*தொழுகையின் போது ஆடை எவ்வாறு இருக்க வேண்டும்????*
“தொழுகையின் போது ஒரு அளவு, தொழுகைக்கு வெளியே ஒரு அளவு ஆடை அணிய வேண்டும் என்று வேறுபடுத்துவதாக இருந்தால் அதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு (தொடை தெரியும் வகையில்) ஆடை அணிந்து விட்டு தொழுகைக்கு இது பொருந்தாது என்று கூறியிருந்தால் இக்கேள்வி நியாயமாக இருக்கும். அப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏதும் கூறவில்லை. அப்படி வித்தியாசப்படுத்தும் எந்த ஆதாரமும் கிடைக்காத போது இக்கேள்வி அர்த்தமற்றதாகிவிடுகிறது” என்று ஏகத்துவத்தில் குறிப்பிடப்பட்ட விஷயங்களுக்கு பதில் கூறமால்
“நபி (ஸல்) அவர்கள் அரைக்கால் சட்டை அணிந்து முக்கால் தொடையும் தெரிவது மாதிரி தொழுகையில் இமாமாக நின்று தொழுதார்கள் அல்லது தொழுகை நடத்தினார்கள் என்பதற்கு ஒரு சான்றையாவது கொண்டு வர முடியுமா?” என்று கேட்டுள்ளனர்.
ஒரு விஷயத்தைக் கூடாது என்று மறுப்பவர்கள் தான் அதற்குரிய சான்றைக் காட்ட வேண்டும். இந்த அடிப்படையைக் கூட இவர்கள் மறந்து விட்டனர். மேலும் நபியவர்கள் செய்திருந்தால் தான் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று கூறுவது அறியாமையாகும். அவர்கள் அங்கீகரித்து இருந்தாலும் அதுவும் மார்க்கச் சட்டம் தான்.
நபி (ஸல்) அவர்கள் உடும்புக்கறி சாப்பிட்டதில்லை. ஆனால் அதற்கு அங்கீகாரம் தந்துள்ளார்கள். எனவே ஒருவர் உடும்புக்கறி சாப்பிடுவது கூடும் எனக் கூறும் போது நபியவர்கள் சாப்பிட்டதாக ஒரு சான்றையாவது காட்ட முடியுமா? என்று கேட்பது அறியாமையாகும்.
சுபுஹுத் தொழுத பிறகு அதனுடைய முன் சுன்னத்தை நபியவர்கள் தொழுததில்லை. ஆனால் அதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். எனவே முன் சுன்னத் தவறிவிட்டால் சுபுஹுக்குப் பின் அதைத் தொழலாம் என்று ஒருவர் கூறினால் நபியவர்கள் இவ்வாறு செய்ததாக ஒரு சான்றாவது காட்ட முடியுமா? என்று கேட்பதும் அறியாமையாகும்.
நபியவர்கள் செய்யாவிட்டாலும் எதற்கெல்லாம் அனுமதி கொடுத்துள்ளார்களோ அவையெல்லாம் மார்க்கம் தான். கூடாது என்று கூறுபவர்கள் தான் அதற்குரிய தடையைக் காட்ட வேண்டும்.
இவர்களுக்காக சில மேலதிகமான சான்றுகளை எடுத்துக் காட்டுகின்றோம்.
ஸஹாபாக்கள் ஒரு காரியத்தைச் செய்யும் போது, அல்லது நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நபித்தோழர்கள் ஒரு காரியத்தைச் செய்து அதை நபியவர்கள் தடை செய்யவில்லையென்றால் அதை நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்று தான் பொருளாகும். இதை அவர்களும் ஒத்துக் கொண்டுள்ளார்கள். இதை விளங்காமல் முறையாக ஆய்வு செய்யாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற ரீதியில் மறுப்பு எழுதியுள்ளனர்.
