ஸஹீஹான ஹதீஸை மறுக்கும் விதிகள் ஹதீஸ் கலையில் உண்டா ? (02)
ஷாத்
ஹதீஸ்கலையில் “ஷாத்” என்ற ஒரு விதியிருக்கிறது. அதாவது, ஒரு நம்பகமான அறிவிப்பாளர் அறிவிக்கும் செய்தி, அவரைவிட நம்பகமான ஒரு அறிவிப்பாளரோ அல்லது பலரோ அறிவிக்கும் செய்திக்கு மாற்றமாக இருந்தால் அந்தச் செய்தி ஷாத் எனப்படும்.
நம்பகமான ஒரு அறிவிப்பாளர் அவரை விட நம்பகத்தன்மையில் சற்று வலுவான ஒருவருக்கோ அல்லது ஒரு கூட்டத்திற்கோ மாற்றமாக அறிவிக்கும் போது அவருடைய ஹதீஸ் ஷாத் என்று கூறி மறுக்கப்படும்.
அதே நேரத்தில் அவரை விட வலுவானவருடைய செய்தி மக்பூல் என்று ஏற்றுக்கொள்ளப்படும்.
ஷாதிற்கு உதாரணம்
“உங்களில் ஒருவர் ஃபஜர் தொழுகையை தொழுதால் அவர் தனது வலது புறம் ஒருக்களித்து படுத்துக் கொள்ளட்டும்” என்று நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் என்ற செய்தி அபூதாவூத் (1070) மற்றும் திர்மிதியில் (385) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைப் பற்றி இமாம் பைஹகீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல் வாஹித் என்பவர் இந்தச் செய்தியில் பல அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக அறிவிக்கிறார்.
ஏனென்றால், பெரும்பான்மையான அறிவிப்பாளர்கள் இந்தச் செய்தியை நபியவர்களுடைய கூற்றாக அல்லாமல், நபியவர்கள் செய்ததாகத் தான் அறிவிக்கிறார்கள். இன்னும், இந்த ஹதீஸை அஃமஷ் எனும் அறிவிப்பாளர் வழியாக அறிவிக்கக்கூடிய நம்பகமான அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் அப்துல் வாஹித் மாத்திரம் (நபியவர்களின் செயலாக அல்லாமல் கட்டளையாக) அறிவிக்கிறார் என்று இமாம் பைஹகீ கூறுகிறார்கள்.
(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 124)
மேற்கண்ட செய்தியில், பல நம்பகமான அறிவிப்பாளர்கள் நபியவர்கள் ஒருக்களித்துப் படுத்துக்கொள்வார்கள் என்று அறிவிக்கும் போது ஒரு அறிவிப்பாளர் மாத்திரம் “படுத்துக் கொள்ளட்டும்” என்று நபியவர்கள் மக்களுக்குக் கட்டளையிடும் விதமாக அறிவிப்பதினால், பெரும்பான்மையான அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக இவர் அறிவிக்கும் செய்தி அமைந்திருக்கிறது என்ற அடிப்படையில் அந்த ஒரு அறிவிப்பாளருடைய செய்தியை ஷாத் என்று கூறி மறுக்கிறார்கள்.
இங்கு, ஷாத் என்று மறுக்கப்படக்கூடிய அறிவிப்பு மறுக்கப்படுவதன் காரணமே அவரை விட வலுவானவருக்கு அவர் முரணாக அறிவிக்கின்றார் என்பதுதான்.
அப்படியென்றால் ஓர் உறுதியான அறிவிப்பாளரை விட பலகோடி உறுதியான அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்ட திருமறைக்குர்ஆனுக்கு, அறிவிப்பாளர் சரியாக இருக்கின்ற ஒரு ஹதீஸ் நேர்முரணாக வருகிறது என்றால் அதை மறுப்பது வழிகேடா?
இரண்டு ஹதீஸ்களுக்கிடையில் இது போன்ற முரண்பாடு வரும்போது ஷாத் என்று கூறி மறுப்பவர்கள், குர்ஆனுக்கு எதிராக ஒரு ஹதீஸ் வரும்போது, அதை மறுப்பதற்கு தயங்குவதேன்?
அறிவிப்பாளர் தொடர் சரியான எந்தச் செய்தியும் குர்ஆனுக்கு மாற்றமாக வராது. ஆனால், ஹதீஸிற்கு மாற்றமாக அறிவிப்பாளர் சரியான செய்திகள் வரும், என்றால் இது குர்ஆனை விட ஹதீஸை முன்னிறுத்தும் போக்கு இல்லையா?