ஹம்மாத் பின் ஸலமா பலவீனமானவரா? அதா பின் ஸாயிப் பலவீனமானவரா?

அதா பின் ஸாயிப் என்ற அறிவிப்பாளர் நம்பகமானவர் என்பதில் ஐயமில்லை.

அது போல் அவரிடம் ஹதீஸ்களைக் கேட்ட ஹம்மாத் பின் ஸலமாவும் நம்பகமான அறிவிப்பாளராவார்.

ஆனால் அதா பின் ஸாயிப் வழியாக ஹம்மாத் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று அல்பானி கூறி ஏராளமான ஹதீஸ்களை பலவீனப்படுத்தி உள்ளதால் இது குறித்து விரிவாக விளக்கும் அவசியம் ஏற்படுகிறது.

அதா பின் ஸாயிப் இறுதிக்காலத்தில் மனக்குழப்பத்துக்கு ஆளானார். அதிக மறதிக்கு உரியவராக ஆனார். இவரது மனக்குழப்பத்துக்கு பின்னரே ஹம்மாத் பின் ஸலமா செவியுற்றார் என்பதே இதற்கு அடிப்படையாகும்.

இதன் காரணமாக இவரது அறிவிப்புக்களை ஏற்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

பொதுவாக ஒரு நம்பகமான அறிவிப்பாளர் முதுமையில் மனக்குழப்பத்துக்கு ஆளாகி இருந்தால் அவர் மனக் குழப்பத்துக்கு ஆளாவதற்கு முன் அறிவித்தவை என்று உறுதியாகத் தெரிந்தால் அவரது ஹதீஸ்கள் ஆதாரமாக ஏற்கப்படும்.

அவர் மனக்குழப்பத்துக்கு ஆளாவதற்குப் பின்னர் தான் குறிப்பிட்ட ஹதீஸை அறிவித்தார் என்றால் அந்த ஹதீஸை ஆதாரமாக ஏற்கக் கூடாது.

இத்தகைய அறிவிப்பாளர் அறிவித்த ஹதீஸ் மனக்குழப்பம் ஏற்படுவதற்கு முன்னர் அவர் அறிவித்ததா? பின்னர் அறிவித்ததா என்பதை அறிய முடியாவிட்டால் அந்த ஹதீஸை நிறுத்தி வைக்க வேண்டும். அதாவது பலவீனமானது என்ற அடிப்படையில் வைக்க வேண்டும்.

அதா பின் ஸாயிப் என்ற அறிவிப்பாளரைப் பொருத்த வரை அவருக்கு மனக்குழப்பம் ஏற்படுவதற்கு முன்னர் கேட்டவர்கள் யார்? பின்னர் கேட்டவர்கள் யார்? மனக் குழப்பம் ஏற்படுவதற்கு முன்னரும் பின்னர் கேட்டவர்கள் யார் என்ற விபரம் திரட்டப்பட்டுள்ளது.

அந்த விபரம் இதுதான்:

அதாபின் ஸாயிப் குறித்து இப்னு மயீன் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், அதா அவர்களுக்கு மனக்குழப்பம் ஏற்படுவதற்கு முன்னர் அவரிடம் கேட்ட நம்பகமானவர்களின் ஹதீஸ்கள் வலுவானவை. அவருக்கு மனக்குழப்பம் ஏற்பட்ட பின்னர் அவரிடம் கேட்டவர்களின் ஹதீஸ்கள் ஒன்றுமற்றவை (அதாவது பலவீனமானவை) என்று கூறினார்கள்.நூல் : அல்காமில்

அதா பின் ஸாயிப் அவர்கள் மூளைக் குழப்பத்துக்கு உள்ளான விபரத்தை அறிந்துள்ள இப்னு மயீன் அவர்கள், அதா பின் ஸாயிப் அவர்களுக்கு மூளைக் குழப்பம் ஏற்படும் முன் அறிவித்தவர்கள் யார் என்பதையும் விளக்கியுள்ளார்.