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி தொழுத ஸஹாபாக்களில் பெரும் பாலானவர்கள், அரைக்கால் வரை மறைக்கக் கூடிய அளவிற்குக் கூட அவர்களிடம் ஆடை இல்லை என்பதை நாம் ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது விளங்கிக் கொள்ள முடியும்
ஆண்கள் அணிந்த கீழாடை சிறியதாக இருந்த காரணத்தால், சிறுவர்களைப் போல் அவர்கள் தம் கீழாடைகளைப் பிடரிகள் மீது கட்டிக் கொண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுது கொண்டு) இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆதலால்
“பெண்களே! ஆண்கள் (ஸஜ்தாவிலிருந்து) நிமிரும் வரை நீங்கள் உங்களுடைய தலைகளை (சஜ்தாவிலிருந்து) உயர்த்த வேண்டாம்”
என்று (நபியவர்கள் பிறப்பித்த உத்தரவை) ஒருவர் கூறுவார்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் சஅத் (ரலி)
நூல்: முஸ்லிம் 750
நபி (ஸல்) அவர்கள்: “பெண்களே! உங்களில் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பியவர் ஆண்கள் தங்கள் (தலைகளை) உயர்த்தும் வரை தன்னுடைய தலையை உயர்த்த வேண்டாம்” என்று கூறினார்கள்.
ஆண்களுடைய கீழாடை சிறியதாக இருந்ததால் அவர்கள் ஸஜ்தா செய்யும் போது அவர்களின் மறைவிடங்கள் வெளிப்பட்டு விடும் என்ற அச்சமே இதற்குக் காரணமாகும்
அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர்
நூல்: அஹ்மத் 25712
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
திண்ணைத் தோழர்களில் எழுபது நபர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களில் யாருக்குமே மேலாடை இருந்த தில்லை. அவர்களில் சிலரிடம் வேட்டி மட்டும் இருந்தது. (வேறு சிலரிடம்) தங்கள் கழுத்திலிருந்து கட்டிக் கொள்ளத் தக்க ஒரு போர்வை இருந்தது. (அவ்வாறு கட்டிக் கொள்ளும் போது) சிலரது போர்வை கரண்டைக் கால் வரையும் இருக்கும். வேறு சிலரது போர்வை கால்களில் பாதியளவு வரை இருக்கும். தமது மறைவிடங்களை பிறர் பார்த்து விடலாகாது என்பதற்காகத் தம் கைகளால் துணியைச் சேர்த்துப் பிடித்துக் கொள்வார்கள்.
நூல்: புகாரி 442
மேற்கண்ட ஹதீஸ்கள் நபித் தோழர்களில் பலர் தொழுகைகளில் தம்முடைய அரைக்கால் வரை கூட மறைக்காத கீழாடைகளை அணிந்து தொழுதுள்ளனர் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. இப்படிப் பட்ட ஆடைகளை அவர்கள் அணிந்து தொழும் போது தொடையின் சில பகுதிகள் வெளியில் தெரியத் தான் செய்யும். ஆனால் நபியவர்கள் இதனைத் தடை செய்ததாக நாம் எந்தச் சான்றையும் காணவில்லை.
நபித்தோழர்கள் நிர்ப்பந்தத்தின் காரணமாகத் தான் இவ்வாறு செய்தார்கள் என்று கூறி இதை மழுப்பி விட முடியாது.
மேலாடை இல்லாத நேரத்தில் ஒருவர் மேலாடை இல்லாமல் தொழலாம். இது தான் நிர்ப்பந்தமாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் மேலாடை இருக்கும் போது அது இல்லாமல் தொழுவதற்குத் தடை செய்துள்ளனர்.
ஆனால் தொடையைக் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. எனவே ஆதாரம் இல்லாத பட்சத்தில் நிர்ப்பந்தம் என்று கூறுவது தவறாகும்
ஏனென்றால் ஒரு நபித்தோழர் “ஒரு ஆடையில் தொழுவது கூடுமா?” என்று நபியவர்களிடம் வினவுகிறார். ஒரு ஆடை அணிந்து தொழும் போது உடலின் பலபகுதிகள் வெளியில் தெரியும். எனவே அந்த நபித்தோழர் இவ்வாறு வினவுகிறார்.
