வீணும் விளையாட்டும் நிறைந்ததே உலக வாழ்க்கை
பூமியில் பயனற்ற சிந்தனைகளும் செயல்களும் பரவிக் காணப்படும். வேடிக்கை மற்றும் விளையாட்டான விஷயங்கள் நிறைந்திருக்கும். அவற்றில் மூழ்கிவிடாது வாழ வேண்டுமென அல்லாஹ் நம்மை எச்சரிக்கிறான்.
இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா?
(திருக்குர்ஆன் 29:64)
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?
(திருக்குர்ஆன் 6:32)
பகட்டுக்குப் பலியாகும் வாழ்க்கை
——————————————————
பெரும்பாலான மக்கள், நீயா? நானா? என்று மற்றவர்களிடம் போட்டி போட்டு, பெருமை அடிப்பதிலேயே பொழுதைக் கழிக்கிறார்கள். அதற்குரிய இன்பங்களைப் பெருக்கும் முயற்சியில் வாழ்வைத் தொலைத்து விடுகிறார்கள். எனவேதான் அல்லாஹ் உலகத்தைப் பற்றி இப்படிக் கூறுகிறான்.
விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட்செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை’’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
(திருக்குர்ஆன் 57:20)
(ஏக இறைவனை) மறுத்தோர் நரகத்தின் முன்னே கொண்டு செல்லப்படும் நாளில் “உங்கள் உலக வாழ்க்கையில் உங்கள் நன்மைகளை நீங்களே அழித்து விட்டீர்கள். அதிலேயே இன்பம் கண்டீர்கள். நியாயமின்றி பூமியில் நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததாலும், நீங்கள் குற்றம் புரிந்து கொண்டிருந்ததாலும் இன்று இழிவு தரும் வேதனை பரிசாக வழங்கப்படுகின்றீர்கள்’’ (என்று கூறப்படும்.)
(திருக்குர்ஆன் 46:20)
————————
ஏகத்துவம்