வித்ர் தொழுகை குறித்த இஸ்லாத்தின் சட்டம் என்ன?
இஷாத் தொழுகைக்குப் பின்னால் ஃபஜருடைய பாங்கு சொல்லப்படும் வரை இடைப்பட்ட நேரத்தில் ஒற்றைப்படையாக உபரியாக நாம் தொழும் தொழுகைக்கு வித்ருத் தொழுகை என்று கூறப்படுகின்றது. மேலும் இத்தொழுகைக்கு இரவுத்தொழுகை என்றும் கூறப்படுகின்றது. இரவின் கடைசிப் பகுதியில் இத்தொழுகையை தொழுதால் அதற்கு தஹஜ்ஜத் தொழுகை என்று கூறப்படுகின்றது.
கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையைப் பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.
“ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1982
இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை)
2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்)
3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை)
4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.
இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கையில் தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றி கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 990
இரவுத் தொழுகையின் நேரம்
இஷா தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1216
இரவின் கடைசியின் மூன்றிலொரு பகுதி நேரமான போது 11 ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 7452
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 376
நபி (ஸல்) அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 183
நபி (ஸல்) அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ர் தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ர் (சில நேரங்களில்) ஸஹர் வரை நீடித்துள்ளது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 996
ரக்அத்களின் எண்ணிக்கை
8+3 ரக்அத்கள்
“ரமலானில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸலமா
நூல்கள்: புகாரீ 1147, முஸ்லிம் 1220?
12+1 ரக்அத்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியும், எனது சிறிய தாயாருமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களது மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதி வரை – கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் – நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூங்கினார்கள். பின்னார் விழித்து அமர்ந்து தங்களுடைய கையால் முகத்தைக் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலுஇம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று, தொங்க விடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூவை நல்ல முறையில் செய்தார்கள். நானும் எழுந்து நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்து விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருகில் போய் நின்றேன். அவர்கள் தங்கள் வலக்கரத்தை என் தலை மீது வைத்தார்கள். எனது வலது காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரு ரக்அத்கள் தொழுது விட்டு சுப்ஹுத் தொழுகைக்காக (வீட்டை விட்டு) வெளியே சென்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 183, முஸ்லிம் 1275
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 1138, முஸ்லிம் 1276
10+1 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1339
8+5 ரக்அத்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1341
9 ரக்அத்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் ” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக்
நூல்: புகாரீ 1139
7 ரக்அத்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக்
நூல்: புகாரீ 1139
5 ரக்அத்கள்
“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)
நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180
3 ரக்அத்கள்
“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)
நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180
1 ரக்அத்
“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)
நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180
வித்ர் தொழும் முறை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றிக்கிடையே ஸலாமைக் கொண்டோ, அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்கள் : நஸயீ 1695, இப்னுமாஜா 1182, அஹ்மத் 25281
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அதன் கடைசியில் தவிர மற்ற ரக்அத்களில் அமர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1698
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடல் கனத்த போது ஏழு ரக்அத்கள் தொழுதார்கள். அதில் அதன் கடைசி ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்துகளில் உட்காரவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1699
…நபி (ஸல்) அவர்கள வயதாகி பலவீனம் அடைந்த போது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். அதில் ஆறாவது ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லை. பின்னர் எழுவார்கள். ஸலாம் கொடுக்க மாட்டார்கள். பின்னர் ஏழாவது ரக்அத்தை தொழுவார்கள். பின்னர் ஸலாம் கூறுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் அமர்ந்து தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1700
இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதல்
இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக தொழுது கொள்வதற்கும் நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது அறையில் தொழுபவர்களாக இருந்தனர். அவர்களின் தலையை மக்கள் பார்க்கும் அளவிற்கு அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்தது. மக்கள் அவர்களைப் பின்பற்றி தொழலானார்கள். மறுநாள் காலையில் மக்கள் இது பற்றி பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபிக்ள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதபோது மக்களும் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இவ்வாறு இரண்டு மூன்று இரவுகள் செய்யலானார்கள். அதன் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தொழ) வராமல் உட்கார்ந்து விட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ளலானார்கள். “இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன். (அதனாலேயே வரவில்லை) என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 729
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல் நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பின்னால் நின்று தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். இந்த மூன்றாம் இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில் பள்ளிவாசல் கொள்ளாத அளவிற்கு மக்கள் திரண்டனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுபுஹுத் தொழுகைக்குத் தான் வந்தனர். ஸுப்ஹுத் தொழுகை முடித்ததும் மக்களை நோக்கி தஷஹ்ஹுத் மொழிந்து “நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன். நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை. எனினும் இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்” எனக் கூறினார்கள். நிலைமை இப்படி இருக்க (ரமலானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.
