எட்டாம் நாள் காலை ஃபஜ்ரு தொழுதுவிட்டு குளித்து இஹ்ராம் அணிந்துக் கொண்டு, லுஹரை மினாவில் தொழுவது போன்ற நேரத்தில் புறப்பட்டால் போதுமா? முற்கூட்டியே செல்லவேண்டுமா?
இங்கு சில குழுவினர் 7ஆம் நாள் மாலை இஷாவுக்குப் பின்னர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு மினாவுக்குப் புறப்படுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் 8ஆம் நாள் லுஹர், அஸர், மஃரிப், இஷா மற்றும் மறுநாள் ஃபஜ்ரு ஆகியவற்றை மினாவில் தொழுகிறார்கள். அப்படியானால் 8ஆம் நாளின் ஃபஜ்ரை மக்காவில்தானே தொழுதிருப்பார்கள்? நாம் அந்தக் குழுவினருடன் சேராமல் தனியாகச் செல்ல வாய்ப்பு இல்லாத பட்சத்தில், நாமும் 7ஆம் நாள் மாலை இஷாவுக்குப் பின் அவர்களோடு சேர்ந்து சென்றால் தவறாகுமா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறிச் சென்று (மினாவில்) லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா, ஃபஜ்ர் ஆகிய (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதார்கள். ஃபஜ்ர் தொழுதுவிட்டுச் சூரியன் உதயமாகும் வரை சிறிது நேரம் அங்கேயே தங்கினார்கள்.
(நூல்: முஸ்லிம் 2137)
நபி (ஸல்) அவர்களை இந்த விஷயத்தில் அப்படியே பின்பற்ற வேண்டும். லுஹரை மினாவில் தொழும் வகையில் புறப்பட வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தால் முன் பின்னாகப் புறப்படுவது நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தவறில்லை.