃபாவுடைய நாள் என்பதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து நடைமுறையாக இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் பதிமூன்று வருட காலங்கள் வாழ்ந்துள்ளார்கள். இக்கால கட்டத்தில் ஆண்டு தோறும் அரஃபாவுடைய நாளை நிச்சயம் அவர்கள் அடைந்திருப்பார்கள்.

மக்காவில் ஹாஜிகள் எப்போது கூடுகிறார்கள் என்று பார்த்து அன்றைய நாளில் தான் மற்ற பகுதியில் உள்ளவர்களும் நோன்பு நோற்க வேண்டும் என்று இருக்குமேயானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து ஒருவரை மக்காவிற்கு அனுப்பி ஹாஜிகள் எப்போது கூடுகிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு வருமாறு கூறியிருப்பார்கள்.
அவர் வந்த பிறகு அந்த நாளில் நோன்பு நோற்றிருப்பார்கள்.

ஆனால் ஹதீஸ்களில் இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததாக எந்த ஒரு சம்பவமும் இடம் பெறவில்லை. எனவே மதீனாவில் பிறை பார்த்ததின் அடிப்படையில் அவர்களுக்குப் பிறை ஒன்பது எப்போது வந்ததோ அந்த நாளில் தான் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் அரஃபா நாள் நோன்பை நோற்றிருப்பார்கள் என்பது தெளிவாகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீ மூலம் ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருப்பான் என்று சிலர் கூறுவது ஏற்க முடியாததாகும்.

அல்லாஹ் வஹீ மூலம் அறிவித்துக் கொடுத்தால் அது பற்றி அல்லாஹ்வின் தூதர் சொல்லி இருப்பார்கள்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மதீனாவில் மட்டும் முஸ்லிம்கள் வாழவில்லை. மதீனாவுக்கு வெளியில் ஏராளமான முஸ்லிம்கள் வாழ்ந்தனர்.

அவர்களுக்கு ஹாஜிகள் அரஃபாவில் கூடும் தினம் தெரிய வழி இல்லை. அந்த ஊர்வாசிகள் தமது ஊர்களில் பிறை பார்த்த அடிப்படையில் தான் அரஃபா தினத்தை முடிவு செய்திருப்பார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த போது ஹாஜிகள் அரஃபாவில் கூடியுள்ளார்கள். அரஃபாவில் ஹாஜிகள் கூடிய செய்தியை அறிந்து, அதன் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கவில்லை. தங்களுடைய பகுதியில் பார்க்கப்பட்ட பிறையின் அடிப்படையில் தான் அரஃபா நாள் நோன்பைத் தீர்மானித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் மக்காவில் ஹாஜிகள் கூடும் நாளை அறிந்து அந்த நாளிலேயே நோன்பு வைக்க முயற்சி செய்திருக்கலாம்.

ஏனென்றால் தலைப்பிறை பார்த்த நாளிலிருந்து எட்டு நாட்கள் கழித்துத் தான் அரஃபா நாள் வருகின்றது. இந்த எட்டு நாட்கள் இடைவெளியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையேனும் அனுப்பி அரஃபா நாளை விசாரித்து வரச் சொன்னதாக எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாது.

மக்காவிலும், மதீனாவிலும் ஒரே நாளில் பிறை தென்பட்டிருக்கும் என்று சிலர் கூற முற்படலாம். ஒரே நாளில் தென்படுவதற்கு வாய்ப்பிருந்தது போல் வெவ்வேறு நாட்களில் தெரிவதற்கும் வாய்ப்பு இருந்தது என்பது தான் இதற்கான நமது பதில்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இப்போது இருப்பது போன்று தொலைத்தொடர்பு வசதிகள் இருந்திருந்தால் அவர்கள் அதைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் சிலர் இட்டுக்கட்டிக் கூறுகின்றார்கள்.

நாம் கேட்பது இருக்கின்ற வசதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்களா என்பது தான்.

தொலைபேசி இருந்தால் கேட்டுத் தெரிந்திருப்பார்களாம். முதல் பிறைக்கும், அரஃபவிற்கும் எட்டு நாட்கள் இடைவெளி உள்ளன.

இந்த எட்டு நாட்கள் அவகாசத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பி விசாரித்தார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்து மக்கள் தங்கள் பகுதியில் பிறை பார்த்த அடிப்படையில் தான் அரஃபா நாளை முடிவு செய்திருப்பார்களே தவிர மக்காவில் கூடுவதை அறிந்து முடிவு செய்திருக்கவே முடியாது.
ஹாஜிகள் அரபாவில் கூடும் நாள் தான் உலகம் முழுமைக்கும் அரஃபா நாள் என்று ஒருவர் கூறினால் இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் தவறிழைத்து விட்டார்கள் என்று பழி சுமத்துகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் எப்படி அரஃபா நாளை முடிவு செய்தார்களோ அப்படி முடிவு செய்வதைத் தவறு என்று சொல்லும் எந்தக் கருத்தும் நச்சுக் கருத்தாகும் என்பதை விளங்கிக் கொண்டால் இது போன்ற கேள்விகளுக்கு இடமில்லை.

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *