வெளிநாட்டில் இருந்துகொண்டு தலாக் சொல்லலாமா?
வெளிநாட்டில் வேலை செய்து வரும் ஒருவர் தன மனைவியை அங்கிருந்து ஊர்செல்லும் இரு நபர்களை சாட்சியாக வைத்து அவ்விருவரும் ஊர் ஜமாத்தில் சாட்சி சொல்லும் பட்சத்தில் விவாகரத்து செல்லுமா?
விவாகரத்துச் செய்யும் போது நேர்மையான இரண்டு சாட்சியாளர்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்.
அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.
திருக்குர்ஆன் 65:1,2
இவ்வசனத்தில் விவாகரத்துக்குரிய முக்கிய விதியை அல்லாஹ் கூறுகிறான். அதாவது விவாகரத்துச் செய்யும் போது இரண்டு சாட்சிகள் இருப்பது அவசியம் என்பதே அந்த விதியாகும்.
ஒருவர் தம் மனைவியை விவாகரத்துச் செய்வதாக இரண்டு நபர்களிடம் கூறிவிட்டால் அவ்விருவரும் சாட்சியாகிவிட மாட்டார்கள்.
விவாகரத்துச் செய்பவனையும், செய்யப்பட்டவளையும் இருவருக்கிடையே விவாகரத்து நடப்பதையும் கண்ணால் காண்பவர் தான் அதற்குச் சாட்சியாக இருக்க முடியும். இத்துடன் இன்னும் பல விஷயங்களையும் கவனத்தில் கொள்வது அவசியம்.
எதிர்த் தரப்பில் உள்ள பெண் யார்? அவளுடைய கோரிக்கை என்ன? விவாகரத்துக்குப் பின் அவன் அவளுக்கு எவ்வளவு உதவித் தொகை கொடுக்க வேண்டும்? பிள்ளைகள் இருந்தால் அப்பிள்ளைகளுக்கு இவன் செய்ய வேண்டியது என்ன? ஆகிய விஷயங்கள் விவாகரத்து வழங்குவதற்கு முன்பு பேசப்பட வேண்டும்.
இதைப் பின்வரும் வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் அவருக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை.
திருக்குர்ஆன் 2:236
விவாகரத்துச் செய்பவன் வசதியுள்ளவன் என்றால் அவனது வசதிக்கேற்ப கோடிகளைப் பெற்றுத் தரும் பொறுப்பு ஜமாஅத்துகளுக்கு உண்டு. சில ஆயிரங்கள் தான் அவனால் கொடுக்க இயலும் என்றால் அதைப் பெற்றுத் தர வேண்டும். இறைவனை அஞ்சுவோருக்கு இது கட்டாயக் கடமையாகும்.
பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார்.
திருக்குர்ஆன் 2:233
மேலும் கணவன் மனைவிக்கிடையே பிளவு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்தும் காரியத்தில் சிலர் ஈடுபட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:35
இவை அனைத்தும் பேசி முடிக்கப்பட்ட பின்பே கணவன் தலாக் சொல்ல முடியும். சாட்சி கூற வருபவர்கள் மேலுள்ள அனைத்து விஷயங்களுக்கும் சாட்சிகளாக இருக்க வேண்டும்.
எனவே பிறரிடம் தலாக் சொல்லி அனுப்புவது இஸ்லாம் கூறும் இந்த ஒழுங்கு முறைகளை மீறும் செயலாகும். அவ்வாறு கூறப்படும் தலாக் செல்லத்தக்கதல்ல.
About Author
Sadhiq
அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
[அல்குர்ஆன் 112:1]