அறிவிப்பாளர் வரிசையில் விடுபடும் அறிவிப்பாளர்களைக் கவனித்து மறுக்கப்படும் செய்திகளின் வகைகள்
1. முர்ஸல்
அறிவிப்பாளர் வரிசையில் எல்லா அறிவிப்பாளர்களும் இடம் பெற்று நபித்தோழர்கள் மட்டும் விடுபட்டிருக்கும் ஹதீஸ்களுக்கு முர்ஸல் எனப்படும். நபித்தோழரை விட்டு விட்டு ஒரு தாபியி, நபிகள் நாயகம் சொன்னதாக இதில் அறிவிப்பார்.
உதாரணம்:
“நபி (ஸல்) அவர்கள் தனது வலது கண்ணில் மூன்று தடவையும், இடது கண்ணில் மூன்று தடவையும் சுர்மா இடுவார்கள்”.
அறிவிப்பவர்: இம்ரான் பின் அபீ அனஸ்.
நூல்: தபகாத் 1455.
இந்தச் செய்தியில் அறிவிப்பாளர் வரிசையில் நபித்தோழரைக் குறிப்பிடாமல், “இம்ரான் பின் அபீ அனஸ்” என்ற தாபியியே, நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டது போன்று அறிவிக்கின்றார்.
இது போன்ற செய்திகள் “முர்ஸல்” என்று குறிப்பிடப்படும்.