*வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜகாத் வழங்கலாமா*?

இயற்கை சீற்றங்கள், குறிப்பாக பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் மனித சமூகம் பெரும் துயரத்திற்கு ஆளாகிறது.

நேற்று வரை வசதியாகவும், செல்வச் செழிப்புடனும் வாழ்ந்த பலர், ஒரே இரவில் வீடு, உடைமை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாகும் சூழலை நாம் காண்கிறோம்.

இத்தகைய இக்கட்டான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.

குறிப்பாக இஸ்லாமியக் கடமைகளில் ஒன்றான *ஜகாத்* நிதியை இவ்வகையான நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தலாமா என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது.

ஜகாத் யார் யாருக்கெல்லாம் வழங்கப்பட வேண்டும் என்பதை அல்லாஹ் தனது திருமறையில் மிகத் தெளிவாக வரையறுத்துள்ளான்.

*வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும்*, தர்மங்களை வசூலிப்போருக்கும், (இஸ்லாத்தின்பால்) உள்ளங்கள் ஈர்க்கப்படுவோருக்கும், அடிமைகளு(டைய விடுதலைக்)கும், *கடனாளிகளுக்கும்*, அல்லாஹ்வின் பாதை(யில் போரிடுவோரு)க்கும், வழிப்போக்கருக்கும் தர்மங்கள் உரியவை. இது அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்.” (9:60)

இந்த வசனத்தின் அடிப்படையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஜகாத் பெறுவதற்கு முழு தகுதி படைத்தவர்கள் என்பதை நாம் மூன்று முக்கிய வகைகளின் கீழ் புரிந்து கொள்ளலாம்.

*வறியவர்கள் மற்றும் ஏழைகள்*

இஸ்லாமிய பார்வையில், ஒரு நபர் தன்னிடம் உள்ள செல்வத்தை இழந்து, தனது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டால் அவர் *ஏழை* அல்லது *வறியவர்* என்ற நிலைக்கு வருகிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பலர், முன்பு செல்வந்தர்களாக இருந்திருக்கலாம்.

ஆனால், வெள்ளம் அவர்களின் உடைமைகளை அழித்துவிட்ட நிலையில், தற்போது அவர்கள் எவ்வித ஆதரவும் அற்ற நிலையில் உள்ளனர்.

எனவே, அவர்களின் தற்போதைய வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஜகாத் வழங்குவது சிறந்தது.

*கடனாளிகள்*

வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டு வர, வீட்டைச் சீரமைக்க அல்லது இழந்த வியாபாரத்தை மீண்டும் தொடங்க பலர் கடன் வாங்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இவர்களை இஸ்லாம் கடனாளிகள் என்று அழைக்கிறது. இவர்களது சுமையைக் குறைக்கவும், கடனை அடைக்கவும் ஜகாத் நிதியைக் கொடுப்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.

*வழிப்போக்கர்கள்*

வெள்ளம் காரணமாகத் தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி, முகாம்களில் தங்கியிருப்பவர்கள் அல்லது கையில் பணமின்றி வேறு ஊர்களில் மாட்டிக்கொண்டவர்கள் *வழிப்போக்கர்கள்* என்ற வகையில் அடங்குவார்கள்.

சொந்த ஊரில் அவர்களுக்குச் சொத்து இருந்தாலும், தற்போது இருக்கும் இடத்தில் அதைப் பயன்படுத்த முடியாத சூழலில் அவர்கள் ஜகாத் பெறத் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.

*الله اعلم*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *