ஸலவாத்து பற்றிய பலவீனமான ஹதீஸ்கள்

சொர்க்கத்தில் தமது இருப்பிடத்தை காணாமல் மரணிக்க மாட்டார்

என் மீது யார் ஒரு (ஜூம்ஆ) நாளில் ஆயிரம் முறை ஸலவாத் கூறுவாரோ அவர் சொர்க்கத்தில் உள்ள தமது இருப்பிடத்தை காணாமல் மரணிக்க மாட்டார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி).

இந்த செய்தி அல்அமாலி பாகம் 1 பக் 172, அத்தர்கீப் பாகம் 1 பக் 22 மற்றும் இன்னும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது முழுக்க பலவீனமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹகம் பின் அதிய்யா பலவீனமானவர் ஆவார்.

 

நெருக்கமானவர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உலகில் அதிமாக என் மீது ஸலவாத் கூறியவரே மறுமை நாளில் உங்களிலே எல்லா வகையிலும்  எனக்கு நெருக்கமானவர் ஆவார். ஜூம்ஆ பகலிலும் இரவிலும் என் மீது ஸலவாத் கூறியவரின் நூறு தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்து விடுவான்.

எழுபது தேவைகள் மறுமை தொடர்புடையதாகவும், முப்பது தேவைகள் உலகத் தொடர்புடையதாகவும் இருக்கும். பிறகு இதற்கென ஒரு வானவரை அல்லாஹ் நியமிப்பான். அவர் பலிப்பிராணிகள் உங்களிடம் நுழைந்து வருவதைப் போன்று எனது கப்ரில் நுழைந்து வருவார். என் மீது ஸலவாத் கூறியவரின் பெயர், அவரது பாரம்பரியம் என அவரது குடும்பத்தார் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தையும் எனக்கு அவ்வானவர் தெரிவிப்பார். என்னிடத்தில் உள்ள வெள்ளைப் பதிவேட்டில் அவற்றை நான் குறித்துக் கொள்வேன்.

அறிவிப்பவர்:  அனஸ் ரலி

இந்தச் செய்தி ஷூஅபுல் ஈமான் 2773, அல்ஃபவாயித் பக் 71,  அத்தர்கீப் வத்தர்ஹீப் பாக1 பக் 525 ஹயாதுல் அம்பியா பாக 1 பக் 94 இன்னும் பிற நூல்களில் சில வார்த்தைகள் மாறுபட்ட நிலையில் பதிவாகியுள்ளது.

இதன் எல்லா அறிவிப்புகளிலும் ஹக்காமா என்பவர் தம் தகப்பனார் உஸ்மான் பின் தீனார் வழியாக அறிவிப்பதாகவே உள்ளது.

ஹக்காமா என்பவர் ஹதீஸ் துறையில் எந்த மதிப்பும் அற்றவர் என்று இப்னு ஹிப்பான் விமர்சனம் செய்துள்ளார். ஸிகாத் பாகம் 7 பக் 194

 

காலையிலும் மாலையிலும் 10 முறை ஸலவாத்

யார் காலையிலும் மாலையிலும் என் மீது பத்து முறை ஸலவாத் கூறுகிறாரோ மறுமையில் அவருக்கு எனது பரிந்துரை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அபுத்தர்தா (ரலி), அஸ்ஸலாது அலன் நபி பாக 1 பக் 48

இதுவும் பலவீனமான செய்தியாகும். ஏனெனில் இந்தச் செய்தியில் சில குறைபாடுகள் உள்ளன.

முதலாவது இதில் அறிவிப்பாளர் வரிசை தொடர்பு அறுந்து உள்ளது.

காலித் பின் மஃதான் என்பவர் அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் செவியுறவில்லை என்று இமாம் அஹ்மத் கூறுகிறார். (ஜாமிஉத் தஹ்ஸீல்)

 

ஜூம்ஆ நாளிலும் நாற்பது முறை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒவ்வொரு ஜூம்ஆ நாளிலும் நாற்பது முறை யார் என் மீது ஸலவாத் ஓதுகிறாரோ அவரது நாற்பது வருட பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். ஒரு முறை என் மீது ஸலவாத் ஓதினால் அது அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டு எண்பது வருட பாவங்களை அல்லாஹ் அழித்து விடுகிறான்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : அத்தர்கீப் வத்தர்ஹீப், பாகம் : 2, பக்கம்: 329

இதில் முஹம்மத் பின் ரஸாம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் ஹதீஸ் துறையில் மதிப்பில்லாதவர். ஆகையினால் ஹதீஸ் கலை நிபுணர்கள் இவரைப் புறக்கணித்து விட்டனர் என்று அஸதீ அவர்களும், இவர் தவறான செய்திகளை அறிவிப்பவர் என்று தாரகுத்னீ அவர்களும் விமர்சித்துள்ளனர்.

 

ஸிராத் எனும் பாலத்தில் ஒளி

என் மீது ஸலவாத் சொல்வது (மறுமையின் இருள் நிறைந்த) ஸிராத் எனும் பாலத்தில் ஒளி தருவதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதில் அவ்ன் பின் உமாரா, ஹஜ்ஜாஜ் பின் ஸினான், மற்றும் அலி பின் ஜைத் ஆகிய மூன்று பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களை எண்ணற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள்.

பார்க்க : தஹ்தீபுல் கமால், பாகம்: 20, பக்கம்: 439, லிஸானுல் மீஸான் பாகம்:2, பக்கம்: 263, தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:8, பக்கம் :173

 

புத்தகத்தில் (எழுத்தில்) ஸலவாத்

யார் என் மீது புத்தகத்தில் (எழுத்தில்) ஸலவாத் சொல்வாரோ அப்புத்தகத்தில் என் பெயர் இருக்கும் வரை  மலக்குமார்கள் அவருக்காக பாவமன்னிப்பு கோரிக் கொண்டே இருப்பார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி).

இந்தச் செய்தி தப்ரானீ 447, முஃஜமுல் அவ்ஸத் 1835, ஆகிய நூற்களில் பதிவு  செய்யப்பட்டுள்ளது.

இது மிகவும் பலவீனமான செய்தியாகும். இதன் அறிவிப்பில் உள்ள யஸீத் பின் இயாழ் என்பவரை அனைத்து அறிஞர்களும் பலவீனமானவர் என்று சான்றளித்துள்ளனர்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]