ஸஃபா – மர்வா
இவ்விரண்டும் மக்காவில் உள்ள இரு மலைக்குன்றுகளாகும். இந்தப் பாலைவனம் ஊராக உருவாவதற்கு முன் முதன் முதலில் இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவியையும், கைக் குழந்தையான மகன் இஸ்மாயீலையும் இறைக் கட்டளைப்படி இங்கே குடியமர்த்தினார்கள்.
அப்போது குழந்தை தாகத்தால் தவித்தபோது இஸ்மாயீலின் தாயார் இவ்விரு மலைக்குன்றுகள் மீதும் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக ஓடி ஏறி ஏதாவது வணிகக் கூட்டம் செல்கிறதா? என்று பார்த்தார்கள். அவர்களிடம் தண்ணீர் வாங்கி குழந்தையின் தாகத்தைத் தணிக்க எண்ணினார்கள்.
அதற்கிடையே அல்லாஹ் குழந்தை கிடந்த இடத்தில் அற்புத நீரூற்றை ஏற்படுத்தினான். (புகாரி 3364, 3365)
எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப் போகாத தன்மை இந்த ஊற்று நீருக்கு உண்டு. இங்கே 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அன்றாடம் பயன்படுத்தியும், கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கு எடுத்துச் சென்றும் அது ஊறிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாம் மெய்யான மார்க்கம் என்பதற்குச் சான்று பகர்ந்து கொண்டிருக்கிறது. (இது பற்றி மேலும் விபரமறிய 438வது குறிப்பைப் பார்க்கவும்)
அந்த இரு மலைகளில் இஸ்மாயீலின் தாயார் ஓடியது போல் ஹஜ் செய்வோர் ஓடி அந்தத் தியாகத்தை மதிக்க வேண்டும். ஒரு பெண் தன்னந்தனியாக கைக்குழந்தையுடன் ஆள் அரவமற்ற வெட்டவெளியில் தங்கிய தியாகத்தை இறைவன் மதித்து அவரைப் போலவே அவ்விரு மலைகளுக்கும் இடையே நம்மையும் ஓடச் செய்கிறான். (திருக்குர்ஆன் 2:158)