கடமையான குளிப்பை நிறைவேற்றும் ஒருவர் தான் குளித்த பிறகு உளூ செய்யாமல் தொழுதுக்கொள்ளலாமா ? அல்லது மீண்டும் புதிய ஒழு செய்ய வேண்டுமா ?

தொழுகைக்காக நாம் தயாராகும் போது குளிப்பு கடமையானவராக இருக்க கூடாது.

அப்படி இருந்தால் உடனே குளித்து தூய்மை ஆகி விட வேண்டும்.

*يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنتُمْ سُكَارَىٰ حَتَّىٰ تَعْلَمُوا مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّىٰ تَغْتَسِلُوا* ۚ

*நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை* *(தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக)* *பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர.*

*திருக்குர்ஆன்  4:43*

அதேநேரத்தில் கடமையான குளிப்பு என்பதை  எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நபிகளார் நமக்கு தெளிவு படுத்தி இருக்கிறார்கள்.

‘நபி(ஸல்) அவர்கள் *கால்களைவிட்டுவிட்டு* *தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள்.* மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது’ என மைமூனா(ரலி) அறிவித்தார்.  

*ஸஹீஹ் புகாரி : 249.*

சில அறிவிப்புகளில் சற்று வேறுபாடாக உள்ளது.

‘நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது *முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள்.* பின்னர் *தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்வார்கள்.* பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்’

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

  *ஸஹீஹ் புகாரி : 248.*

மொத்தத்தில் கடமையான குளிப்பினை செய்யும் முறை :

1. இந்திரியம் பட்ட இடத்தையும் மறை உறுப்பையும் சுத்தமாக கழுவ வேண்டும்.

2. பிறகு கைகளை நன்கு கழுவ வேண்டும்.

3. பிறகு தொழுகைக்கு ஒழு செய்வதை போன்று ஒழு செய்து கொள்ள வேண்டும்.

கால்களை மட்டும் கழுவ கூடாது.

4. பிறகு ஈரக் கையால் தலையை முன்று முறை நன்கு கொதிக்கொள்ளவும்.

தலையின் அடிப்பாகம் நினையும் வரை.

5. பிறகு வலது புறமாக தண்ணீரை ஊற்ற ஆரம்பித்து குளிக்க தொடங்க வேண்டும்

6. குளித்து முடித்து உடன் சிறிது தள்ளி நின்று கால்களை கழுவ வேண்டும்.

இப்பொழுது கேள்விக்கு வருவோம்.

இந்த குளிப்பை முடித்து விட்டு அப்படியே தொழுகைக்கு வந்து கலந்து கொள்ளலாமா ? என்றால் தாராளமாக செய்து கொள்ளலாம்.

இதற்கு நேரடியாக நபிகளார் சொன்னதற்கு எந்த சான்றும் இல்லை என்றாலும் கூட நபிகளாரின் செயலினை வைத்து நாம் அதனை புரிந்து கொள்ளலாம்.

*ஆதாரம் : 1*

குளிப்பு கடமையானவர்கள் குளித்து கொள்வதே அதன் கடமை.

அல்லாஹ் கூறுகிறான் *குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை* *(தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்)* குளிப்பது மட்டுமே அதன் கடமை என்பது இதிலிருந்து புலப்படுகிறது. எனவே *கால்களை விட்டு விட்டு* *தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள்* *பிறகு காலை கழுவுவர்கள்* என்பது நபியின் வழி முறை என்பதுடன் அதுவே தொழுகைக்கு போதுமான ஒன்றாக அமைகிறது.

*ஆதாரம் : 2*

நபிகளார் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் ஒன்றே நமது கேள்வியை தெளிவுபடுத்த போதுமான மற்றொரு சான்றாக அமைகிறது.

*அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் :*

‘தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. வரிசைகள் சரி செய்யப்பட்டன.

நபி(ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள்.

தொழுகைக்காக அவர்களின் இடத்தில் போய் நின்றதும் *குளிப்பு கடமையானது நினைவிற்கு வந்ததால்* எங்களைப் பார்த்து ‘உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள்’ என்று கூறிவிட்டு (வீட்டிற்குள்) சென்றார்கள்.

பின்னர், அவர்கள் *குளித்துவிட்டுத் தலையிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட வந்தார்கள்.*

தக்பீர் சொல்லித் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் தொழுதோம்’

   *ஸஹீஹ் புகாரி : 275.*

குளிக்க சென்ற நபர் குளித்த நிலையில் வந்து தொழுகையை நிறைவேற்றி இருப்பதில் இருந்ததே குளிப்பில் செய்யும் ஒழுவே தொழுகைக்கும் போதுமான  ஒன்று தான் என்பது  விளங்குகிறது.

இன்னும் சொல்ல போனால் ஒழு என்பது எப்பொழுது முறியும் என்பதை நபிகளார் கூறுகிறார்கள்.

*’சிறு தொடக்கு ஏற்பட்டவன் உளூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது’* என்று நபி(ஸல்) கூறினார்கள்

என அபுஹுரைரா(ரலி) கூறியபோது,

ஹள்ர மவ்த் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் ‘அபூ ஹுரைராவே! சிறு தொடக்கு என்பது என்ன? என்று கேட்டதற்கு அவர்கள்சப்தத்துடனோ சப்தமின்றியோ காற்றுப் பிரிவது’ என்றார்கள்’

இதனை ஹம்மாம் இப்னு முனப்பஹ் அறிவித்தார்.

    *ஸஹீஹ் புகாரி : 135.*

எனவே ஒழு செய்து குளிக்கிறோம் ஒழு நமக்கு முறியாத வரை நாம் மீண்டும் ஒழு செய்து கொள்வது கடமையோ, அவசியமோ இல்லை என்பது இந்த நபி மொழியில் இருந்து புலப்படுகிறது.

ஆகவே மீண்டும் ஒழுவை விரும்பி செய்தல் என்பது அனுமதிக்கப்பட்டுள்ளது தவிர அவருக்கு அது கடமை அல்ல

அதே நேரத்தில் இந்த ஒழுவை முறிக்கும் ஒரு காரியம் குளிக்கும் போது நிகழ்த்து விட்டால் அவரது குளிப்பை அவர் பரிபுரணம் செய்து கொள்ளலாம் ஆனால் அவர் தொழுகைக்கு தயாராகும் போது கட்டாயம் ஒழு செய்து கொள்ள வேண்டும்.

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

0 thoughts on “கடமையான குளிப்பை நிறைவேற்றும் ஒருவர் தான் குளித்த பிறகு உளூ செய்யாமல் தொழுதுக்கொள்ளலாமா ? அல்லது மீண்டும் புதிய ஒழு செய்ய வேண்டுமா ?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed