ஷாஅபான் 15 நோன்புக்கு ஆதாரம் உண்டா
ஷஃபான் மாதம் பதினைந்தாம் நாள் நோன்பு நோற்க ஆதாரம் இல்லை என்று நாம் சொல்லி வருகிறோம். ஆனால் இலங்கையில் உள்ள ஒரு இயக்கம் ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்பது சுன்னத் என்று கூறி ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறும் சில ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி ஒரு பிரசுரத்தை வெளியிட்டுள்ளது. அந்தப் பிரசுரத்தை இத்துடன் இணைத்துள்ளேன். அது சரியான செய்தியா?
ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்கச் சொல்லும் ஒரு ஹதீஸும் முஸ்லிம் நூலில் இல்லை.
இபபிரசுரத்தில் குறிப்பிட்டப்படும் மூன்று ஹதீஸ்களிலும் மாதத்தின் இறுதியில் என்று மொழி பெயர்ப்பதற்குப் பதிலாக மாதத்தின் மத்தியில் என்று தவறாக மொழி பெயர்த்துள்ளனர்.
இந்த மூன்று ஹதீஸ்களின் அரபு மூலத்தையும், அதன் தமிழாக்கத்தையும் காண்போம். நாமாக தமிழாக்கம் செய்வதை விட மற்றவர்கள் செய்த தமிழாக்கத்தையே இங்கே பயன்படுத்தியுள்ளோம்.
மேற்கண்ட மூன்று ஹதீஸ்களுக்கும் ரஹ்மத் ட்ரஸ்ட் செய்துள்ள தமிழாக்கம் இது தான்.
2154 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “என்னிடம்‘ அல்லது “மற்றொரு மனிதரிடம்’, “நீர் ஷஅபான் மாதத்தின் இறுதியில் நோன்பு நோற்றீரா?’‘ என்று கேட்டார்கள். நான், “இல்லை‘ என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீர் (ரமளான்) நோன்பை முடித்ததும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!’‘ என்று கூறினார்கள்.
இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 2154 (2743)
2155 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?” என்று கேட்டார்கள். அம்மனிதர், “இல்லை‘ என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் ரமளான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள்.
இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 2155 (2744)
2156 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “இந்த மாதத்தின் – அதாவது ஷஅபான் – இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?” என்று கேட்டார்கள். அம்மனிதர் “இல்லை‘ என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நீர் ரமளான் நோன்பை முடித்ததும் “ஒரு நாள், அல்லது இரண்டு நாட்கள்’ நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள். (இங்கே அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்களே ஐயம் தெரிவிக்கிறார்கள்.) “இரண்டு நாட்கள்’ என்று கூறியதாகவே நான் கருதுகிறேன் என்று அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
நூல் : முஸ்லிம் 2156 (2745)