ஆனால் நபியவர்கள் அவருடைய கேள்விக்கு பதில் கூறாமல் “உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகளா இருக்கிறது?” என்று அவர் அவ்வாறு கேட்டதையே வெறுக்கும் படி பதில் கூறுகிறார்கள். நபியவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி கேட்பதையே வெறுக்கிறார்கள் என்றால் அதில் நமக்குப் பல நன்மைகள் உள்ளது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே நபித்தோழர்கள் அரைகுறை ஆடையுடன் தொழுததை நிர்ப்பந்தம் என்றும் கூற முடியாது. நபியவர்கள் அரை நிர்வாணமாகச் தொழச் சொன்னார்கள் என்று கூறி அதை விகாரமாக்குவதும் கூடாது. அவர்கள் ஒன்றிற்கு அனுமதியளிக்கும் போது அதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடியவன் தான் உண்மையான முஃமின் ஆவான்.
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப் படும் போது “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
(அல்குர்ஆன் 24:51)
எனவே நபி மொழிகளின் அடிப்படையில் ஒரு கருத்தைக் கூறும் போது அதை விகாரப்படுத்திக் கேலி செய்தல் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேலி செய்வது போன்றதாகும். இதைத் தான் இன்றைக்கு உலக அமீர்களும், அவர்களின் புதுக் கூட்டாளிகளும் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் தகிடு தத்தங்களை இவர்களை நம்புகின்ற ஒரு சில கொள்கைவாதிகளும் விரைவில் விளங்கிக் கொள்வார்கள்.
தாங்கள் எதற்குப் பழக்கப்பட்டு விட்டார்களோ அதற்கு மாற்றமாக இறைத் தூதர்கள் கொண்டு வந்ததற்காகத் தான் அன்றைய மக்கள் இறைத்தூதர்களை எதிர்த்தனர். என்பதையும். மனோஇச்சையை மார்க்கமாக்கிக் கொண்டவன் வெற்றி பெறமுடியாது என்பதையும் இவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபித்தோழர்களின் கீழாடை மிகச் சிறியதாக இருந்ததால் சில நேரங்களில் அவசியம் மறைக்க வேண்டிய பகுதிகள் கூட தொழுகையில் வெளிப் பட்டுள்ளது.
அம்ர் பின் ஸலிமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் ஆறு அல்லது ஏழு வயதுடையவனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தி யிருந்தேன். நான் ஸஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டி வந்தது. ஆகவே அந்தப் பகுதி பெண்மணியொருவர் “உங்கள் ஒதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்.
நூல்: புகாரி 4302
பின்புறம் தெரியும் வகையில் தான் அவர்களுடைய ஆடை இருந்துள்ளது. நிச்சயமாக அதனுடைய நீளம் முட்டுக்கால் வரை கூட இருந்திருக்க முடியாது. இப்படிப்பட்ட ஆடையணிந்து தொழும் போது நிச்சயம் தொடையின் சில பகுதிகள் வெளிப்படத் தான் செய்யும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
நபியவர்கள் தொடை திறந்த நிலையில் இருந்துள்ளார்கள் என்பதையும், நபியவர்களின் காலத்தில் அதிகமான நபித்தோழர்கள் தொடைப் பகுதிகள் தெரியும் அளவிற்கு ஆடை அணிந்து தொழுகையில் கலந்துள்ளார்கள் என்ற சான்றுகளின் அடிப்படையிலும் ஆண்களின் தொடைப் பகுதி கட்டாயம் மறைக்கப்பட வேண்டிய உறுப்புகளில் உள்ளதல்ல என்றே நாம் கூறுகிறோம். எனவே ஒருவர் தன்னுடைய தொடை தெரியும் வகையில் தொழுதால் அதனைக் குறை கூற முடியாதென்றும் நாம் கூறுகிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது தொடை திறந்திருந்ததாக வரக் கூடிய செய்திகள் தொழுகையைக் குறிக்கவில்லை என இவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் தொடையை மறைக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் வலுவான ஆதாரமாகக் காட்டக் கூடிய அந்தப் பலவீனமான ஹதீஸ்களிலும் கூட நபி (ஸல்) தொழுகையில் மறைக்க வேண்டும் என்று கூறியதாக வரவில்லை. இதை வசதியாக மறைத்து விட்டனர். பலவீனமான ஹதீஸ்கள் என்று தெளிவாகத் தெரிந்த பின்பும் அதனை ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ளார்கள் என்றால் இவர்கள் தங்களின் பொய்யான வாதங்களை நிலை நாட்ட எப்படிப்பட்ட நிலைக்கும் செல்வார்கள் என்பதைத் தான் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
அவர்கள் காட்டும் பலவீனமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஒருவன் தொப்புளிலிருந்து முட்டுக்கால்கள் வரை மறைத்தவனாக மட்டும் தொழுதால் அது அரை நிர்வாணம் இல்லையா?
