குர்ஆனில் இறைவன் சொல்வதாக வரும் இடங்களில் எல்லாம் ‘நாம்’ அல்லது ‘நாங்கள்’ என்ற பன்மையான சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இஸ்லாம் பல தெய்வ கொள்கையில் நம்பிக்கை உடையதாக தோன்றுகிதே. இது சரியா?
இஸ்லாம் ஓரிறைக் கொள்கையை அடிப்படையாக கொண்ட மார்க்கம். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை என்கிற கொள்கையில் எந்தவித மாறுபாடும் இன்றி செயல்பட்டு வரக் கூடிய மார்க்கம் இஸ்லாம்.
அல்லாஹ் ஒருவனே. அவனுக்கென்று தனித்தன்மைகள் உண்டு என்ற நம்பிக்கையில் எந்தவித மாற்றமுமில்லை. அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் தன்னைப்பற்றி குறிப்பிடும்பொழுது ‘நாம்’ அல்லது ‘நாங்கள்’ என்கிற வார்த்தையை பயன் படுத்தப்படுகிறது. அவ்வாறு ‘நாம்’ அல்லது ‘நாங்கள்’ என்கிற வார்த்தையை பயன் படுத்துவதால் இஸ்லாம் பல தெய்வக் கொள்கையை உடையது என்கிற வாதம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத வாதமாகும்.
• இரண்டு விதமான பன்மைகள்:
ஒவ்வொரு மொழியிலும் இரண்டு விதமான பன்மைகள் உள்ளன. ஒன்று -எண்ணிக்கையில் அல்லது அளவில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் உண்டெனில் அதனை பன்மை என்பதும், ஒரு மனிதருக்கு அளிக்கக் கூடிய ‘மரியாதைப் பன்மை’ என்றும் இரண்டு வகையான பன்மைகள் உள்ளன.
அ. உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் – இங்கிலாந்து நாட்டின் ராணி தன்னைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ‘I’ என்று குறிப்பிடாமல் ‘We’ என்று குறிப்பிடுவார். இதற்கு ‘மரியாதைப் பன்மை’ (Royal Plural) என்று பெயர்.
ஆ. இறந்து போன இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஹிந்தியில் பேசும் பொழுதெல்லாம் ‘ஹம் தேக்னா சாத்தா ஹை’ – நாம் பார்க்க விரும்புகிறோம்’ என்று உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இங்கும் ‘ஹமே’ என்கிற ஹிந்தி வார்த்தைக்கு ‘நாம்’ என்ற பொருளாகும். ‘ஹமே’ என்கிற ஹிந்தி வார்த்தையை – ஹிந்தி மொழியில் உள்ள மரியாதைப் பன்மைக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
இ. அது போலவே அல்லாஹ், தன்னைப் பற்றி அருள்மறையில் குறிப்பிடும் பொழுது ‘நஹ்னு’ (நாம் அல்லது நாங்கள் என்ற பொருள்) என்னும் அரபி வார்த்தை பயன் படுத்துகின்றான். இந்த வார்த்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்டது என்கிற அர்த்தத்தில் வருகின்ற பன்மை அல்ல. மாறாக மரியாதைப் பன்மைக்கு பயன்படுத்தக் கூடிய வார்த்தை.
ஏகத்துவம் அல்லது ஓரிறைக் கொள்கை என்பது இஸ்லாத்தின் அடிப்படை தூண்களில் ஒன்று. அல்லாஹ் ஒருவனே இருக்கின்றான். அவனது தன்மைகள் தனித்தவை. தனித்தன்மை வாய்ந்தவை என்கிற வசனங்கள் அருள்மறை குர்ஆனில் பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் நூற்றுப் பன்னிரெண்டு ஸுரத்துல் இக்லாஸின் முதல் வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது.
‘(நபியே!) நீர் கூறுவீராக!. அல்லாஹ் – அவன் ஒருவனே.!’
(அல்குர்ஆன் 112:1)
மேற்கண்ட அருள்மறையின் வசனத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கம் ஓரிறைக் கொள்கைக்கு உரிய மார்க்கம் என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்