ஹஜ்ஜுக்குச் செல்லும்போது கஅபத்துல்லாஹ்வைப் பார்த்து (முதல் பார்வையில்) கேட்கப்படும் துஆக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று சிலர் கூறுகின்றனர். இது சரியா?

கஅபாவைக் காணும் போது துஆச் செய்ய வேண்டும் என்று வரக்கூடிய ஹதீஸ் பலவீனமானதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நான்கு இடங்களில் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 1. அல்லாஹ்வுடைய பாதையில் (போர்க்களத்தில்) அணிகள் சந்திக்கும் போது, 2. மழை பொழியும் போது, 3. தொழுகைக்கு இகாமத் சொல்லும் போது, 4. கஅபாவைக் காணும் போது.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)

நூற்கள் : தப்ரானீ அல்முஃஜமுல் கபீர், “மஃரிஃபதுஸ் ஸூனன் வல் ஆஸார்” (2092) சுனனுல் குப்ரா (6252)

இதன் அறிவிப்பாளர் தொடரில் “உஃபைர் பின் மஅதான் என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பற்றி விமர்சனம் செய்துள்ள அனைத்து அறிஞர்களும் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

 

இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என அபூதாவூத் கூறியுள்ளார். அபூ உமாமாவிடமிருந்து ஸலீம் என்ற அறிவிப்பாளர் வழியாக அடிப்படை இல்லாத விசயங்களை அதிகம் அறிவித்துள்ளார் என அபூ ஹாத்திம் அவர்கள் விமர்சித்துள்ளார்கள். இவர் ஒரு பொருட்டாகக் கொள்ளத்தக்கவரில்லை என்றும், இவர் நம்பகமானவர் இல்லை என்றும் யஹ்யா பின் மயீன் அவர்கள் விமர்சித்துள்ளார்கள். இவர் ஹதீஸ்களில் நிராகரிக்கத்தக்கவர், பலவீனமானவர் என்று அஹ்மத் கூறியுள்ளார்.

(மீஸானுல் இஃதிதால் பாகம் : 3 பக்கம் : 83)

எனவே மேற்கண்ட செய்தி மிகவும் பலவீனமானதாகும்.

கஅபாவைக் காணும் போது துஆச் செய்ய வேண்டும் என்பதற்கோ, குறிப்பிட்ட துஆக்களை ஓத வேண்டும் என்பதற்கோ ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபத்துல்லாஹ்வைப் பார்த்தால் இரு கைகளையும் உயர்த்தி இறைவா! இந்த ஆலயத்திற்கு கண்ணியத்தையும், மரியாதையையும் அதிகப்படுத்து! (எதிரிகளுக்கு) அச்சத்தையும் அதிகப்படுத்து! இந்த ஆலயத்தின் கண்ணியம், மரியாதையின் காரணத்தால் (இந்த ஆலயத்தை) ஹஜ் செய்பவர்களுக்கும், உம்ரா செய்பவர்களுக்கும் கண்ணியத்தையும் மரியாதையையும் நன்மையையும் அதிகப்படுத்து என்று பிரார்த்தனை செய்வார்கள்.

அறிவிப்பவர் : இப்னு ஜுரைஜ்

நூல் : முஸ்னத் ஷாஃபீ 948

இந்த ஹதீஸை இப்னு ஜுரைஜ் என்பவர் அறிவித்துள்ளார். இவர் தாபியீ ஆவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட வேண்டுமானால் அதை நபித்தோழர்கள் மட்டுமே குறிப்பிட முடியும். இவர் அடுத்த காலத்தில் வாழ்ந்தவர் என்பதால் இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அதே நேரத்தில் கஃபத்துல்லாஹ்விற்கு உள்ளே சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளன.

 

(மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபாவிற்குள் நுழைந்ததும் அதன் அனைத்து திசைகளிலும் பிரார்த்தனை புரிந்தார்கள். (கஅபாவிற்குள்) தொழாமலேயே அதிலிருந்து வெளியேறி விட்டார்கள். வெளியே வந்ததும் கஅபாவிற்கு முன்னே (நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, “இதுதான் கிப்லா (தொழும் திசை) என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 398

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *