வீடு வாங்குவது வரதட்சனையாகுமா?
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு திருமணம் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு மனைவியருக்கும் வீடு கட்டி கொடுத்து இருக்கிறார்களா?
அல்லது ஏதாவது ஒரு மனைவிக்கு வீடு கொடுத்து இருக்கிறார்களா? விளக்கம் தேவை.
உங்கள் கேள்வி மிகவும் வியப்பாக இருக்கிறது. மனைவிக்காக கணவன் கொடுப்பது எதுவும் வரதட்சணையில் சேராது. கணவன் தன்னுடைய மனைவியுடன் வாழ்வதற்காக தன்னுடைய உழைப்பில் வீடு கட்டிக் கொள்வதோ அல்லது மனைவிக்கு வழங்குவதோ மார்க்க அடிப்படையில் தவறானது கிடையாது.
ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக அப்பெண் வீட்டாரிடம் ஒரு வீட்டையே வரதட்சணையாகப் பெறும் கொடுமை சில முஸ்லிம் ஊர்களில் நிலவி வருகிறது. இது மாபெரும் சமூகக் கொடுமை ஆகும். இதைத்தான் நாம் வரதட்சணைக் கொடுமை என்று கூறிவருகிறோம்.
நபியவர்கள் மரணிப்பதற்கு முன்னால் உயிருடன் இருந்த அனைத்து மனைவிமார்களும் தனித்தனி வீடுகளில் வசித்ததாக நாம் ஹதீஸ்களில் காண்கிறோம். இது நபியவர்கள் தம்முடைய மனைவிமார்களுக்கு செய்து கொடுத்த வசதிதானே தவிர நபியவர்கள் தம்முடைய மனைவியின் குடும்பத்தாரிடமிருந்து பெற்றவை அல்ல.
நபியவர்களின் மனைவிமார்கள் வசித்தது அனைத்துமே நபியவர்களின் வீடுதான் என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், என் சகோதரி மகனே! நாங்கள் பிறை பார்ப்போம்; மீண்டும் பிறை பார்ப்போம்; பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம். அப்படியிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய வீடுகளில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது என்று கூறினார்கள். நான், என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்க்கை நடத்தினீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இரு கருப்பான பொருள்கள்: (ஒன்று) பேரீச்சம் பழம்; (மற்றொன்று) தண்ணீர். அன்சாரிகளான சில அண்டை வீட்டார் அல்லாஹ்வின் தூதருக்கு இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்.) அவர்கள் (அவற்றிலிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 2567, 6459