முஸல்ஸல்
(சங்கிலித் தொடர்)
நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஒரு ஹதீஸை ஓர் அறிவிப்பாளர் அறிவிக்கும் போது நபியவர்களிடம் ஏற்பட்ட செயல்ரீதியிலான வெளிப்பாடுகளையும், அங்க அசைவுகளையும் செய்து காட்டி தனக்கு அடுத்த அறிவிப்பாளருக்கு அறிவிப்பார்.
இந்தச் செயல்முறை கடைசி அறிவிப்பாளர் வரை தொடர்வதற்குப் பெயர் முஸல்ஸல் என்று சொல்லப்படும்.
உதாரணம்:
நபி (ஸல்) அவர்கள் என்னுடைய கையை பிடித்து, முஆதே! அல்லாஹ்வின் மீதானையாக “உன்னை நான் விரும்புகிறேன், அல்லாஹ்வின் மீதானையாக “உன்னை நான் விரும்புகிறேன்’ என்று கூறினார்கள். பிறகு, முஆதே! “அல்லாஹும்ம அஇன்னி அலா திக்ரிக்க வஷுக்ரிக்க வஹுஸ்னி இபாத்தத்திக்க”
(பொருள்: இறைவா! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என்று ஒவ்வொரு தொழுகைக்கு பின்னாலும் கூறாமல் இருக்காதே என உனக்கு நான் உபதேசிக்கின்றேன் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல்(ரலி).
நூல்: அபூதாவூத் 1524.
இந்த ஹதீஸில் “உன்னை நான் விரும்புகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி)க்கு சொன்னதைப் போன்றே, அறிவிப்பாளர்கள் அனைவரும் தங்களது மாணவர்களுக்கு அறிவிக்கும் போது “உன்னை நான் விரும்புகிறேன்” என்று சொல்லி அறிவித்திருக்கின்றார்கள்.
இது ஹதீஸ்களை அறிவிப்பதில் தனிச் சிறப்புமிக்க ஒரு முறையாகும்.
மகனிடமிருந்து தந்தை அறிவித்த ஹதீஸ்கள்
பொதுவாக, தந்தையிடமிருந்து மகன் அறிவிப்பது தான் வழக்கம்.
ஆனால் மகனிடமிருந்து தந்தை அறிவிக்கும் நிகழ்வுகளும் அரிதாக நடந்துள்ளன.
அவ்வகை ஹதீஸ்களையும் அறிஞர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.
அறிவிப்பாளர் வரிசையில் குளறுபடி உள்ளதோ என்று கருதி இவ்வகை ஹதீஸ்களைப் புறக்கணித்து விடக்கூடாது என்பதே இதற்கு காரணமாகும்.
உதாரணம்:
“நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களை திருமணம் செய்துக் கொண்டதற்காக கோதுமை மாவையும் பேரீச்சம் பழங்களையும் வலிமா விருந்தாக கொடுத்தார்கள்”.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: திர்மிதீ 1015.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் “வாயில் பின் தாவூத்” என்பவர் இடம்பெறுகிறார். இவர் தாபி ஆவார். இவர் தனது மகனான பக்ர் பின் வாயில் என்பவரிடமிருந்து அறிவிக்கின்றார். இவர் தபஉத் தாபி ஆவார்.
நபிகள் நாயகம் அவர்களின் ஹதீஸ்களை காப்பதில் அறிஞர்கள் எடுத்துக் கொண்ட அதிகபட்ச பேணுதலையும், ஆய்வுக் கண்ணோட்டத்தையும் இது வெளிப்படுத்துகிறது.
சிறியவர்களிடமிருந்து பெரியவர்கள் அறிவித்த ஹதீஸ்கள்
ஓர் அறிவிப்பாளர் தன்னை விட வயதில், தரத்தில், கல்வியில் தனக்கு கீழுள்ள அறிவிப்பாளரிமிருந்து அறிவித்த செய்திகளை ஹதீஸ்கலை மேதைகள் அடையாளம் கண்டு வைத்துள்ளனர்.
இதற்கும் காரணம், அறிவிப்பாளர் வரிசை தவறுதலாக இடம்பெற்றுள்ளதோ என்று கருதி இவ்வகை ஹதீஸ்களைப் புறக்கணித்து விடக்கூடாது என்பதாகும்.
உதாரணம்:
“கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள் “முத்அத்துன்னிஸா’ (கால வரம்பிட்டு செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்று தடைவிதித்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ பின் அபீதாலிப் (ரலி).
நூல்: நஸாயீ 3314
இந்த செய்தியில் யஹ்யா பின் சயீத் எனும் அறிவிப்பாளர் இடம்பெறுகிறார். இவர் தாபி ஆவார். இவர் தபஉத் தாபியும் தனது மாணவருமான மாலிக் பின் அனஸ் என்பவர் வழியாக இந்தச் செய்தியை அறிவிக்கின்றார். இவ்வாறு ஆசிரியர் மாணவரிடமிருந்தும், பெரியவர்கள் சிறியவர்களிடமிருந்தும் அறிவித்துள்ள ஹதீஸ்கள் பல உள்ளன.
நன்கு பிரபலமான அப்துல்லாக்கள்
“அப்துல்லாஹ்” என்ற பெயரில் ஹதீஸ்களை அறிவிக்கின்ற நபித்தோழர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களை அரபியில் பன்மையாக “அபாதிலா’ என்று ஹதீஸ் துறையில் குறிப்பிடுவர். (அபாதிலாஹ் என்றால் அப்துல்லாஹ்கள் என்று பொருள்) அப்துல்லாஹ் என்ற பெயர் கொண்ட ஏழு ஸஹாபாக்கள்….
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்,
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்,
அப்துல்லாஹ் இப்னு உமர்,
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்,
அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ்,
அப்துல்லாஹ் இப்னு சஅத் இப்னு அபீஸராஹ்,
அப்துல்லாஹ் இப்னு ஜாஃபர் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் .