ஹஜ் சம்மந்தப்பட்ட பலவீனமான ஹதீஸ்களின் தொகுப்பு.

நீ ஹாஜியை சந்தித்தால் அவருக்கு ஸலாம் சொல்லி, அவரிடம் முஸாபஹா செய். இன்னும் அவர் தனது வீட்டில் நுழைவதற்கு முன்னால் உனக்காக பாவமன்னிப்பு தேடுவதற்குக் கேட்டுக் கொள். (இவ்வாறு ஒருவர் செய்தால்) அவர் மன்னிக்கப்பட்டவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: அஹ்மத் 5838

இந்த ஹதீஸின் அடிப்படையில் தான் ஹஜ்ஜுக்குச் சென்றவர் தமது வீட்டுக்குள் செல்வதற்கு முன்னர் அவரிடம் முஸாபஹா செய்வதற்குக் கடும் போட்டி நிலவுகின்றது. ஆனால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் ஹாரிசுல் ஹாரிஸிய்யி என்பவர் பலவீனமானவராவார். இவர் எதற்கும் தகுதியற்றவர் என்று யஹ்யா பின் முயீன் கூறுகின்றார்.

இதன் மற்றொரு அறிவிப்பாளரான முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பைளமானி என்பரும் பலவீனமானவராவார். இவர் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்று இமாம் புகாரி கூறுகின்றார். ஆகவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு செயல்பட முடியாது.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே ஹஜ்ஜைக் கடமையாக்குவது எது? என்று வினவினார். அதற்கு நபி ஸல் அவர்கள் கட்டுச்சாதமும் (உணவு) வாகனமும் ஆகும் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் இப்னு உமர் ரலி

இந்தச் செய்தி திர்மிதி741, தாரகுத்னீ இப்னுமாஜா 2887 முஸன்னப் இப்னு அபீஷைபா 15946, பைஹகீ 8892 உள்ளிட்ட இன்னும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் இது பலவீனமான செய்தியாகும். மேற்கண்ட ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்கள் அதன் கீழே இக்கருத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இதில் இடம்பெறும் இப்றாஹீம் பின் யஸீத் என்பவரை அறிஞர்கள் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர்.

எனவே உணவும் வாகனமும் ஹஜ்ஜைக் கடமையாக்கி விடும் என நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்தி எதுவுமில்லை.

இக்கருத்து சரியா?

உணவும் வாகனமும் ஹஜ்ஜைக் கடமையாக்கி விடும் என்று நபிகள் நாயகம் கூறியதாக உள்ள செய்தி அறிவிப்பின் அடிப்படையில் பலவீனம் அடைவதைப் போன்று கருத்தை கவனிக்கும் போதும் அது தவறான செய்தி என்பது விளங்கி விடுகிறது.

ஏனெனில் ஹஜ் யாருக்கு கடமை என்பதை குர்ஆன் விளக்கும் போது பின்வருமாறு கூறுகின்றது.

அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

(திருக்குர்ஆன் 3:97)

சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்கு ஹஜ் கடமை எனும் இறைவார்த்தையிலிருந்து உணவும் வாகனமும் இருந்து விட்டால் மட்டும் ஹஜ் கடமை என்றாகி விடாது. மாறாக சென்று வர உடல் ஒத்துழைப்பதும் – ஆரோக்கியமாக இருப்பதும் அவசியம் என்பதை அறியலாம்.

நபித்தோழர்களில் ஒருவர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து ஹஜ்ஜூக்கு முன் உம்ரா செய்வதை நபிகள் நாயகம் தடுத்துள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த நோயின் போது இதை நான் நபி (ஸல்) அவர்களிடம் செவியுற்றேன் என்று கூறினார்.

அறிவிப்பவர் : ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்)

இந்தச் செய்தி அபூதாவூத் 1528, பைஹகீ 8868 ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது முழுக்க பலவீனமான செய்தியாகும். ஏனெனில் இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் பின் காசிம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது நம்பகத்தன்மை அறியப்படவில்லை. இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் இவரை நம்பகமானவர் என்று சான்றளிக்கவில்லை. நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாதவர்களையும் நம்பகமானவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் சான்றளித்து விடுவதால் தனித்த நிலையில் இவரது சான்றிதழ் ஏற்கப்படாது என்பது ஹதீஸ் கலை அறிஞர்கள் அறிந்த விஷயமாகும்.

எனவே இதனடிப்படையில் இந்தச் செய்தி பலவீனமடைகிறது.

மற்றொரு கருத்து சரியா?

ஹஜ் செய்யாமல் உம்ரா செய்யக் கூடாது என்றால் மக்காவின் அருகே வசிக்கும் அதிகமானோர் தாங்கள் விரும்பிய நேரத்தில் உம்ரா செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தும் ஹஜ் செய்யவில்லை என்ற காரணத்தினால் உம்ரா செய்ய இயலாமல் போகும் நிலையை இந்த பலவீனமான ஹதீஸ் ஏற்படுத்தி விடுகிறது.

மேலும் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜூக்கு முன்பு உம்ரா செய்துள்ளார்கள் என்பதை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் காண்கிறோம். புகாரி 4254, 1774

எனவே ஹஜ்ஜூக்கு முன்பு உம்ரா செய்தல் கூடாது என்பது தவறான செய்தியாகும் என்பது இதிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஹஜ் செய்பவர் கண்டிப்பாக நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்தாக வேண்டும் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடத்தில் பரவலாகக் காணப்படுகிறது.

ஹஜ் செய்பவர் நபியின் கப்ரை ஸியாரத் செய்யாவிடில் வெறுப்பிற்குரியவராக கருதப்படுவார் என்று சில ஹதீஸ்கள் உள்ளன.

ஆனால் இந்தக் கருத்தில் அமைந்த செய்திகள் அனைத்தும் பலவீனமானதாகவே உள்ளன.

அல்லாஹ் ஒவ்வொரு நாளும் கஃபாவில் 120 ரஹ்மத்களை – (அருள்களை) இறக்குகின்றான். அதில் அறுபது ரஹ்மத் தவாஃப் செய்பவர்களுக்கும், நாற்பது ரஹ்மத் தொழுபவர்களுக்கும் இருபது (கஃபாவை) பார்ப்போருக்கும் உரியதாகும் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் ரலி

இந்தச் செய்தி தப்ரானீ 11313 அக்பாரு உஸ்பஹான் 365, 1163 உள்ளிட்ட சில நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் யூசுப் பின் ஃபைள் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பொய்யர் என்று சொல்லுமளவு கடும் விமர்சனத்திற்குரியவர் ஆவார்.

அபூஹாதம் இவரைப் பலவீனமானவர், புறக்கணிக்கப்படுவதற்கு ஒப்பானவர் என்று விமர்சித்துள்ளார்.அல்ஜரஹ் வத்தஃதீல் 9 228. ஆகவே இது முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed