ஆஷுரா தரும் படிப்பினைகள்
அல்லாஹ்வின் அருளால் ஹிஜ்ரி 1438ஆம் ஆண்டு நிறைவடைந்து, 1439ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம்.
ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கின் முதல் மாதமான முஹர்ரம் மாதம் அல்லாஹ்வினால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றாகும். இந்த மாதத்தின் பிறை 10 அன்று நோற்கப்படும் நோன்புக்கு ஆஷுரா நோன்பு எனப்படும்.
ஆஷுரா நோன்பு
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
ரமளான் நோன்பு கடமையாக்கப்படுதவற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் 10ஆம் நாளில்) நோன்பு நோற்றுவந்தார்கள். அதுதான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, “யார் (ஆஷூராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் அதை நோற்றுக்கொள்ளட்டும்! யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ அவர் அதை விட்டுவிடட்டும்!’’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 1592
கடமையான ரமலான் மாதத்தின் நோன்பு அல்லாத ஏராளமான சுன்னத்தான நோன்புகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவற்றில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் அதிகம் முக்கயத்துவம் கொடுக்கப்பட்ட நோன்பு ஆஷுரா நோன்பாகும்.
ஆஷுரா எனும் இந்த நாளையும், (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 2006
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவராலும் நோற்கப்படும் நோன்பாக இந்த நோன்பு இருந்தது.
நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தின் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, “யார் நோன்பு நோற்காதவராக காலைப்பொழுதை அடைந்து விட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவுசெய்து கொள்ளட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப்பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்” என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்கவைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும் போது நோன்பு முடியும் நேரம்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.
அறிவிப்பவர்: ருபைய்யிவு பின்த் முஅவ்வித்(ரலி)
நூல்: புகாரி 1960
ஆஷுரா நோன்பின் சிறப்பு
கடந்த ஓராண்டு காலமாக நாம் செய்து வந்த பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகிறது.
‘‘முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸீன் சுருக்கம்)
இதை அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறவிக்கிறார்கள்
நூல்: முஸ்லிம் 2151
ஆஷுரா நோன்பிற்கான காரணம்
ஹஜ் பெருநாளும் அன்று கொடுக்கப்படும் குர்பானியும் இப்ராஹிம் நபியின் தியாகத்தையும் வரலாற்றையும் நினைவுகூரும் விதமாக அமைந்திருப்பதைப் போன்று ஆஷுரா நாளும் அன்று நோற்கப்படும் நோன்பிற்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூராவுடைய (முஹர்ரம் 10 ஆவது) நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். யூதர்கள், (அந்த நாளைப் பற்றி) “இது மாபெரும் நாள் என்றும், மூசா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்’’ என்றும் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவர்களை விட மூசாவுக்கு நான் மிக நெருக்கமானவன்’’ என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள்.
நூல்: புகாரி 3397
மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் ஃபிர்அவ்னிடமிருந்து இறைவனால் காப்பாற்றப்பட்ட நாளே இந்த ஆஷுரா நோன்பிற்கான காரணம் என்பது மேற்கண்ட செய்தியிலிருந்து தெளிவாகிறது.
வரலாற்றுப் பின்னணி தரும் போதனை
“என் அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நீங்கள் (எதிரிகளால்) பின் தொடரப்படுவீர்கள்’’ என்று மூஸாவுக்கு அறிவித்தோம். ஆள் திரட்டுவோரைப் பல நகரங்களுக்கும் ஃபிர்அவ்ன் அனுப்பினான். ‘அவர்கள் சிறிய கூட்டத்தினரே. அவர்கள் நமக்குக் கோபத்தை ஏற்படுத்துகின்றனர். நாம் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியவர்கள்’ (என்று ஃபிர்அவ்ன் கூறினான்)
தோட்டங்கள், நீரூற்றுகள், பொக்கிஷங்கள், மற்றும் மதிப்புமிக்க தங்குமிடங்களை விட்டும் அவர்களை வெளியேற்றினோம். இப்படித் தான் இஸ்ராயீலின் மக்களை அவற்றுக்கு வாரிசுகளாக்கினோம்.
காலையில் (ஃபிர்அவ்ன் கூட்டத்தினர்) அவர்களைப் பின் தொடர்ந்தனர். இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது ‘நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்’ என்று மூஸாவின் சகாக்கள் கூறினர்.
அல்குர்ஆன் 26: 52 – 61
மூஸா நபியவர்களையும், அவர்களின் சமுதாயத் தாரையும் சர்வாதிகாரியான கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் விரட்டி வருகிறான்.
ஒரு கட்டத்தில் விரட்டப்பட்டு வந்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னால் கடல் குறுக்கிடுகிறது.
முன்னால் கடல்! பின்னால் ஃபிர்அவ்னின் படை! இருபுறத்தில் எந்தப் பக்கம் சென்றாலும் மரணம் நிச்சயம் என்ற தருணம் ஒரு புறம்.
