ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் கொடுக்க வேண்டிய குர்பானி பற்றி….
கிரான், தமத்துவ் அடிப்படையில் இஹ்ராம் கட்டியவர்கள் பத்தாம் நாளன்று குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் அறிந்துள்ளோம். இத்தகையவர்கள் குர்பானி கொடுக்க வசதியில்லா விட்டால் அதற்குப் பகரமாக வேறு பரிகாரம் செய்து கொள்ளலாம்.
இயலாவிட்டால் பகரமும் உண்டு
அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பப் பிராணியை (அறுங்கள்.) பப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பயிடுதல் உண்டு. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பப் பிராணியை (பயிட வேண்டும்.) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச் சலுகையான)து மஸ்ஜிதுல் ஹராமில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
(அல்குர்ஆன் 2:196)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்துள்ளனர். ஆயினும் அது கட்டாயமானதல்ல. ஒருவர் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுப்பதே அவசியமாகும். அல்லது ஏழு பேர் சேர்ந்து கூட்டாக ஒரு மாட்டை அல்லது ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கலாம்.
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். ஏழு நபர்கள் கூட்டாக ஒரு ஒட்டகத்தை அறுத்தோம். மாட்டையும் ஏழு நபர்கள் கூட்டாக அறுத்தோம்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); நூல்: முஸ்லிம் 2128, 2323
மினாவில் குர்பானி கொடுப்பதே நபிவழியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் குர்பானி கொடுத்த ஹதீஸை முன்னரே எடுத்துக் காட்டியுள்ளோம்.
பெருநாள் தினத்தன்று குர்பானியைக் குர்பானி கொடுப்பவர் சாப்பிடலாம் என்பதைப் போல் ஹஜ்ஜில் குர்பானி கொடுப்பவரும் அதிலிருந்து சாப்பிடலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுபத்தி மூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்தார்கள். மீதியை அலீ (ரலி) அவர்கள் அறுத்தார்கள். தமது குர்பானியில் அலீ (ரலி) அவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட்டாக்கிக் கொண்டார்கள். பிறகு ஒவ்வொரு ஒட்டகத்திலிருந்தும் சிறிதளவு எடுத்து சமைக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிட்டார்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் போடப்பட்டு சமைக்கப்பட்டது. இருவரும் அதன் இறைச்சியைச் சாப்பிட்டார்கள். அதன் குழம்பை அருந்தினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); நூல்: முஸ்லிம் 2137
எத்தகைய பிராணிகளைக் குர்பானி கொடுக்கலாம், எவ்வாறு அறுக்க வேண்டும் என்பது போன்ற விவரங்கள் பொதுவாக குர்பானியின் சட்டங்களைப் போன்றதாகும்.
தாங்களே குர்பானி கொடுக்காமல் மற்றவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தும் குர்பானியை நிறைவேற்றலாம்.
சவுதி அரசாங்கத்தில் பணம் செலுத்தி விட்டால் அரசே நம் சார்பாகக் குர்பானி கொடுக்கும் நடைமுறை இருக்கிறது. அதில் தவறேதும் இல்லை. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் சார்பாக அலி (ரலி) அவர்களைக் குர்பானி கொடுக்க நியமணம் செய்துள்ளனர். மேலும், ஆயிஷா (ரலி) அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே குர்பானி கொடுத்துள்ளனர்.