ஷ அபான் மாதம் பதினைந்தை அடைந்து விட்டால் நோன்பு நோற்க தடை உள்ளதா ?
ஷஅபான் மாதம் நடுப்பாதியை அடைந்தால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் நூல் : அபூதாவூத் 2337
ஷஅபான் பதினைந்து ஆகி விட்டால் நோன்பு நோற்கக் கூடாது என்ற தடை பொதுவானதல்ல. வேறு ஆதாரங்கள் மூலம் அனுமதி இருக்கும் நோன்புகளுக்கு இந்தத் தடை பொருந்தாது.
முதலாவது விதிவிலக்கு விடுபட்ட கடமையான நோன்பாகும்.
ஒரு ரமலானில் விடுபட்ட நோன்பை அடுத்த ரமலானுக்குள் நோற்றுவிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டி உள்ளனர்.
ரமளான் மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி 1950
இந்த ஹதீஸில் ஷஅபான் 15 க்குள் என்று சொல்லப்படவில்லை. ஷஅபான் என்று பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளதால் அந்த மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் விடுபட்ட கடமையான நோன்பை நோற்கலாம். ஷஅபான் 15 ஆகிவிட்டாலும் கடமையான நோன்பை நோற்காமல் இருந்தால் நோற்று விட வேண்டும்.
அது போல் ஷஅபான் மாதத்தின் கடைசி இரு நாட்களில் நோன்பு நோற்க நபிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுவும் விதிவிலக்காகும்.
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?’‘ என்று கேட்டார்கள். அம்மனிதர், “இல்லை‘ என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் ரமளான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள்.
இதை முதர்ரிஃப் அறிவிக்கிறார். நூல் : முஸ்லிம் 2802
ஷ அபான் 15 ஆகிவிட்டால் நோன்பு நோற்க வேண்டாம் என்று சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷஅபான் இறுதி இரு நாட்கள் நோன்பு நோற்க வலியுறுத்தி உள்ளதால் இதுவும் விதிவிலக்காகும்.
திங்கள் கிழமையிலும் வியாழக்கிழமையிலும் சுன்னத்தான நோன்பு உண்டு. இதை வழமையாக நோற்று வருபவர் ஷஅபான் 15 க்குப் பிறகு வரும் வியாழன், திங்கள் கிழமைகளில் நோற்கலாம். இதுவும் விதிவிலக்காகும்.
வழமையாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளனர். அப்படி நோன்பு நோற்கும் சுன்னத்தைப் பேணி வருபவர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பை ஷஅபான் 15க்கு பின்னரும் நோற்கலாம் .
ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் நோற்குமாறும் லுஹா தொழுகை இரண்டு ரக் அத்கள் தொழுமாறும், தூங்குமுன் வித்ரு தொழ வேண்டும் என்றும் எனது நண்பர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு வலியுறுத்தினார்கள்
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி); நூல் : புகாரி 1981
வழமையாக மாதம் தோறும் இந்த நோன்பை நோற்கும் போது ஷஅபான் 15 லும் நோன்பு நோற்கும் நிலை ஏற்படும். இதுவும் விதி விலக்காகும்
இந்தத் தடை பொதுவானதல்ல என்பதைப் பின்வரும் ஹதீஸைச் சிந்தித்து விளங்கலாம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்; (இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டு விடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை! நூல் : புகாரி 1969
எந்த மாங்களை விடவும் ஷஅபானில் நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் அதிகம் நோன்பு நோற்றுள்ளார்கள். பதினைந்துக்குப் பின் நோன்பு நோன்பு நோற்காமல் இருந்தால் மற்ற மாதங்களை விட ஷஅபானில் நோன்பு குறைவாக இருந்துள்ளது என்ற பொருள் வரும். எனவே 15 க்குப் பின்னரும் வழக்கமாக் கடைப்பிடிக்கும் நோன்புகளை நப்கள் நாயகம் (ஸல்) அவர்கள் பேணியுள்ளார்கள் என்று அறியலாம்
வழக்கமான சுன்னத்தான நோன்புகளைப் பேணாதவர் ஷஅபான் 15 வந்தவுடன் மட்டும் நோன்பு நோற்க நினைத்தால் அதற்குத் தான் இந்தத் தடை.
பிற்காலத்தில் பராஅத் இரவு என்ற பித்அத்தை உருவாக்கி 15 ஆம் நாள் நோன்பை உருவாக்குவார்கள் என்பதற்கு இந்த தடை பொருந்தும்.