அதா பின் ஸாயிப் என்பாரின் ஹதீஸ்களில் சுஃப்யான், ஷுஃபா, ஹம்மாத் பின் ஸலமா ஆகிய மூவரும் கேட்டவை தவிர மற்றவை பலவீனமானவையாகும். மேலும் ஷுஃபா அவர்கள், அதா பின் ஸாயிப் அவர்களின் முதுமைக் காலத்தில் கேட்ட இரு ஹதீஸ்களும் பலவீனமானவையாகும் என்று யஹ்யா பின் மயீன் கூறுகிறார்.

நூல் : நஸ்புர் ராயா

அதா பின் ஸாயிப் குறித்து அஹ்மத் பின் ஹம்பல் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அஹ்மத் அவர்கள், அதா பின் ஸாயிப் அவர்களிடமிருந்து ஆரம்ப காலத்தில் அறிவித்த ஷுஃபா, சுஃப்யான் போன்றவர்கள் அறிவித்தவை சரியானவை. அவரது இறுதிக் காலத்தில் அறிவித்த காலித் பின் உபைதுல்லாஹ், இஸ்மாயீல், அலீ பின் ஆஸிம் போன்றவர்கள் அறிவிப்பவை ஒன்றுமற்றவை என்று கூறினார்கள் என அபூதாலிப் கூறுகிறார்.

நூல் : அத்தஃதீல்

மேலும் இதை உறுதிப்படுத்தும் சான்றுகளைப் பாருங்கள்!

மனக்குழப்பம் என்ற காரணத்துக்காக அதாபின் ஸாயிப் வழியாக அறிவிக்கும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்ற கருத்துடைய அறிஞர்கள் அதிலிருந்து ஹம்மாத் பின் ஸலமா அவர்களையும் நீக்குகின்றனர். இப்படிக் கூறியவர்கள் யஹ்யா பின் மயீன், அபூதாவூத், தஹாவீ, ஹம்ஸா அல்கத்தானி ஆகியோர் ஆவர்.

நூல் : அத்தன்கீத்

அதா பின் ஸாயிபுக்கு மனக்குழப்பம் ஏற்படுவதற்கு முன் அறிவித்தவர்கள் ஷுஃபா, சுஃப்யான், ஹம்மாத் பின் சலமா, ஹம்மத் பின் ஸைத் ஆகிய நால்வராவர் என்று தஹாவீ கூறுகிறார். அதா பின் ஸாயிப் அவர்கள் மனக் குழப்பத்துக்கு ஆளாவதற்கு முன்னர் அதா பின் ஸாயிப் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அறிவித்தார் என ஹம்ஸா பின் முஹம்மத் அவர்களும் கூறுகிறார்.நூல் : அத்தன்கீத்

உகைலி என்பார் மட்டும் அதா பின் ஸாயிப் என்பார் மூளை குழம்பிய பின்னர் அவரிடமிருந்து அறிவித்தவர் ஹம்மாத் பின் ஸலமா எனக் கூறியுள்ளார். இவரது கூற்றை ஹாஃபில் அபூ அப்துல்லாஹ் அவர்கள் கடுமையாக மறுக்கிறார். இவரைத் தவிர அனைவரும் இவருக்கு மாற்றமாகவே சொல்கிறார்கள் எனவும் கூறுகிறார்.

