விலைக்கு வாங்கப்பட்ட மனிதனின் வாழ்க்கை
நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். அவர்கள் கொல்கின்றனர்; கொல்லப்படுகின்றனர். இது, தவ்ராத்திலும், இஞ்சீலிலும், குர்ஆனிலும் அவன் தன்மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி. அல்லாஹ்வை விட வாக்குறுதியை நிறைவேற்றுபவன் யார்? நீங்கள் ஒப்பந்தம் செய்த இந்த வியாபாரத்தில் மகிழ்ச்சியடையுங்கள்! இதுவே மகத்தான வெற்றி.
அல்குர்ஆன் 9 111
இவ்வுலக வாழ்க்கையை ஒப்பந்தம் என்ற அடிப்படையில் நம்மிடம் விலைக்கு வாங்கிய இறைவன் அதற்குரிய கூலியாக, பகரமாக சொர்க்கத்தை நமக்கு வாக்களித்துள்ளான்.
பொதுவாக வியாபாரத்தின் போது ஒரு பொருளை வாங்கினால் அதற்கு ஈடான தொகையையோ, பொருளையோ கொடுப்பது வியாபார நியதி. ஆனால் அல்லாஹ்விடம் நாம் செய்யும் வியாபாரத்தில் நாம் போடும் உழைப்பை விட அதிகமாக நம்மால் ஈடுகட்டவே முடியாத லாபத்தை, அதாவது சொர்க்கத்தை அல்லாஹ் நமக்குப் பரிசளிக்கின்றான்.
நம்மில் எத்தனை பேர் இந்த ஒப்பந்தத்தை நினைவில் நிறுத்தி ஒழுங்காக நிறைவேற்றுகிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆளாகி இறைவனிடம் வழங்கிய இந்த அற்புத ஒப்பந்தத்தை நிறைவேற்றாதவர்களை அல்லாஹ் பார்க்காமல், பேசாமல் பாவங்களிலிருந்து தூய்மையாக்காமல் மறுமையில் இழிவுபடுத்துவதாக இறைவன் எச்சரிக்கை விடுக்கின்றான்.
அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
அல்குர்ஆன் 3:77