இந்த இக்கட்டான சூழலில் மூஸா நபியவர்களை நம்பிக்கை கொண்டிருந்த மக்கள், “நாம் ஃபிர்அவ்னால் பிடிக்கப்பட்டு விடுவோம்” என்று கவலையுற்றார்கள்.
இத்தனையையும் எதிர்நோக்கிய மூஸா நபியவர்களின் மனோ நிலை எவ்வாறு இருந்தது? இறைவன் கொடுத்த பரிசு என்ன? என்ற வினாக்களின் விடையே ஆஷுரா தினம் நமக்குத் தரும் முதல் படிப்பினையாகும்.
மூஸா நபியின் மனோ நிலை
மூஸா நபியின் மக்கள் நாம் ஃபிர்அவ்னால் பிடிப்பட்டுவிடுவோம் என்று நிராசை அடைந்து கொண்டிருக்கும் வேளையில் மூஸா (அலை) அவர்களின் பதில் இதோ…
“அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்’’ என்று அவர் கூறினார். “உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக’’ என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம்.. மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம். இதில் தக்க சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 26: 62 – 68
எத்திசையில் சென்றாலும் மரணம், எந்த மனிதனாலும் காப்பாற்ற முடியாது என்பதை மேற்கண்ட நெருக்கடி உணர்த்துகிறது.
அந்த மனோ நிலையில்தான் மக்கள் அனைவரும் நிராசை கொண்டனர்.
ஆனால், மூஸா நபியவர்களின் மன நிலையோ ஈமானிய அமுதம் சுரந்ததாக இருந்தது. புயல் அடித்தும் கம்பீரமாய் நிற்கும் ஆலமரமாய் இருந்தது அவர்களின் ஈமான்.
மரணம் நிச்சயம் என்று மனிதர்கள் கைவிட்டாலும் எல்லாவற்றுக்கும் மேலான இறைவன் இருக்கின்றான்; அவனை மீறி அணுவும் அசையாது; அவன் உதவிக்கரம் நீட்டுவான் என்ற உறுதியான நம்பிக்கையை அல்லாஹ்வின் மீது வைத்தார்கள்.
அந்த நம்பிக்கைக்குப் பரிசாக கடலை இரு கூறுகளாக இறைவன் பிளந்தான். தன்னைத் தானே உயர்ந்த கடவுள் என்று கூறிக் கொண்டிருந்த ஃபிர்அவ்னும், அவனது சகாக்களும் பிளவுக்குள்ளும் விரட்டி வருகின்றனர். உண்மை மார்க்கத்தில் இருந்த மூஸா நபியவர்களும், அவர்களது தோழர்களும் காப்பாற்றப்படுகின்றனர்.
கடல் பழைய நிலைக்குத் திரும்புகிறது. பிளவில் வந்து கொண்டிருந்த ஃபிர்அவ்னும், அவனது படையும் மூழ்கடிக்கப்படுகின்றனர்.
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டுவிட்டோம் என்று வாயளவில் சொல்வது உண்மையான ஈமான் கிடையாது. எந்த ஒரு தருணத்திலும், உலகமே எதிர்த்தாலும், எத்தகைய கஷ்டம் பீடித்தாலும் ‘அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான்; அவன் என்னைக் காப்பாற்றுவான்’ என்று உறுதியான நம்பிக்கை வைப்பதே உண்மையான ஈமான். அந்த உறுதியான ஈமானே சுவனத்திற்கான பாதை.
“மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!’’ என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்’’ என்று அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் 3:173
“எங்கள் இறைவன் அல்லாஹ்வே’’ என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி “அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் குறித்து மகிழ்ச்சியடையுங்கள்!’’ எனக் கூறுவார்கள்.
இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர்.
அல்குர்ஆன் 41:30-32
எங்கள் இறைவன் அல்லாஹ்வே எனக் கூறி பின்னர் உறுதியாகவும் நின்றோருக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குக் கூலி.
அல்குர்ஆன் 46:13, 14
உறுதியற்ற, சோதனைகள் வந்ததும் நிராசை அடையும் நம்பிக்கை மறுமையில் நஷ்டத்தையே பரிசளிக்கும்.
விளிம்பில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் அதில் நிம்மதியடைகிறான். அவனுக்குச் சோதனை ஏற்பட்டால் தலைகீழாக மாறி விடுகிறான். இவ்வுலகிலும், மறுமையிலும் அவன் இழப்பை அடைந்து விட்டான். இதுவே தெளிவான இழப்பு.
அல்குர்ஆன் 22:11
மூஸா நபியவர்களின் ஈமான் எப்படி உறுதியான ஈமானாக இருந்ததோ அதுபோன்று நம்முடைய ஈமானையும் பலம் பொருந்தியதாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
குடும்பம், வியாபாரம், வறுமை, நோய், இழப்பு போன்ற நம் ஈமானை பரீட்சித்துப் பார்க்கின்ற சோதனைகளை இறைவன் கொடுக்கும் போது அதில் மனம் தளராமல் உறுதியுடன் இருந்தால் இறை உதவி நம் கஷ்டங்களை நீக்கிவிடும்.