நூல்: புகாரி 2012
உமர் (ரலி) அவர்களுடன் நாங்கள் ஓர் இரவு ரமலானில் பள்ளிவாசலுக்குச் சென்றோம். மக்கள் பல்வேறு குழுக்களாக இருந்தனர். சிலர் தனியாகவும் வேறு சிலர் கூட்டாகவும் தொழுது கொண்டிருந்தனர். உமர் (ரலி) அவர்கள் இவர்களை ஒரே இமாமின் பின்னே தொழுமாறு ஏற்பாடு செய்வது நல்லது என்று எண்ணி அவ்வாறே செயல்படுத்தினார்கள். உபய் பின் கஅப் அவர்களை இமாமாக ஏற்பாடு செய்தார்கள். பின்பு மற்றோர் இரவு (பள்ளிக்கு) வந்த அவர்கள் மக்கள் ஒரே இமாமைப் பின்பற்றி தொழுவதைக் கண்டார்கள். “இந்த புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது. இப்போது தொழுது விட்டுப் பிறகு உறங்குவதை விட உறங்கி விட்டு இரவின் இறுதியில் தொழுவது மிகவும் சிறந்ததாகும்” எனவும் கூறினார்கள்
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான்
நூல்: புகாரி 2010
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எனது சிறிய தாயாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்துல் ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கியிருந்த போது இரவில் நானும் தங்கினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பள்ளியில்) இஷா தொழுகை நடத்தி விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுது விட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து “சின்னப் பையன் தூங்கி விட்டானோ?” என்று அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லி விசாரித்து விட்டு மீண்டும் தொழுகைக்காக நின்று விட்டார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களது இடப் பக்கமாகப் போய் நின்று கொண்டேன். உடனே என்னை அவர்களின் வலது பக்கத்தில் இழுத்து நிறுத்தி விட்டு (முதலில்) ஐந்து ரக்அத்துகளும் பின்னர் இரண்டு ரக்அத்துகளும் தொழுது விட்டு அவர்களின் குறட்டை ஒலியை நான் கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கிவிட்டார்கள். பிறது சுபுஹுத் தொழுகைக்கு புறப்பட்டார்கள்.
நூல்: புகாரி 117
அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நோன்பு நோற்றோம். (கடைசி) ஏழு நாட்கள் எஞ்சியிருக்கின்றவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மாதத்தில் எதையும் தொழ வைக்கவில்லை. (அந்நாளில்) இரவில் ஒரு பகுதி செல்லும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆறு (நாட்கள்) இருக்கும் போது எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. (மாதம் முடிய) ஐந்து நாள் இருக்கும் போது இரவின் பாதிவரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இந்த இரவு (முழுவதும்) நீங்கள் எங்களுக்கு உபரியாகத் தொழுகை நடத்தக் கூடாதா?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபியவர்கள் “ஒரு மனிதர் இமாம் (தொழுகை நடத்தி) முடிக்கின்ற வரை அவருடன் தொழுதால் அவருக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை கணக்கிடப்படுகிறது” என்று கூறினார்கள். (மாதம் முடிய) நான்கு நாள் இருந்த போது எங்களுக்கு அவர்கள் தொழ வைக்கவில்லை. (மாதம் முடிய) மூன்று நாள் இருந்த போது தம்முடைய குடும்பத்தார்களையும், மனைவிமார்களையும் ஒன்றிணைத்து எங்களுக்கு ஸஹர் (நேரம்) தவறிவிடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மாதத்தின் மீதமுள்ள நாட்களில் அவர்கள் தொழுகை நடத்தவில்லை.
நூல்: அபூ தாவூத் 1167
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருபத்தி மூன்றாவது நோன்பினுடைய இரவுப் பகுதியில் இரவின் முதல் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம். பிறகு இருபத்தைந்தாம் இரவில் அவர்களுடன் பாதி இரவு வரை தொழுதோம். பிறகு இருபத்து ஏழாம் இரவில் அவர்களுடன் நாங்கள் ஸஹர் (உணவை) அடைய முடியாதோ என்று எண்ணும் அளவிற்குத் தொழுதோம்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: நஸயி (1588)
வீட்டில் தொழுவதே மிகச்சிறந்தது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் பாயினால் ஒரு அறையை அமைத்துக் கொண்டார்கள். சில இரவுகள் அதனுள் தொழுதார்கள். அவர்களது தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இதைப் பற்றி அறிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அந்த அறைக்கு வராமல்) உட்கார்ந்து விட்டார்கள். பின்பு மக்களை நோக்கி வந்து “உங்களது செயல்களை நான் கண்டேன். மக்களே உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள். கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்” என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)
நூல்: புகாரி (731)
இரவுத் தொழுகை தவறி விட்டால்…
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நோய் முதலியவற்றால் இரவுத் தொழுகை தவறி விட்டால் (அதற்கு ஈடாகப்) பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.