இவ்வாறு யாராவது மக்கள் மத்தியில் நடமாடுவார்களா?
இவ்வாறு மற்ற மனிதர்களின் முன்னே நிற்பதையே மானக்கேடானதாகக் கருதும் போது படைத்த அல்லாஹ்வின் முன் இப்படி நிற்பதை அல்லாஹ் விரும்புவானா என்பதை ஒவ்வொரு அறிவுடையவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இப்படி முக்கால் நிர்வாணமாக பள்ளிவாசலுக்குள் செல்வது அலங்காரமாகும்? அலங்கோலமாகுமா?
இப்படி ஆடை அணிந்து தொழுவது அல்லாஹ்வை அவமரியாதை செய்வதாக, அவனைக் கேவலப்படுத்துவதாக அவனுடைய கட்டளைக்கு மாறுசெய்வதாக ஆகாதா? என்றெல்லாம் நாமும் உங்களைப் போல் அந்த வசனங்களைக் காட்டி நீங்கள் கொடுத்த அந்த ஆதாரமில்லாத ஃபத்வாவிற்கு பல கேள்விகளைக் கேட்க முடியும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே தங்களுடைய தொடையை வெளிப்படுத்தியிருக்கும் போது நிச்சயமாக அது கண்டிப்பாக மறைக்க வேண்டிய பகுதி இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இது தொழுகைக்கு பொருந்தாது என்று கூறும் ஆய்வாளர்கள் (?) தான் அதற்குரிய சான்றைக் காட்ட வேண்டும். அவர்களால் அப்படி காட்ட முடியாத பட்சத்தில் அவர்கள் தான் பொய்யர்கள் என்பதை அவரை உலக அமீராக(?) ஏற்றுக் கொண்டுள்ளவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் இருக்கும் போது தனது தொடையை மூடாத நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்கள் வரும் போது மூடியதாகவும், உஸ்மான் (ரலி) அதிகம் வெட்கப்படுவார்கள் என்பதால் அவ்வாறு செய்ததாகவும் நபி (ஸல்) அவர்கள் விளக்களித்த செய்தியைக் குறிப்பிட்டிருந்தோம்.
இதற்கு மறுப்பளிக்க வந்தவர்கள், அபூபக்ரும் உமரும் ஆரம்ப கால நண்பர்கள் என்பதால் அவர்களுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் தொடை திறந்த நிலையில் இருந்துள்ளனர். உஸ்மான் (ரலி) வந்ததும் மூடியுள்ளதால் இது தொடையை மறைக்க வேண்டும் என்பதைத் தான் காட்டுகின்றது என்ற அற்புதமான (?) ஆய்வை வெளியிட்டுள்ளனர்.
தொடை தெரிவது தடுக்கப்பட்டது என்றால் அதை யார் முன்னிலையிலும் நபி (ஸல்) அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். இவர்களது வாதப்படி தடுக்கப்பட்ட ஒரு காரியத்தை நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்று கூறப் போகின்றார்களா?
இதே ஆய்வின் (?) அடிப்படையில் “நெருங்கிய நண்பர்களுடன் இருக்கும் போது தடுக்கப்பட்ட காரியத்தைச் செய்து கொள்ளலாம்” என்று ஃபத்வா கொடுப்பார்களா?