முஅன்அன்
ஹதீஸை அறிவிக்கும் போது ”அன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது “முஅன்அன்” எனப்படும்.
”அன் அபீஹுரைரா” ”அன் ஆயிஷா” (அபூஹுரைரா வழியாக – ஆயிஷா வழியாக) என்பது போல் குறிப்பிடும் ஹதீஸ்கள் முஅன்அன் எனப்படும்.
”நமக்குச் சொன்னார்”
”நமக்கு அறிவித்தார்”
”நம்மிடம் தெரிவித்தார்”
”நான் காதால் அவரிடம் செவியுற்றேன்”
என்பது போல் அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருந்தால் அப்படியே அதை ஏற்க வேண்டும்.
ஆனால் முஅன்அன் என்ற வகையில் அமைந்த ஹதீஸ்கள் பரிசீலனைக்குப் பிறகே ஏற்கப்படும்.
தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக அவர் இல்லாதிருந்து இவ்வாறு பயன்படுத்தினால் அதனால் ஹதீஸின் தரம் பாதிக்காது.
”அவர் வழியாக” ”அவர் மூலம்” என்றெல்லாம் இவர் பயன்படுத்துவதற்கும், நமக்கு அறிவித்தார் என்பதற்கும் இவரைப் பொறுத்தவரை வித்தியாசம் இல்லை.
அவர் தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக இருந்து இவ்வாறு அவர் அறிவித்தால். இவர் நேரடியாகச் செவியுற்றது வேறு வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டும்.
நிரூபிக்கப்பட்டிருந்தால் ஏற்கலாம். அவ்வாறு நிரூபிக்கப்படாவிட்டால் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
அதாவது, முஅன்அன் என்று கூறப்பட்டவுடன் அதை ஏற்கவோ மறுக்கவோ கூடாது. மாறாக ஆய்வு செய்த பின்னர் தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும்.
மேற்கூறப்பட்ட சட்டங்களில்
ஏற்றுக் கொள்ளத் தக்கவையும்
ஏற்றுக் கொள்ளத் தகாதவையும்
1. கரீப்
2. அஜீஸ்
3. மஷ்ஹுர்
4. குதுஸீ
5. மர்ஃபூவு –
ஆகிய வகைகளில் அமைந்த ஹதீஸ்களை அறிவிப்பாளர் தொடரும், கருத்தும் சரியாக அமைந்து இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
1. முர்ஸல்
2. முஃளல்
3. முன்கதிஃ
4. முஅல்லக் –
ஆகிய வகைகளைச் சார்ந்த செய்திகளில் அறிவிப்பாளர்கள் விடுபடுவதாலும், விடுபட்டவர்கள் யாரென்றும் அவர்களின் நம்பகத்தன்மை என்னவென்றும் தெரியாததாலும் இந்த வகைகளைச் சார்ந்த செய்திகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
“முதல்லஸ்’ என்ற வகையில் இருட்டடிப்பு செய்யக்கூடிய அறிவிப்பாளர் தெளிவான வார்த்தைகளை (ஹத்தஸனா, அன்பஅனா, ஸமிஃத்து என்று) கூறினால் ஏற்றுக் கொள்ளலாம்.
மூடலான வார்த்தைகளை (அன், கால) கூறினால் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
1. மவ்கூஃப்,
2. மக்தூஃ போன்ற வகைகளைப் பொறுத்த வரையில் அவை ஹதீஸ்களே கிடையாது.
ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள்தான் ஹதீஸ் என்று சொல்லப்படும்.
ஸஹாபாக்கள், தாபியீன்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் அஸர் என்றுதான் சொல்லப்படும்.
நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டவைதான் இறைச்செய்தி – வஹியாகும். அதைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.
அதைத் தவிர்த்து, ஸஹாபாக்கள், தாபியீன்கள் போன்ற மனிதர்களுடைய கூற்றுகளை நாம் மார்க்கமாகப் பின்பற்றினால் அது வழிகேடாகும்.
எனவே மவ்கூஃப், மக்தூஃ போன்ற செய்திகளை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஏனெனில் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்:
“உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கி பின்பற்றராதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்”
(அல்குர்ஆன் 7:3)