இவ்வசனம் (3:92) நாம் விரும்புவதைத் தர்மம் செய்துவிட வேண்டும் என்ற கருத்தைத் தருவதுபோல் சிலருக்குத் தோன்றலாம்.
நாம் விரும்பும் பொருட்களைத் தான் தர்மம் செய்ய வேண்டும்; விரும்பாத பொருட்கள் நம்மிடம் இருந்தால் அதைத் தர்மம் செய்யக் கூடாது என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.
அதுபோல் நாம் விரும்பும் பொருட்கள் அனைத்தையும் தர்மம் செய்து விட வேண்டும் எனவும் இவ்வசனத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது.
பிடிக்காதவற்றை மட்டும் தர்மம் செய்வது சிலரது தயாள குணமாக உள்ளது. ஒரு பொருள் பிடிக்காமல் போனால் மட்டுமே தர்மம் செய்வதும், மனதுக்குப் பிடித்த எந்த ஒரு பொருளையும் தர்மம் செய்யாமல் இருப்பதும் கூடாது என்பது தான் இதன் கருத்தாகும்.
நீங்கள் விரும்பும் பொருட்களிலிருந்து என்பதற்கும், நீங்கள் விரும்பும் பொருட்களை என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
விரும்பும் பொருட்களிலிருந்து என்ற சொற்றொடர் நாம் விரும்பும் பொருட்களில் சிலவற்றையாவது என்ற கருத்தைத்தான் இது தரும்.
நமக்குப் பிடிக்காத நல்ல பொருட்களை நாம் தர்மம் செய்யலாம். அது கெட்ட செயல் அல்ல.
அல்லாஹ்வுக்காக நாம் தர்மம் செய்கிறோமா? நமக்குப் பிடிக்காத பொருள் என்பதற்காக தர்மம் செய்கிறோமா? என்பதற்கு அல்லாஹ் ஒரு சோதனை வைக்கிறான்.
தனக்குப் பிடிக்காத பொருட்களை தர்மம் செய்வதுடன் தனக்குப் பிடித்த சில பொருட்களையும் ஒருவன் தர்மம் செய்தால் அவன் அல்லாஹ்வுக்காக தர்மம் செய்தவனாகிறான்.
அவன் தர்மம் செய்த அனைத்துமே அவனுக்குப் பிடிக்காத பொருட்களாக மட்டுமே இருந்தால் அவன் அல்லாஹ்வுக்காகச் செய்யவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவும், அப்பொருள் தனக்குத் தேவை இல்லை என்பதற்காகவுமே தர்மம் செய்கிறான் என்று பொருள்.
இந்த அடிப்படை விஷயத்தைத் தான் நீங்கள் விரும்பக்கூடிய பொருட்களிலிருந்து என்ற சொல் மூலம் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.