யாரைப் பற்றி அறிவிக்கப்படுகிறது என்பதைக் கவனித்து பிரிக்கப்படும் ஹதீஸின் வகைகள்
3. மவ்கூஃப்
நபித்தோழர்களின் சொல், செயல், அங்கீகாரம் என நபித்தோழர்கள் தொடர்பாக மட்டும் அறிவிக்கப்படும் செய்திகள் மவ்கூஃப் என்று சொல்லப்படும். இதில் நபிகள் நாயகம் பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்படாது. அறிவிப்பாளர் வரிசை நபித்தோழருடன் நிறுத்தப்படுவதால் மவ்கூஃப் (நிறுத்தப்பட்டது) என்று பெயரிடப்பட்டுள்ளது.
உதாரணம்:
அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கூஃபாவின் ஆளுநராயிருந்த) அப்துல்லாஹ் பின் யஸீத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (மழைத் தொழுகை நடத்தத் தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடன் பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகியோரும் சென்றனர்.
அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்தார்கள். சொற்பொழிவுமேடை (மிம்பர்) ஏதும் இல்லாமல் தரையில் நின்றுகொண்டே பாவமன்னிப்புக் கோரினார்கள். பிறகு சப்தமிட்டு ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பாங்கும் சொல்லவில்லை; இகாமத்தும் சொல்லவில்லை.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி),
நூல்: புகாரி 1022
இது அப்துல்லாஹ் பின் யஸீத் எனும் நபித்தோழரின் செயலாக இடம் பெற்றுள்ளது. இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் சம்பந்தப்படவில்லை.
இதுபோன்று நபித்தோழர்கள் சொன்னதாக, செய்ததாக வரும் செய்திகளுக்கு “மவ்கூஃப்” என்று பெயரிடப்படும்.