அதா பின் ஸாயிப் அவர்களுக்கு பஸரா நகரில் தான் மனக்குழப்பம் ஏற்பட்டது. ஹம்மாத் பின் ஸலமா பஸராவில் வைத்து அவரிடம் கேட்டதால் இந்த முடிவுக்கு சிலர் வந்துள்ளனர். ஆனால் மனக்குழப்பத்துக்கு ஆளாவதற்கு முன்னர் ஒரு தடவையும், பின்னர் ஒரு தடவையும் அதா பின் ஸாயிப் அவர்கள் பஸரா நகருக்கு வந்துள்ளார். பசராவில் அவரிடம் ஹம்மாத் பின் ஸலமா கேட்ட தகவலை வைத்து பிரித்துப் பார்க்காமல் தவறான முடிவுக்கு சிலர் வந்துள்ளனர். அவர் முதல் தடவை பஸராவுக்கு வந்த போது அவரிடம் கேட்டவர்கள் ஹம்மாத் பின் ஸலமா, ஹம்மாத் பின் ஸைத், ஹிஷாம் தஸ்தவாயீ ஆகியோர். இரண்டாம் தடவை அவர் பஸராவுக்கு வந்த போது அவரிடம் கேட்டவர்கள் உஹைப், இஸ்மாயீல், அப்துல் வாரிஸ் ஆகியோர் ஆவர். அவர் வழியாக இவர்கள் அறிவித்தவை பலவீனமானவையாகும் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகிறார்கள். ஹிஷாம் தஸ்தவாயி அவர்களும் முன்னர் கேட்டவராவார் என்று அபூதாவூத் கூறுகிறார்.

நூல் : அத்தன்கீத்

இதே கருத்தை தாரகுத்னீ அவர்களும் கூறுகிறார்கள்.

தஹபி அவர்களும் இதை தாரீகுல் இஸ்லாம் நூலில் குறிப்பிடுகிறார்.

அதா பின் ஸாயிப் அவர்களிடம் ஹம்மாத் பின் ஸலமா அறிவித்தவை அனைத்தும் அவரது மூளைக் குழப்பத்துக்கு முன்னர் கேட்டவை எனபதில் சந்தேகமில்லை.

அல்பானி அவர்களின் கூற்று முற்றிலும் தவறு என்பதற்கு இந்த விபரங்கள் போதுமாகும்

ப்னு ஹஜர் அவர்களும் இதைக் கவனிக்காமல் பின்வருமாறு கூறுகிறார்.

இந்தக் கூற்றுக்களில் இருந்து உறுதியாகும் விஷயம் இது தான்: சுஃப்யான் ஸவ்ரீ, ஷுஃபா, ஸுஹைர், ஹம்மாத் பின் ஸைத், அய்யூப் ஆகியோர் முன்னர் கேட்டவர்களாவர். ஹம்மாத் பின் ஸலமா அவர்கள், அதா பின் ஸாயிப் மூளை குழம்பியதற்கு முன்னரும் பின்னரும் கேட்டவர் ஆவார். எனவே அவர் அதா பின் ஸாயிப் வழியாக அறிவித்தவை நிறுத்தி வைக்கப்படும் என்பது தான் தெளிவாகிறது என்கிறார்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்

இதை அப்படியே ஏற்றுக் கொண்டு தான் அதா பின் ஸாயிப் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கும் எல்லா ஹதீஸ்களையும் அல்பானி பலவீனம் என்கிறார்.

மேலே நாம் எடுத்துக்காட்டிய விபரங்கள் இப்னு ஹஜர், அல்பானி ஆகியோரின் கருத்து பிழையானது என்பதை உறுதிபட தெரிவிக்கிறது.

ஹஜருல் அஸ்வத் கல் சொர்க்கத்தில் இருந்து வந்தது என்ற ஹதீஸை பற்றி விமர்சிக்கும் போது இப்னு ஹஜர் முரண்பட்டு பேசுகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

 

இந்த ஹதீஸை அறிவிக்கும் ஹம்மாத், அதா பின் ஸாயிபின் மூளை குழம்புவதற்கு முன் கேட்டவர் என்கிறார்

நூல் : பத்ஹுல் பாரி

எனவே அதா பின் ஸாயிப் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அவர்கள் அறிவித்த செய்திகள் யாவும் துவக்க காலத்தில் அதா பின் ஸாயிபிடம் கேட்டவையாகும் என்பதில் சந்தேகமில்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *