போதைப் பொருள் கலந்த மருந்துகளைச் சாப்பிடலாமா?
இந்த விஷயத்தில் கிடைக்கும் ஆதாரங்கள் மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்டதாக உள்ளதால் இது குறித்து அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.
வாயில் பின் ஹுஜ்ர் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் அல்ஜுஅஃபீ (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்தார்கள்; அல்லது அதை வெறுத்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள், மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன் என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அது மருந்தல்ல; நோய் என்றார்கள்.
நூல் : முஸ்லிம் 3670
இந்த ஹதீஸையும், இதே கருத்திலமைந்த வேறு சில ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொண்டு ஹராமான பொருள் கலந்த மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகம் அவர்களின் வாதத்தை நிறுவப் போதுமானதாக இல்லை. மதுவையே மருந்தாகப் பயன்படுத்துவதற்கும், மதுவையும் மற்றும் சில பொருட்களையும் கலந்து மருந்து தயாரிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
இந்த ஹதீஸில் அந்த மனிதர் மருந்து தயாரிப்பதாகக் கூறவில்லை. மருந்துக்காக மதுவைக் காய்ச்சுகிறேன் என்று தான் கூறுகிறார். இதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கிறார்கள். சில நோய்களுக்கு மதுவை அருந்தினால் அதில் குனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவரது செயல் அமைந்துள்ளது.
எந்த நோய்க்கும் மது மருந்து அல்ல என்ற முடிவைத்தான் இந்த ஹதீஸில் இருந்து எடுக்க முடியும். மது என்ற பெயரை இழந்து மருந்து என்ற நிலையை அடையும் போது அதைத் தடுக்க இது ஆதாரமாக ஆகாது.
தடை செய்யப்பட்டவைகளைக் கொண்டு மருந்து செய்யலாம் என்ற கருத்துக்குத் தான் வலுவான ஆதாரங்கள் உள்ளன.
மார்க்கத்தில் தடை செய்யப்பட்டவைகளை நிர்பந்த நிலையில் ஒருவர் செய்தால் அது குற்றமாகாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும்.
நிர்பந்தத்துக்கு ஆளானவர்கள் தடை செய்யப்பட்டதைச் செய்தால் அவர்கள் மீது குற்றம் இல்லை என்று 2:173, 5:3, 6:119, 6:145, 16:115 அல்லாஹ் இவ்வசனங்களில் கூறுகிறான்.
மேற்கண்ட வசனங்களில் இரத்தம் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுள்ளது. ஆனாலும் நிர்பந்தம் காரணமாக ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனிதனுக்குச் செலுத்தலாம் என்று அனைத்து அறிஞர்களும் கூறுகின்றனர்.
நிர்பந்தம் என்பதன் குறைந்தபட்ச அளவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பினவருமாறு விளக்கியுள்ளனர்.
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்களுக்குப் பஞ்சம் ஏற்படுகிறது. எந்த நிலையில் தாமாகச் செத்தவை எங்களுக்கு ஹலாலாகும்? என்று நபித் தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலையில் அருந்தும் பால், மாலையில் அருந்தும் பால் உங்களுக்குக் கிடைக்காவிட்டால் அதை உண்ணலாம் என்றனர்.
(நூல்கள்: அஹ்மத் 20893, 20896, தாரமி 1912)
ஒரு நாள் உணவு கிடைக்காவிட்டாலே ஒருவன் நிர்பந்த நிலையை அடைந்து விடுகிறான் என்பதை இந்த நபிமொழியில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
ஒரு நாள் பசியை விட நோயில் விழுந்து கிடப்பது அதிக நிர்பந்தம் என்பதை அறிவுடயோர் மறுக்க மாட்டார்கள். எனவே நோய் நிவாரணம் கிடைக்கும் என்றால் தடை செய்யப்பட்டவைகளை மருந்தாக உட்கொள்ள மார்க்கத்தில் தடை இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு கூட்டத்தினர் நோயுற்ற போது அவர்களை ஒட்டகத்தின் சிறு நீரை அருந்துமாறு கூறினார்கள். அதை அருந்திய உடன் அவர்கள் குணமடைந்தார்கள் என்று ஹதீஸ்களில் காணப்படுகிறது.
. 233 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உக்ல் அல்லது உரைனா குலத்தாரில் சிலர் (மதீனாவிற்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே பால் ஒட்டகங்களைச் சென்றடைந்து, அவற்றின் சிறுநீரையும், பாலையும் பருகிக்கொள்ளுமாறு அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும்
(ஒட்டகங்களை நோக்கி) நடந்தனர். (அவற்றின் சிறுநீரையும், பாலையும் பருகி) அவர்கள் உடல் நலம் தேறியதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகப் பராமரிப்பாளரைக் கொன்றுவிட்டு; ஒட்கங்களை ஓட்டிச் சென்றனர். முற்பகல் வேளையில் இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வரவே அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பிடித்து வர ஒரு) படைப் பிரிவை அனுப்பி வைத்தார்கள். நண்பகல் நேரத்தில் அவர்கள் கொண்டு வரப்பட்டனர். அவர்களுடைய கைகளையும், கால்களையும் துண்டிக்கச் செய்தார்கள். அவர்களுடைய கண்களில் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால் சூடிடப்பட்டது. பிறகு (மதீனா புறநகரான பாறைகள் மிகுந்த) ஹர்ரா பகுதியில் அவர்கள் போடப்பட்டனர். அவர்கள் (நா வறண்டு) தண்ணீர் கேட்டும் அவர்களுக்கு தண்ணீர் புகட்டப்படவில்லை.
