யாரைப் பற்றி அறிவிக்கப்படுகிறது என்பதைக் கவனித்து பிரிக்கப்படும் ஹதீஸின் வகைகள்?
1. குத்ஸீ
அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் குத்ஸீ
உதாரணம்:
நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி, “உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்றனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
“என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்”
என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித்(ரலி),
நூல்: புகாரி 1038.
இந்த ஹதீஸில், “அல்லாஹ் கூறுகிறான்” என்று அல்லாஹ்வுடன் இணைத்து நபிகள் நாயகம் அவர்கள் கூறுவதால் இது ஹதீஸ் குத்ஸீ எனப்படுகிறது. குத்தூஸ் (பரிசுத்தமானவன்) என்பது அல்லாஹ்வின் பெயராகும். அத்தகைய அல்லாஹ்வுடன் இந்த செய்தி இணைக்கப் படுவதால் “ஹதீஸ் குத்ஸீ” என்று சொல்லப்படுகிறது.
நபிகள் நாயகம் சொல்லும் அனைத்து ஹதீஸ்களும் அல்லாஹ்விடமிருந்து பெறப்பட்ட இறைச்செய்திகள் தான். இறைச்செய்திகளுக்குள் எந்த பாகுபாடும் இல்லை. எனவே ஹதீஸ் குத்ஸிக்கு என்று தனிச்சிறப்புகள் ஏதும் கிடையாது.