ஹிஜ்ரி ஆண்டு எப்போது ஆரம்பம் ஆனது?
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தார்களா?
ஹிஜ்ரி ஆண்டை இஸ்லாமிய ஆண்டு என்று கூறப்பட்டாலும் திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலோ இதற்கு ஆதாரம் இல்லை.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
திருக்குர்ஆன் 5:3
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் கூறுகின்றான்.
மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்றால் என்ன பொருள்?
அல்லாஹ்வே முழுமைப்படுத்தி விட்டான் என்று கூறினால் அதற்கு என்ன பொருள்?
‘மார்க்கத்தில் எவையெல்லாம் உள்ளனவோ அவை ஒவ்வொன்றையும் நான் கூறி விட்டேன்; புதிதாக எதையும் உருவாக்கிட அவசியமில்லை; அது கூடாது’ என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது.
இஸ்லாம் மார்க்கம் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறைகள் மட்டும் தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தோடு இஸ்லாத்தின் அனைத்து விஷயங்களும் முழுமைப்படுத்தப்பட்டு விட்டன. அவர்களின் மரணத்திற்குப் பிறகு உண்டாக்கப்பட்டவை எதுவாக இருந்தாலும் யாரால் உருவாக்கப்பட்டு இருந்தாலும், எத்தனை ஆண்டுகள் அது அமுலில் இருந்தாலும் அதற்கு இஸ்லாமிய முத்திரை குத்தக் கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்டவைகளை மார்க்கத்தின் அம்சமாக கருதினால் அது ஈமானைப் பாதிக்கும் விஷமாகி விடும்.
அதாவது இவ்வளவு நல்ல விஷயத்தை அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித் தராமல் குறை வைத்து விட்டனர் என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் தெரியாததை நாம் கண்டு பிடித்து விட்டோம் என்ற கருத்தும் இதனுள் அடங்கி உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் உங்களை வெண்மையான வழியில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.
அறிவிப்பவர் : இர்பாள் பின் ஸாரியா (ரலி)
நூல் : அஹ்மத் 16519
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆன்மிகத் தலைவராக மட்டுமின்றி இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாகவும் இருந்தார்கள்.
நிர்வாகம் செய்வதற்கு ஆண்டுக் கணக்கு அவசியமாக இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஆண்டு என்ற பெயரில் ஒரு புது ஆண்டை உருவாக்கவில்லை. ஹிஜ்ரி ஆண்டு என்று இப்போது நடைமுறையில் உள்ள ஆண்டையும் அவர்கள் உருவாக்கவில்லை.
நான் ஹிஜ்ரத் செய்ததில் இருந்து ஆண்டுகளை எண்ணிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் நபித்தோழர்கள் யானை ஆண்டு என்பதைத் தான் பயன்படுத்தி வந்தனர்.
ஆப்ரஹா என்ற மன்னன் காபாவை அழிக்க யானைப் படையுடன் வந்த போது அவனும், அவனது யானைப் படையும் அழித்து ஒழிக்கப்பட்ட ஆண்டைத் தான் யானை ஆண்டு என்று அரபுகள் குறிப்பிட்டு வந்தனர்.
யானை ஆண்டுக்கு முன் – யானை ஆண்டுக்குப் பின் என்று தான் நிகழ்ச்சிகளை அரபுகள் குறிப்பிட்டு வந்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யானை ஆண்டில் பிறந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள்.
பஸ்ஸார், ஹாகிம் ஆகிய நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
யானை ஆண்டு என்பது அன்றைய மக்களிடம் வழக்கத்தில் இருந்தது என்பதற்கு இது போதிய ஆதாரமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்த இந்த ஆண்டையே பின்னரும் தொடர்ந்திருந்தால் அது தான் சரியானதாக இருக்கும்.
யானைப் படையை அழித்து ஒழித்தது அல்லாஹ்வின் பேரற்புதமாக இருந்ததால் அரபுகளின் வழக்கம் என்று அதை ஒதுக்கித் தள்ள வேண்டியதில்லை.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறையில் இருந்ததன் மூலம் அவர்களின் அங்கீகாரத்தையும் அது பெற்றிருந்தது.
அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போதும் ஹிஜ்ரி ஆண்டு என்ற வழக்கம் ஏற்படுத்தப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறையே அவர்களின் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்தது.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்துக்குப் பின் இஸ்லாமிய ஆண்டாக எதை வைத்துக் கொள்ளலாம் என்று உமர் (ரலி) காலத்தில் ஆலோசனை செய்து ஹிஜ்ரத்தை முதல் ஆண்டாக வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
ஹிஜ்ரி பதினேழாம் ஆண்டு உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பில் இருந்து ஆண்டை ஆரம்பிப்பதா?
அல்லது அவர்கள் நபியானது முதல் ஆண்டை ஆரம்பிப்பதா?
அவர்களின் மரணத்தில் இருந்து ஆண்டை ஆரம்பிப்பதா?
அல்லது ஹிஜ்ரத்தில் இருந்து ஆரம்பிப்பதா?