அறிவிப்பாளர் : அபூகிலாபா கூறுகின்றார்:
இவர்கள் (பொது மக்களுக்குரிய ஒட்டகங்களைத்) திருடினார்கள்; (ஒட்டகப் பராமரிப்பாளரைக்) கொலை செய்தார்கள்; நம்பிக்கை கொண்ட பின்னர் நிராகரிப்பாளர்களாய் மாறினார்கள்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டனர். (இத்தகைய கொடுங்செயல் புரிந்ததனால்தான் அவர்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை அளிக்க நேர்ந்தது.)
புகாரி 1501 மற்றும் 3018, 4192, 4610, 5658, 5686, 5727, 6802, 6804, 6805
சிறுநீர் அசுத்தமானது என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். 7:157 வசனத்தின் மூலமும் இதை நாம் அறிய முடியும்.
அதை மருத்துவத்துக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருந்தச் சொல்லியுள்ளதில் இருந்து தடை செய்யப்பட்டவைகளை மருத்துவத்துக்காகப் பயன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்கிறோம்.
பெரும்பாலான மருத்துவ முறைகள் தடை செய்யப்பட்ட முறைகளாகத் தான் இருக்கும். அது போல் பெரும்பாலான மருந்துகளும் தடை செய்யப்பட்ட பொருள்களாகவே இருக்கும். இது சாதாரண உண்மையாகும்.
ஒருவரின் வயிற்றை அல்லது உடலின் ஒரு பகுதியை அறுப்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது தான். ஒருவரின் உடலில் ஊசியால் குத்துவதும் தடுக்கப்பட்டது தான். ஒருவரை வேதனைப்படுத்துவதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டது தான்.
ஆனாலும் மருத்துவம் என்று வரும்போது ஆபரேசனுக்காக உறுப்புகள் அறுக்கப்படுகின்றன. அகற்றப்படுகின்றன. இஞ்ஜக்சன் மூலம் குத்தப்படுகிறது. இவை பொதுவாகத் தடுக்கப்பட்டுள்ளதால் மருத்துவத்தின் போதும் தடுக்கப்பட்டவை என்று கூற முடியாது.
அது போல் பல்வேறு ரசாயனங்கள் மூலம் தான் எல்லா மாத்திரைகளும் தயாரிக்கப்படுகின்றன. அவை அனைத்துமே சாதாரண நிலையில் மனிதனுக்குக் கேடு விளைவிப்பவை தான். சாதாரணமான நேரத்தில் நோய் தீர்க்கும் மாத்திரைகளைச் சாப்பிடுவது நிச்சயம் கேடு விளைவிக்கும். கேடு விளைவிப்பவை ஹராம் என்பதால் மருத்துவத்தின் போது இவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று யாருமே சொன்னதில்லை.
இன்னும் சொல்லப் போனால் உயிர் காக்கும் பல மருந்துகள் விஷத்தில் இருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக அறுவை சிகிச்சையின் போதும் மற்ற நேரங்களிலும் இரத்தம் அதிகம் வெளியேறுவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் விஷத்தில் இருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. சாதாரண நேரத்தில் விஷத்தை உட்கொள்ள அனுமதி இல்லை என்றாலும் மருத்துவம் என்று வரும் போது அது அனுமதிக்கப்பட்டதாகவும் சில நேரங்களில் கட்டாயக் கடமையாகவும் ஆகிவிடுகிறது.
பட்டாடை ஆண்களுக்கு ஹராம் என்ற போதும் மருத்துவ நோக்கத்தில் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் அதை அணிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.
2919 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோருக்கிருந்த சிரங்கு நோயின் காரணத்தால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.
புகாரி 2919, 2920, 5839
இதில் இருந்து நாம் அறிந்து கொள்ளும் சட்டங்கள்
மதுவை அப்படியே மருந்தாகப் பயன்படுத்தக் கூடாது.
அதை மருந்தாக மாற்றி பயன்படுத்தலாம்.
மருந்துடன் மது கலந்து இருந்தாலும் அதைப் பயன்படுத்தலாம்.
மது அல்லாத மற்ற தடை செய்யப்பட்ட பொருள்களில் நிவாரணம் இருப்பது தெரிய வந்தால் அப்படியே அதை மருந்தாகப் பயன்படுத்தலாம்.
அதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகளையும் பயன்படுத்தலாம்
இவை அனைத்தும் நிர்பந்தம் என்ற காரணத்தினால் மருந்துக்காக மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நிர்பந்தம் இல்லாத போது சாதாரணமாக இவற்றையோ, இவை கலந்த பொருளையோ உட்கொள்ள அனுமதி இல்லை.
ஏகத்துவம்