*இமாம்களின் வாழ்க்கைக் குறிப்பு* – 01

\\*ஹாபிழ் இப்னு ஹஜர்\\*

ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் ஹதீஸ் துறையில் மறக்க முடியாத மாபெரும் அறிஞர்; மாமேதை.

ஹதீஸ் எனும் சமுத்திரத்தில் காலமெல்லாம் முத்துக்குளித்து அடுக்கடுக்கான ஆய்வு முத்துக்களை அகிலத்திற்கு அளித்த அரும்பெரும் ஆற்றல் ஞானி.

ஸஹீஹுல் புகாரிக்குப் பல்வேறு அறிஞர்கள் விரிவுரை எழுதியுள்ளார்கள். ஆனால் இவர்கள் எழுதிய *ஃபத்ஹுல் பாரி* என்ற விரிவுரை தலைசிறந்த விரிவுரையாகும்.

இந்த விரிவுரை அவரது அறிவின் ஆழத்தையும், கடின உழைப்பையும் எடுத்துரைக்கும்.

கணிணி இல்லாத – கையெழுத்து பிரதிகள் மட்டுமே உள்ள காலத்தில் புகாரியில் இடம்பெறுகின்ற அதே ஹதீஸ் அல்லது அதே கருத்தில் அமைந்த அல்லது கூடுதல் குறைவான கருத்தில் அமைந்த ஹதீஸ் அல்லது நேர்மாற்றமான ஹதீஸ் இன்ன நூலில் இடம் பெற்றுள்ளது என்று அவர் காட்டுகின்ற மேற்கோள், மேனியை சிலிர்க்க வைத்து விடுகின்றது.

அத்தனை ஹதீஸ் நூற்களிலும் அவரது ஆய்வுப் பார்வை பதிந்திருப்பதை இது நமக்கு தெளிவுபடுத்துகின்றது.

ஹதீஸ் அறிவிப்பாளர்களின் தரம், அவர்களின் *குறை நிறையைப் பற்றிய அலசல் போன்ற கலைகளில் கைதேர்ந்தவர். ஹதீஸ் துறையில் அவர் ஆற்றிய சேவை அளப்பரியது.*

ஹதீஸ் வரலாற்று வானில் ஒளி வீசும் நட்சத்திரமாக இருந்த போதிலும் *தமிழ்பேசும் மக்களிடம் அவருக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை*.

ஹதீஸ் ஆய்வுகளில் அவருக்கு ஓர் உயரிய இடத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகவே அவரைப் பற்றிய இந்தக் கூடுதல் விளக்கம் தரப்பட்டுள்ளது.

முழுப்பெயர்: அஹ்மத் இப்னு அலீ இப்னு முஹம்மத் இப்னு முஹம்மது இப்னு அலீ அல்கனானீ அல்அஸ்கலானீ

புனைப்பெயர்: ஷஹாபுத்தீன் அபுல்ஃபலலுல், இப்னு ஹஜர் (இந்தப் பெயரால் தான் இவர் பிரபலமாக அறியப்பட்டுள்ளார்)

இயற்பெயர் : *அஹ்மத்*

தந்தைப்பெயர்: *அலீ*

பிறந்த ஊர்: எகிப்தில் உள்ள காஹிரா என்ற ஊரில் பிறந்தார். இவரது குலம் அல்கனானீ என்பதாகும்.

பிறப்பு : *ஹிஜ்ரி 773ம்* ஆண்டு பிறந்தார்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்: இவர் மிஸ்ரிலிருந்து மக்காவிற்குப் பயணம் மேற்கொண்டு அங்கு ஒரு வருடம் தங்கிப் பயின்றார். பிறகு ஷாம், ஹிஜாஸ், யமன், இவற்றுக்கு இடையில் உள்ள ஊர்களுக்குப் பயணம் சென்றுள்ளார். ஃபலஸ்தீன், அங்குள்ள காஸா இன்னும் இது போன்ற பகுதிகளுக்கும் சென்றுள்ளார். மிஸ்ரைச் சுற்றியுள்ள ஊர்களுக்கும் சென்றுள்ளார்.

இவர்தொகுத்த நூல்கள்:

*ஃபத்ஹுல் பாரி ஃபி ஷர்ஹி ஸஹீஹுல் புகாரி* (இது மிகவும் பிரபலமான நூலாகும்)

*அல்அஜாயிபு ஃபி பயானில் அஸ்பாப்*

நுஸ்ஹதந்நல்ர் ஃபிதவ்லீகீ நுஹ்பதுல் ஃபிக்ர் (ஹதீஸ் கலை விதிகள் பற்றிய சிறு ஏடு)

அல்கவ்லுல் முஸத்தது ஃபி தப்பி அனில் முஸ்னத்

நதாயிஜுல் அஃப்கார் ஃபி தக்ரீஜீ அஹாதீஸுல் அத்கார்

முவாஃபிகாதுல் கபரில் கபர்

அந்நுகதுல்லிராஃப் அலல் அத்ராஃப்

*தக்ரீபுத் தஹ்தீப்* (அறிவிப்பாளர்களின் குறை நிறை தொடர்பானது)

ஸில்ஸிலதுத்தஹப்

*புலூகுல் மராம்* (நோக்கங்களை அடைவது)

இவை அல்லாத சுமாôர் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தொகுத்துள்ளார்.

இவரது ஆசிரியர்கள்:

அப்துர்ரஹ்மான் அல்இராகீ, இஸ் இப்னு ஜமாஆ, ஸகாவீ, அஹ்மத் இப்னு முஹம்மத், அல்ஐகீ, ஷம்சுதீன் கல்கஷன்தீ, அஹ்மத் இப்னு முஹம்மத் அல்கலீலீ, ஜமாலுத்தீன் இப்னு அல்லஹீரா போன்ற பல அறிஞர்களிடம் பல்வேறு கலைகளைக் கற்றுள்ளார்.

இவரது மாணவர்கள்:

இவருக்கு மக்கா, ஸீராஷீ, ஷாம், பக்தாத் போன்ற பகுதிகளில் இருந்து 626க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். அவர்களில் சிலர்:

இப்னு காலி, இப்னு ஃபஹ்த், இப்னு தஃக்ரீ, முஹம்மதுல் காஃபினீ, ஷம்சுதீன் ஸஹாவீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: இவர் எகிப்தில் ஹிஜ்ரி 852ஆம் வருடம் துல்ஹஜ் கடைசியில் மரணித்தார். அப்போது அவருக்கு 79 வயதாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *