ஹிஜ்ரி ஆண்டு உண்டா?
இவ்வசனங்களில் (2:218, 3:195, 4:89, 4:97, 4:100, 8:72, 8:74, 9:20, 9:100, 9:117, 16:41, 16:110, 22:58, 24:22, 29:26, 33:7, 33:50, 59:8, 59:9, 60:10) ஹிஜ்ரத் செய்தல் பற்றி கூறப்படுகின்றது.
ஹிஜ்ரத் என்ற சொல்லுக்கு வெறுத்தல், ஒதுக்குதல், விலகிக் கொள்ளுதல் எனப் பொருள் உண்டு. இஸ்லாமிய வழக்கில் ஹிஜ்ரத் என்பது குறிப்பிட்ட தியாகத்தைக் குறிக்கும் சொல்லாகும்.
இஸ்லாம் மார்க்கத்தின்படி வாழமுடியாத நிலை ஏற்பட்டால், கொண்ட கொள்கையைக் காத்துக் கொள்வதற்காக பிறந்த மண், சொத்து சுகம், சுற்றம், நட்பு அனைத்தையும் துறந்து இஸ்லாத்தைக் கடைப்பிடித்து ஒழுகுவதற்கு ஏற்ற இடத்துக்குச் செல்வதுதான் ஹிஜ்ரத் எனப்படும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்றதில் இருந்து ஹிஜ்ரி ஆண்டு ஆரம்பமாகிறது.
ஹிஜ்ரி ஆண்டு என்பது இஸ்லாமிய ஆண்டு என்று கூறப்பட்டாலும் குர்ஆனிலோ, ஹதீஸிலோ இதற்குச் சான்று இல்லை.
நான் ஹிஜ்ரத் செய்ததில் இருந்து ஆண்டுகளை எண்ணிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் நபித்தோழர்கள் யானை ஆண்டு என்பதைத்தான் பயன்படுத்தி வந்தனர்.
ஆப்ரஹா என்ற மன்னன் கஅபாவை அழிக்க யானைப் படையுடன் வந்தபோது அவனும், அவனது யானைப்படையும் அழித்து ஒழிக்கப்பட்ட ஆண்டைத்தான் யானை ஆண்டு என்று அரபுகள் பயன்படுத்தி வந்தனர். யானை ஆண்டுக்கு முன் – யானை ஆண்டுக்குப் பின் – என்று தான் நிகழ்ச்சிகளை அரபுகள் குறிப்பிட்டு வந்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யானை ஆண்டில் பிறந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள். (ஹாகிம், பஸ்ஸார்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்த இந்த ஆண்டையே பின்னரும் தொடர்ந்திருந்தால் அது தான் சரியானதாக இருந்திருக்கும்.
அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாகி வஹீ வர ஆரம்பித்த நாள் ஆயிரம் மாதத்தை விட சிறந்தது என்று திருக்குர்ஆன் கூறுவதால் – அன்றுதான் இஸ்லாம் உலகுக்கு கிடைத்த நாள் என்பதால் – அதையே இஸ்லாமிய ஆண்டின் துவக்கமாகக் கொண்டிருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும்.
இஸ்லாமிய ஆண்டாக எதை வைத்துக் கொள்ளலாம் என்று உமர் (ரலி) காலத்தில் ஆய்வு செய்து, ஆலோசித்து ஹிஜ்ரத்தை முதல் ஆண்டாக வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
நிர்வாக வசதிக்காகச் செய்த ஏற்பாடு என்ற அடிப்படையில் ஒருவர் இதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை.
இஸ்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் முழுமைப்படுத்தப்பட்டு விட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப்பின் செய்யப்பட்ட எந்த ஏற்பாட்டையும் மார்க்கச் சடங்கு போல் ஆக்குவது முற்றிலும் தவறாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் வஹீ கிடையாது. வஹீயின் அடிப்படையில் இல்லாத எந்த ஒன்றும் மார்க்கமாக ஆகாது. எனவே ஹிஜ்ரி ஆண்டு என்பதைத் தான் முஸ்லிம்கள் பயன்படுத்த வேண்டும் என வாதிடுவது அறியாமையாகும்.