இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுபவரும் உட்காந்து தொழ வேண்டுமா❓
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் குதிரையில் சென்று கொண்டிருந்த போது கீழே விழுந்து விட்டார்கள். இதனால் அவர்களுக்கு முட்டுக்காலில் அல்லது புஜத்தில் முறிவு ஏற்பட்டு விட்டது.
ஒரு மாத காலம் தமது மனைவியரிடத்தில் செல்வதில்லை என சத்தியம் செய்து கொண்டார்கள். பேரீச்சை மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பரணில் அமர்ந்தார்கள். அவர்களுடைய தோழர்கள் அவர்களை நோய் விசாரிப்பதற்காக வந்த போது (அந்தப் பரணில்) அமர்ந்தவர்களாகவே அவர்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். வந்தவர்கள் நின்று தொழுதனர்.
ஸலாம் கொடுத்த பின் நபி (ஸல்) அவர்கள், பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் சொல்லுங்கள். அவர் ருகூவு செய்தால் நீங்களும் செய்யுங்கள். அவர் ஸஜ்தா செய்தால் நீங்களும் செய்யுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள் என்று கூறினார்கள்.
29 நாட்கள் சென்றதும் நபி (ஸல்) அவர்கள் அந்தப் பரணிலிருந்து இறங்கினார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! ஒரு மாத காலம் என்று நீங்கள் சத்தியம் செய்தீர்களே!’ என்று தோழர்கள் கேட்ட போது, இந்த மாதம் இருபத்தி ஒன்பது நாட்கள் தாம் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : புகாரி (378)
இந்த ஹதீஸின் அடிப்படையில் இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுபவரும் உட்கார்ந்து தான் தொழ வேண்டும் என்ற சட்டம் ஆரம்பத்தில் இருந்தது. இது பின்னர் மாற்றப்பட்டு விட்டது.
நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது பிலால் (ரலி) வந்து தொழுகை பற்றி அறிவித்தார். மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூபக்ரிடம் கூறுங்கள் என்று கூறினார்கள்………
……… அபூபக்ர் (ரலி) தொழுகையைத் துவக்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் தம் நோய் இலோசாவதை உணர்ந்து தரையில் கால்கள் இழுபட இரண்டு மனிதர்களுக்கு இடையே தொங்கிக் கொண்டு பள்ளிக்குச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் வருவதை உணர்ந்து அபூபக்ர் (ரலி) பின்வாங்க முயன்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி சைகை செய்து விட்டு அபூபக்ரின் இடப்புறம் அமர்ந்தார்கள். அபூபக்ர் (ரலி) நின்று தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதார்கள். அபூபக்ர்(ரலி) நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள். மக்கள் அபூபக்ர் (ரலி) யைப் பின்பற்றித் தொழுதார்கள். ( ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி (713)
நபி (ஸல்) அவர்கள் இமாமாக உட்கார்ந்து தொழும் போது அபூபக்ர் (ரலி) அவர்களும் மக்களும் நின்று தொழுதுள்ளார்கள்.
மேலும் நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுகும்போது நபியைப் பின்பற்றி நபியவர்களின் வலப்பக்கத்தில் அபூபக்கர்(ரலி) அவர்கள் நின்று தொழுதுள்ளார்கள்.
அது தவறு என்றால் நபி(ஸல்) அவர்கள் திருத்தியிருப்பார்கள்..
இது நபி (ஸல்) அவர்களின் இறுதிக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். எனவே, இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றுபவர்களும் உட்கார்ந்து தான் தொழ வேண்டும் என்ற முந்தைய ஹதீஸில் கூறப்பட்ட சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்பதை விளங்கலாம்.
ஏகத்துவம்