நன்றி மறப்பது நன்றன்று
உலகமே கைவிட்ட போது உலகத்தின் நாயன் அல்லாஹ், மூஸா நபியவர்களையும் அவர்களது சாராரையும் காப்பாற்றி அருள் புரிந்ததற்கு நன்றி செலுத்தும் விதமாகத்தான் இந்த ஆஷுரா நோன்பை மூஸா நபியவர்கள் நோற்று வந்தார்கள்.
அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வழிகாட்டியுள்ளார்கள்.
இறைவன் புரிகின்ற அருளுக்கு நன்றி செலுத்துவது தான் இறைநம்பிக்கையாளர்கள் செய்ய வேண்டிய மிகப்பெரிய கடமை.
எனவே என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!
அல்குர்ஆன் 2:152
உமது இறைவன் மனிதர்கள் மீது அருளுடையவன்; எனினும் அவர்களில் அதிகமானோர் நன்றி செலுத்துவதில்லை.
அல்குர்ஆன் 27:73
அல்லாஹ்வின் அருளின் காரணத்தினால் இவ்வுலகில் நம் வாழ்க்கைப் பயணம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால், நம்மில் எத்தனை பேர் அதற்குச் சரியான முறையில் நன்றி செலுத்துகிறோம்?
நன்றி செலுத்தும் வகையில் நம்முடைய வணக்க வழிபாடுகளைச் சரியான முறையில், தவறவிடாமல் அல்லாஹ்விற்கு உரித்தாக்குபவர்கள் நம்மில் எத்தனை பேர்?
அருள்மழை பொழிந்து, உதவி புரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்விற்கு நன்றி மறவாமல் இருக்க வேண்டும் என்பது ஆஷுரா நோன்பு தரும் இரண்டாவது படிப்பினையாகும்.
மாறு செய்வதில் மாற்றம் இல்லை
இஸ்லாம் உலகில் தனித்துவமான, மனித குலத்திற்கு ஏற்ற மார்க்கமாகும். எந்தச் சூழலிலும் அசத்திய வழியை ஏற்றுக்கொள்ளாத மார்க்கமாகும். தனது தனித்துவத்தை என்றும் இழக்காத மார்க்கமாகும்.
அதனால்தான் இஸ்லாத்தின் மிக முக்கிய கட்டளைகளில் ஒன்று, பிற மதத்திற்கு ஒப்பாக நடக்கக் கூடாது என்பதாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே!
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அபூதாவூத் 3512
இஸ்லாமியர்களின் அடையாளமாக இருக்கும் தாடி வைத்தல் கூட யூத, கிறித்தவர்களுக்கு மாறு செய்வதற்காகச் சொல்லப்பட்ட கட்டளையே ஆகும்.
இது போன்று யூத கிறித்தவர்களுக்குக் கடுகளவில் கூட ஒப்பு வந்துவிடக்கூடாது என்பதில் இஸ்லாம் தெளிவாக இருக்கும்.
அந்த அடிப்படையில்தான் ஆஷுரா நோன்பும் யூதர்களுக்கு மாறு செய்யும் வகையில் முஹர்ரம் 9 மற்றும் 10 அன்று நோற்கப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளை யூதர்களும் கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே?” என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அடுத்த வருடம் அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்” எனக் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் மரணித்து விட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்கள்: முஸ்லிம் 1916, அபூதாவூத் 2089
அசத்தியத்தில் இருக்கும் யூதர்களே மூஸா நபி காப்பாற்றப்பட்ட நாளில் நோன்பு வைக்கிறார்கள் எனில் சத்தியத்தில் இருக்கும் நாம் தான் அந்த நோன்பை நோற்க அதிகம் தகுதிபடைத்தவர்கள்.
எனினும், இதிலும் கூட ஒப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக நபியவர்கள் செய்த ஏற்பாடே முன்னால் ஒரு நாள் சேர்த்து நோன்பு வைப்பதாகும்.
இப்படி நாம் செய்ய வேண்டிய வணக்க வழிபாடாக இருந்தாலும் கூடப் பிற மதத்திற்கு ஒப்பு வந்துவிடக் கூடாது என்பதில் இஸ்லாம் மிகவும் கண்டிப்பு காட்டுகிறது.
ஆனால், இன்றைக்கு இஸ்லாம் என்ற பெயரில் சில பெயர்தாங்கி முஸ்லிம்கள் திருமண வீடு முதல் மரண வீடு வரை அனைத்திலும் இஸ்லாத்தில் இல்லாத பிறமதக் கலாச்சாரத்தை நுழைப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? அவர்களுக்கு மாறு செய்வதில் எந்தச் சமயத்திலும், எந்தக் காரியத்திலும் மாற்றுக் கருத்தே இல்லை என்பதே ஆஷுரா தினம் தரும் மூன்றாவது பாடமாகும்.
ஆஷுரா தினம் தருகிற இந்தப் படிப்பினைகளை வெறும் ஏட்டளவில் வைத்துவிடாமல் நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.