விந்து வெளியாகாமல் உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையா?
விந்து வெளியாகாமல் உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையில்லை என்று பின்வரும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளதே?
ஒருவர் (தம் மனைவியுடன்) உடலுறவு கொண்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவரின் சட்டம் என்ன? என்று நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, அவர் தம் ஆண் குறியைக் கழுவிவிட்டு, தொழுகைக்குச் செய்வது போன்று உளூச் செய்ய வேண்டும். இதை நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என உஸ்மான் (ரலி) கூறினார்.
மேலும் இது பற்றி அலி, ஸுபைர், தல்ஹா, உபை இப்னு கஅப் (ரலி) ஆகியோரிடம் நான் கேட்டதற்கு, அவர்களும் இவ்வாறே கூறினார்கள் என ஸைத் இப்னு காலித் (ரலி) அறிவித்தார்.
நூல் : புகாரி 179
மேற்கண்ட ஹதீஸின் படி செயல்படலாமா?
கணவன் மனைவி இருவரும் உறவில் ஈடுபட்டு விந்து வெளியாகவில்லையானால் உளுச் செய்தாலே போதுமானது; குளிக்கத் தேவையில்லை என்பது ஆரம்பத்தில் நடைமுறையில் இருந்த சட்டமாகும். அதைத் தான் உஸ்மான் (ரலி), உபை இப்னு கஅப் (ரலி) போன்றவா்கள் கூறியிருக்கிறார்கள்.
இந்தச் சட்டம் பின்னர் மாற்றப்பட்டு விட்டது. தம்பதியர் இருவரும் உறவில் ஈடுபட்டு முயற்சி செய்து விட்டாலே விந்து வெளியானாலும், வெளியாகாவிட்டாலும் குளிப்பது அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்னர் கூறிவிட்டார்கள் .
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து, பின்னர் அவளிடம் உடலுறவு கொண்டால் அவர் மீது குளிப்பது கடமையாகிவிடும். விந்து வெளியாகாவிட்டாலும் சரியே.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 578
எனவே இல்லறத்தில் ஈடுபட்டு விந்து வெளியானாலும், விந்து வெளியாகாவிட்டாலும் இருவர் மீதும் குளிப்பது அவசியமாகும். சட்டம் மாற்றப்பட்ட விவரம் தெரியாத காரணத்தால் சில நபித்தோழர்கள் முந்தைய சட்டங்களையே சொல்லியிருக்கிறார்கள்.