ஸஹீஹான ஹதீஸை மறுக்கும் விதிகள் ஹதீஸ் கலையில் உண்டா ? (05)
முஸஹ்ஹஃப்
நம்பகமான அறிவிப்பாளர், தான் அறிவிக்கும் ஒரு ஹதீஸின் வார்த்தையையோ அல்லது கருத்தையோ அவர் அறிவிக்காத விதத்தில் மாற்றி அறிவிப்பதை ஹதீஸ் கலையில் “முஸஹ்ஹஃப்” என்று சொல்வார்கள்.
முஸஹ்ஹஃபிற்கு உதாரணம்
“நாங்கள் அனஸா எனும் கோத்திரத்தைச் சார்ந்த அந்தஸ்து மிக்க கூட்டத்தினர். நபியவர்கள் எங்களை நோக்கி தொழுதார்கள் என்று அபூ மூஸா அவர்கள் கூறுவதின் நோக்கம், “நபியவர்கள் அனஸாவை நோக்கி தொழுதார்கள்” எனும் அஹ்மதில் (18783)
இடம்பெற்றிருக்கும் ஹதீஸாகும். நபியவர்கள் அபூ மூஸாவுடைய கோத்திரத்தை நோக்கி தொழுதார்கள் என்று அவர்கள் தவறாக விளங்கி கொண்டார்கள்.
இங்கே அனஸா என்ற வார்த்தையின் மூலம் குறிப்பிடுப்படுவது தொழக்கூடியவனுக்கு முன்னால் நட்டப்படும் ஈட்டியாகும் என்று கூறி “எங்களை நோக்கி தொழுதார்கள்” என்ற அறிவிப்பை “முஸஹ்ஹஃப்” என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் முடிவுசெய்கிறார்கள்.
(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 146)
இது போன்று தவறாக அறிவிக்கும் ஒரு அறிவிப்பாளர் பல தடவை தவறாக அறிவிக்கும் போதுதான் அவர் பலவீனமானவராக கருதப்படுவார்.
ஓரிரு முறை இவ்வாறு அறிவிப்பதால் அந்த அறிவிப்பாளர் பலவீனமானவர் என்ற தரத்தை அடையமாட்டார் என்பதும், ஹதீஸ்கலை இமாம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாகும்.
அவர், தொடர்ந்து தவறாக அறிவிப்பதை வேறு சில ஹதீஸ்களை ஆய்வு செய்வதின் மூலம் கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு ஹதீஸை ஆய்வு செய்து மற்ற ஹதீஸ்களுக்கு மாற்றமாக அவர் அறிவித்திருக்கிறார் என்று தெரியும்போது ஒரு அறிவிப்பாளரை பலவீனமாக்க முடியும் என்றால் திருமறை குர்ஆனின் நம்பகத்தன்மையை முன்னிறுத்தி அதற்கு முரணாக வருகின்ற செய்திகளை மறுப்பதில் என்ன தவறிருக்கிறது என்பதை அறிவுடையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.