ஸலாமுக்கு முழுமையாக பதில் சொல்ல வேண்டுமா?

ஒருவர் நமக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்று பூரணமாக சலாம் கூறும் போது நாமும் அவருக்கு வஅலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்று பூரணமாக ஸலாத்திற்கு பதில் தர வேண்டும்.

ஏனென்றால் நமக்கு கூறப்பட்ட முகமனையோ அல்லது அதை விட சிறந்த முகமனையோ கூறும் படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். பதிலளிப்பவரின் சலாம் முதலில் சலாம் கூறியவரின் ஸலாத்தைப் போன்று இருக்க வேண்டும். அல்லது அதை விடச் சிறப்பானதாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் (4 : 86)

ஆதம் (அலை) அவர்கள் மலக்குமார்களுக்கு சலாம் சொன்னார்கள். மலக்குமார்கள் ஆதம் (அலை) அவர்கள் கூறிய சலாத்தை விட சிறந்த ஸலாத்தைக் கூறினார்கள். அந்த மலக்குமார்கள் கூறிய சலாமே முஹம்மது நபியின் சமுதாயமாகிய நாம் கூற வேண்டிய ஸலாமாகும்.

அல்லாஹ் ஆதமைத் தன்னுடைய உருவில் படைத்தான். அப்போது அவரது உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்த போது நீங்கள் சென்று அங்கு அமர்ந்து கொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் அது தான் உங்களது முகமனும் உங்களது சந்ததிகளின் முகமனும் ஆகும். என்று இறைவன் சொன்னான்.

அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று) அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் சொன்னார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (சாந்தியும் இறைவனின் கருணையும் உங்கள் மீது நிலவட்டும்) என்று வானவர்கள் பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (6227)

மேலும் பதில் ஸலாம் கூறுவதை நபி (ஸல்) அவர்கள் கடமை என்று கூறியுள்ளார்கள். ஸலாம் கூறியவர் பூரணமாக சலாம் கூறி நாம் குறைவாக பதில் ஸலாம் கூறினால் நாம் அவருக்கு செய்ய வேண்டிய கடமையில் குறைவு ஏற்பட்டதாக ஆகி விடுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓரு முஸ்லிம் (இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து.

  1. ஸலாமிற்குப் பதில் சொல்லுதல்.
  2. நோயாளியை நலம் விசாரித்தல்.
  3. ஜனாசாவைப் பின்தொடர்ந்து செல்லுதல்.
  4. அழைப்பை ஏற்றுக் கொள்ளுதல்.
  5. தும்மியவருக்கு எர்ஹமுக்கல்லாஹ் என்று கூறுதல்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரலி
நூல் : ( புகாரி 1240 )

ஸலாம் கூறுவதிலும் தொழுவதிலும் குறைவு வைக்கக் கூடாது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அபூதாவூத் (793)

ஸலாம் கூறியவருக்காக இறைவனிடம் சாந்தியை வேண்டுவதுடன் இறைவனுடைய அருளையும் அபிவிருத்தியையும் சேர்த்து வேண்டினால் நன்மைகள் அதிகம் கிடைக்கும்.

”நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினார். நபியவர்கள் அவருக்குப் பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார்.

அவர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார்.

நபியவர்கள் (இவருக்கு) இருபது (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார்.

அவர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதில் கூறினார்கள்.

பிறகு அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் (இவருக்கு) முப்பது (நன்மைகள்) என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)
நூல் : அபூ தாவூத் (4521)
—————
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *