வேலை பார்க்கும் இடத்தில் தொழ முடியாவிட்டால்❓
எங்கள் வீட்டில் அனைவரும் கம்பெனியில் வேலை பார்க்கிறோம். அங்கு எங்களால் தொழ முடியவில்லை. ஃபஜ்ரும், இஷாவும் தொழுது கொள்கிறோம். இடையில் உள்ள மூன்று தொழுகைகளையும் களாச் செய்து தொழலாமா?
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
திருக்குர்ஆன் 4:103
இந்த வசனத்தின் அடிப்படையில் தொழுகைகளை அந்தந்த நேரத்தில் தான் தொழுதாக வேண்டும். ஒரு நேரத் தொழுகையை அதன் நேரம் முடிந்த பின் களாவாகத் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.
நோன்பைக் கடமையாக்கியுள்ள அல்லாஹ் அல்குர்ஆனின் 2:185வது வசனத்தில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால் அந்த நோன்பைக் களாச் செய்யுமாறு கட்டளையிட்டுள்ளான். ஆனால் தொழுகைக்கு அவ்வாறு எந்தச் சலுகையும் அல்லாஹ் தரவில்லை.
மிகவும் இக்கட்டான போர்க்களத்தில் கூட தொழுதாக வேண்டும் என்று 4:102 வசனம் கூறுகின்றது.
தூக்கமும், மறதியும் மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் என்பதால் அவ்விரண்டு காரணங்களால் தொழுகை தாமதமானால் மட்டுமே அவற்றை நிறைவேற்றுவதற்கு அனுமதி உள்ளது.
”யார் தொழுகையை மறந்து விடுகின்றாரோ அல்லது தொழாமல் உறங்கி விடுகின்றாரோ அதற்குரிய பரிகாரம் நினைவு வந்ததும் அதைத் தொழுவது தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 1216
இதன் அடிப்படையில் ஒருவர் தூக்கம், மறதி ஆகியவற்றால் தொழுகையை விட்டு விட்டால் விழித்ததும், அல்லது நினைவு வந்ததும் அந்தத் தொழுகையின் நேரம் கடந்து விட்டாலும் தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள். இதைத் தவிர எந்தக் காரணத்தை முன்னிட்டும் தொழுகையைக் களாச் செய்வதற்கு அனுமதி இல்லை.
தங்களைப் போன்று அலுவலகத்தில் பணி புரிபவர்கள் நேரம் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி தொழுகையைக் களாச் செய்கின்றனர். தொழுகையை மிகவும் சிரமமான ஒரு வணக்கமாக நினைத்துக் கொள்வது தான் இதற்குக் காரணம். எந்த அலுவலகமாக இருந்தாலும் மதிய உணவுக்கு இடைவேளை விடாமல் இருப்பதில்லை. அதுபோல் டீ குடிப்பதற்கும், மலஜலம் கழிப்பதற்கும் அனுமதி தராமல் இருக்க மாட்டார்கள். இந்தக் காரியங்களை நிறைவேற்றத் தேவைப்படும் நேரத்தை விட தொழுகையை நிறைவேற்றுவதற்குக் குறுகிய நேரமே தேவைப்படும்.
அடுத்து, அலுவலகத்தில் தொழுவது கூடுமா? அந்த இடம் சுத்தமானது தானா? என்ற சந்தேகங்கள் ஏற்படுவதும் தொழுகையைத் தாமதப்படுத்துவதற்கான காரணங்களில் ஒன்று!
பள்ளிவாசலில் சென்று ஜமாஅத்துடன் தொழுவதற்கு வசதியுள்ளவர்கள் அங்கு சென்று தொழுவது தான் சிறப்பு! ஆனால் அலுவலகத்தில் பணி புரிபவர்கள் அது போன்ற வாய்ப்பைப் பெற முடியாத போது தொழுகை நேரம் வந்து விட்டால் அலுவலகத்திலேயே தொழுது கொள்ளலாம். இதைக் கீழ்க்காணும் ஹதீஸ் உணர்த்துகின்றது.
பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும், தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய உம்மத்தில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்து விட்டால் அவர் (எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்தில்) தொழுது கொள்ளட்டும்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : புகாரி 335, 438
ஏகத்துவம்