ஸம்ஸம் கிணறு பற்றிய முன்னறிவிப்பு
மக்காவில் ஸம்ஸம் என்ற கிணறு உள்ளது. ஆண்டு முழுவதும் மக்காவாசிகளும், புனிதப் பயணம் செய்வோரும் இந்தத் தண்ணீரைத் தான் பயன்படுத்துகின்றனர்.
ஹஜ் காலத்திலும், புனித ரமளான் மாதத்திலும் இருபது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குழுமி இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கும் எடுத்துச் செல்கின்றனர்.
பாலைவனத்தில் நிலத்தடி நீர் போதுமான அளவில் இருக்காது. இத்தகைய பாலைவனத்தில் உள்ள ஒரு கிணறு பல ஆயிரம் ஆண்டுகள் வற்றாத நீரூற்றாகவும் எத்தனை இலட்சம் மக்கள் குழுமினாலும் அவர்களின் தேவையை நிறைவு செய்வதாகவும் அமைந்துள்ளது. இது எப்படிச் சத்தியம் உலகமே அதிசயிக்கும் இந்தக் கிணறு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள். இக்கிணறு உருவான வரலாற்றையும் அவர்கள் விளக்குகிறார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது மனைவி ஹாஜர் அவர்களையும் குழந்தை இஸ்மாயீலையும் இப்போது மக்கா நகரம் அமைந்துள்ள இடத்தில் விட்டுச் சென்றார்கள்.
அப்போது யாரும் குடியிருக்காத பாலை நிலமாக அது இருந்தது. குழந்தை இஸ்மாயீல் தாகத்தால் துடித்த போது ஜிப்ரீல் எனும் வானவரை இறைவன் அனுப்பி அவர் மூலம் நீரூற்றை வெளிப்படுத்தினான்.
ஹாஜர் அவர்கள் அந்தத் தண்ணீரை ஓடவிடாமல் தடுப்பு ஏற்படுத்தினார்கள். அவர்கள் அவ்வாறு செய்திருக்காவிட்டால் அது வற்றாத ஜீவநதியாக ஓடிக் கொண்டிருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 3364
அந்தக் கிணறு இறைவன் கட்டளைப்படி உருவாக்கப்பட்டது என்பதையும் வற்றாத நதியாக ஓடும் அளவுக்கு அதன் நீரோட்டம் அமைந்துள்ளது என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்ததற்கு ஏற்ப இன்று வரை இலட்சக்கணக்கான மக்களுக்கு தினசரி தண்ணீரை வழங்கிக் கொண்டிருக்கிறது.