ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்
ஹஜ் கடமையை தூய்மையான உள்ளத்துடன் நபிகளார் காட்டித்தந்த முறைப்படி நிறைவேற்றிவிட்டால் அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புவார் என்று ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன.
தூய்மையான இந்த வணக்கத்தை பலர் விளம்பரத்திற்காகவும், பெருமைக்காகவும் செய்வதை பார்க்க முடிகிறது. ஹஜ் பயணத்திற்கு முன்னால் விருந்தளித்தல், மாலை அணிதல், சுவரொட்டிகளில் விளம்பரம் செய்தல் என்று பல வகைகளில் விளம்பரம் செய்கின்றனர். இதன் மூலம் நன்மைகளை இழக்கிறார்கள்.
இன்னும் பல நூதனங்களையும் செய்கிறார்கள். ஹஜ் செய்தவர் வீடு திரும்பும் போது அவர் வீட்டிற்கு நுழைவதற்கு முன்னரே அவரைச் சந்தித்து அவரிடம் நமக்காக துஆச் செய்யச் சொல்ல வேண்டும் என்றும், அதனால் நிறைந்த பலன் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். இதற்கு ஒரு செய்தியையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
நீ ஹாஜியைச் சந்தித்தால் அவருக்கு ஸலாம் சொல்லி, அவரிடம் முஸாபஹா செய். இன்னும் அவர் தனது வீட்டில் நுழைவதற்கு முன்னால் உனக்காக பாவமன்னிப்புத் தேடுவதற்குக் கேட்டுக் கொள். ஏனெனில், அவர் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக இருக்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அஹ்மத்
இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து ஹாஜிகள் ஊர் திரும்பினால் அவரைக் கட்டாயம் சந்தித்து அவரிடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
இந்தச் செய்தி அஹ்மதில் இரண்டு இடங்களில் வந்துள்ளது. அந்த இரண்டு செய்திகளிலும் முஹம்மத் பின் அப்துர்ஹ்மான் அல்பைலமானீ என்பவர் இடம்பெறுகிறார்.
இவர் நபிகளார் பெயரில் இட்டுக்கட்டி பொய்யான செய்திகளைச் சொல்பவர் என்று கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டவர். இவரைப் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்களின் கருத்துக்களைப் பார்ப்போம்.
இவர் ஹதீஸ்துறையில் மறுக்கப்பட்டவர் என்று புகாரி, அபூஹாத்திம், நஸாயீ ஆகியோர் கூறியுள்ளனர்.
இவர் பலவீனமானவராக இருப்பதினால் ஹுமைதீ இவரை விமர்சித்துள்ளதாக புகாரி குறிப்பிடுகிறார்கள்.
இப்னுல் பைலமானீ அறிவிக்கும் செய்தியில் ஏதாவது பிரச்சனை என்றால் அது இவராகத் தான் இருக்கும். இவரிடமிருந்து முஹம்மத் பின் ஹாரிஸ் அறிவிக்கிறார். இவ்விருவரும் பலவீனமானவர்களே என்று இப்னு அதீ குறிப்பிட்டுள்ளார்கள்.
இவர் தனது தந்தை வழியாக இருநூறு செய்திகளை அறிவித்துள்ளார். அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவையே என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்கள்.
இவர் மறுக்கப்பட வேண்டியவர் என்று ஸாஜி குறிப்பிட்டுள்ளார்.
ஸாலிஹ் பின் அப்துல் ஜப்பார், முஹம்மத் பின் ஹாரிஸ் ஆகியோர் வழியாக மறுக்கப்பட வேண்டிய செய்திகளை இவர் அறிவித்துள்ளார் என்று உகைலீ குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 9, பக்கம்: 231
எனவே இந்தச் செய்தி பலவீனமானதும், இட்டுக்கட்டப்பட்டதுமாகும். இதைக் கொண்டு செயல்படுவது கூடாது.
ஹாஜிகள் என்ற அடிப்படையில் இல்லாமல் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது எனக்காக துஆ செய்யுங்கள் என்று பரஸ்பரம் கேட்டுக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் போது, வானவர் உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும் என்று கூறாமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)
நூல் : முஸ்லிம் 5279