என்று நான்கு கருத்துக்கள் முனவைக்கப்பட்டன. ஹிஜ்ரத்தில் இருந்து ஆரம்பிப்போம் என்று உமர் ரலி அவர்கள் முடிவு செய்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூறாததால் தான் நான்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் சென்ற ஆண்டு முதல் ஆண்டு என்றால் முதல் மாதமாக எதை வைப்பது என்பது குறித்தும் பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
ரஜப் மாதத்தை முதல் மாதமாக வைப்பதா?
ரமலானை முதல் மாதமாக வைப்பதா?
முஹர்ரம் மாதத்தை முதல் மாதமாக வைப்பதா?
என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
முஹர்ரமைத் தான் முதல் மாதமாக வைக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டி இருந்தால் மூன்று கருத்துக்கள் வந்திருக்க முடியாது. முஹர்ரம் மாதம் ஹாஜிகள் ஹஜ்ஜை முடித்து திரும்பும் மாதமாக உள்ளதாலும், அரபுகள் வருடத்தின் துவக்கமாக முஹர்ரமை வைத்து இருந்ததாலும் முஹர்ரமை முதல் மாதமாக ஆக்குங்கள் என்று உஸ்மான் (ரலி) கூறிய கருத்தின்படி முஹர்ரம் முதல் மாதமாக ஆக்கப்பட்டது.
ஹிஜ்ரத் ரபீவுல் அவ்வலில் நடந்திருந்தும் அதை முதல் மாதமாக ஆக்கவில்லை. எட்டு மாதம் தள்ளி முஹர்ரம் மாதத்தை முதல் மாதமாக ஆக்கினார்கள்.
இந்தக் கணக்கின்படி ஹிஜ்ரி 100 ஆம் ஆண்டு என்று சொன்னால் நூறு ஆண்டுகளும் எட்டுமாதங்களும் என்று பொருள். ஹிஜ்ரி பத்து என்றால் பத்து ஆண்டுகளும் எட்டு மாதங்களும் என்று பொருள். ஆண்டுகளைக் கணக்கிட ஹிஜ்ரியைத் தேர்வு செய்வோம் என்று முடிவு செய்யும் போது ரபீவுல் அவ்வலை முதல் மாதமாக ஆக்குவதுதான் பொருத்தமானது.
முஹர்ரம் மாதத்தை முதல் மாதமாக ஆக்கியதால் ஹிஜ்ரத்தின் மாத எண்ணிக்கையைச் சரியாகக் காட்டும் வகையிலும் இது அமையவில்லை.
இது வரலாற்றில் நிர்வாக வசதிக்காகச் செய்த ஏற்பாடு என்ற அடிப்படையில் ஒருவர் இதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை.
இது இஸ்லாமியர் பயன்படுத்த வேண்டிய மார்க்கம் சார்ந்த ஒன்று என யாராவது நினைத்தால் அது முற்றிலும் தவறாகும்.
இஸ்லாம் நபிகள் நாயகத்துடன் முழுமைப்படுத்தப்பட்டு விட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் செய்யப்பட்ட எந்த ஏற்பாட்டையும் மார்க்கச் சடங்கு போல் ஆக்குவது முற்றிலும் தவறாகும்.
இதற்காக வாழ்த்துச் சொல்லிக் கொள்வதும், விழாக் கொண்டாடுவதும், அதைப் பண்டிகை போல் கொண்டாடுவதும் இஸ்லாத்தின் அடிப்படையில் இருந்து விலகிச் செல்வதாக ஆகிவிடும்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் வஹீ கிடையாது. வஹீயின் அடிப்படையில் இல்லாத எந்த ஒன்றும் மார்க்கமாக ஆகாது.
அறியாமைக் கால மக்கள் பயன்படுத்தி வந்த ஆண்டை நபித்தோழர்கள் பயன்படுத்தியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்காததால் கணக்கிடுவதற்கு மற்றவர்கள் பயன்படுத்தும் ஆண்டை நாமும் எடுத்துக் கொண்டால் மார்க்கத்தில் தவறு இல்லை.
தற்போது ஆங்கில ஆண்டை அதிகமான மக்கள் பயன்படுத்துகிறார்கள். இது தவறு என்பது போலவும், ஹிஜ்ரி அடிப்படையில் தான் ஆண்டைக் குறிப்பிட வேண்டும் எனவும் சிலர் கருத்துக்களைப் பதிவு செய்கின்றனர்.
ஹிஜ்ரி ஆண்டு என்பதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ ஏற்படுத்தி இருந்தால் தான் இப்படி வாதிட முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து பல ஆண்டுகளுக்குப் பின் உருவாக்கப்பட்டதை மார்க்கக் கடமை என்று ஆக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.
ஊழியர்களுக்குச் சம்பளம் போடவும், இன்ன பிற உலக நடப்புகளுக்காகவும் ஆங்கில ஆண்டைப் பயன்படுத்துவதில் எந்த உறுத்தலும் தேவை இல்லை.
நோன்பு, இத்தா, உள்ளிட்ட மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பிறையை அடிப்படையாகக் கொண்ட மாதங்களையே பயன்படுத்த வேண்டும். இதற்கு மட்டும் நபிவழியில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன