விதியை எவ்வாறு புரிந்துக் கொள்வது
நடந்தவை, நடக்கவிருப்பவை அனைத்துமே அல்லாஹ்வால் எழுதி முடிக்கப்பட்டு விட்டது என்று நம்புவது தான் விதியை நம்புவது எனப்படும்.
இது குறித்து திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன.
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.
திருக்குர்ஆன் 6:59
அவர்கள் வெளியேறுவதை அல்லாஹ் விதித்திருக்காவிட்டால் அவர்களை இவ்வுலகில் தண்டித்திருப்பான். மறுமையில் அவர்களுக்கு நரகின் வேதனை இருக்கிறது.
திருக்குர்ஆன் 59:3
இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
திருக்குர்ஆன் 57:22
முன்னரே அல்லாஹ்வின் விதி இல்லாதிருந்தால் (கைதிகளை விடுவிப்பதற்குப் பிணைத் தொகை) பெற்றுக் கொண்டதற்காகக் கடும் வேதனை உங்களுக்கு ஏற்பட்டிருக்கும்.
திருக்குர்ஆன் 8:68
“அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்” என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 9:51
அல்லாஹ் உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும் படைத்தான். பின்னர் உங்களை ஜோடிகளாக அமைத்தான். ஒரு பெண் கருவுறுவதும், ஈன்றெடுப்பதும் அவனுக்குத் தெரியாமல் இருப்பதில்லை. ஒருவனுக்கு வாழ்நாள் வழங்கப்படுவதும், அவனது வாழ்நாள் குறைக்கப்படுவதும் பதிவேட்டில் இல்லாமல் இல்லை. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
திருக்குர்ஆன் 35:11
ஏதேனும் ஒரு காரியத்தில் நீர் இருந்தாலும், குர்ஆனிலிருந்து எதையாவது நீர் கூறினாலும், நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நீங்கள் ஈடுபடும் போது உங்களை நாம் கண்காணிக்காமல் இருப்பதில்லை. பூமியிலும், வானத்திலும் அணுவளவோ, அதை விடச் சிறியதோ, அதை விடப் பெரியதோ உமது இறைவனை விட்டும் மறையாது. (அவை) தெளிவான பதிவேட்டில் இல்லாமல் இருப்பதில்லை.
திருக்குர்ஆன் 10:61
பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது.
திருக்குர்ஆன் 11:6
பூமியிலோ, வானத்திலோ மறைவான எதுவானாலும் அது தெளிவான பதிவேட்டில் இருக்கிறது.
திருக்குர்ஆன் 27:75
“”யுகமுடிவு நேரம் எங்களிடம் வராது” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். “அவ்வாறல்ல! என் இறைவன் மீது ஆணையாக! அது உங்களிடம் வரும். அவன் மறைவானதை அறிபவன். வானங்களிலோ, பூமியிலோ அணுவளவோ அதை விடச் சிறியதோ, அதை விடப் பெரியதோ அவனுக்குத் தெரியாமல் போகாது. தெளிவான பதிவேட்டில் அவை இல்லாமல் இல்லை” என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 34:3
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியை நம்புவது சம்பந்தமாக பல்வேறு சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒருவரின் படைப்பு அவரது தாய் வயிற்றில் நாற்பது நாட்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பின்னர் அவ்வாறே (நாற்பது நாட்களில்) கருக்கட்டியாக மாறுகிறது. பின்னர் அவ்வாறே (நாற்பது நாட்களில்) சதைக் கட்டியாக மாறுகிறது. பின்னர் ஒரு வானவரை அல்லாஹ் அனுப்பி “இவரது செயல்பாடுகளைப் பதிவு செய்! இவரது செல்வத்தைப் பதிவு செய்! இவரது மரண வேளையைப் பதிவு செய்! இவர் நல்லவரா கெட்டவரா என்பதைப் பதிவு செய்!” என நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது.
பின்னர் அவருக்கு உயிர் ஊதப்படுகிறது. உங்களில் ஒரு மனிதனுக்கும் சொர்க்கத்துக்கும் இடையே ஒரு முழம் தவிர இல்லை என்ற அளவுக்கு அவர் (நல்ல) செயல்களைச் செய்வார். முடிவில் விதி அவரை வென்று நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார்.
உங்களில் ஒரு மனிதனுக்கும் நரகத்துக்கும் இடையே ஒரு முழம் தவிர இல்லை என்ற அளவுக்கு அவர் (கெட்ட) செயல்களைச் செய்வார். முடிவில் விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து விடுவார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 3208 , 3332, 6594, 7454
ஆதம் (அலை) அவர்களும், மூஸா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். மூஸா (அலை) அவர்கள், ஆதம் (அலை) அவர்களிடம் “ஆதமே எங்கள் தந்தையான நீங்கள் எங்களை இழப்பிற்குள்ளாக்கி சுவனத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்களே?” என்றார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் “மூஸாவே அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான். அவன் தனது கரத்தால் (தவ்ராத் என்ற வேதத்தை) உமக்காக எழுதிக் கொடுத்தானா என்று கேட்டார்கள். அதற்கு மூஸா (அலை) அவர்கள் ஆம் என்றனர். என்னைப் படைப்பதற்கு முன்னரே இது (தவ்ராத்தில்) எழுதப்பட்டதை நீர் பார்த்ததுண்டா? எனக் கேட்டார்கள். அதற்கு மூஸா (அலை) ஆம் என்றனர். எனவே மூஸாவை ஆதம் வென்று விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 3409, 4736, 4738, 7515
விதி என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது என்பதை இந்தச் சான்றுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
நேர்வழி பெறாத சிலரைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது அவர்கள் நேர்வழி பெறக் கூடாது என்று அல்லாஹ் நாடியதால் தான் அவர்கள் நேர்வழி பெறவில்லை என்று கூறுகிறான். இந்தக் கருத்தில் அமைந்த சில வசனங்கள் வருமாறு:
ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனைஅவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். (ஏக இறைவனை) மறுப்போரும் உள்ளனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். எனினும் அல்லாஹ், தான் விரும்புவதைச் செய்வான்.
திருக்குர்ஆன் 2:253
(இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்தப் பாக்கியமும் இருக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.
திருக்குர்ஆன் 3:176
தம்மைத் தாமே பரிசுத்தவான்கள் எனக் கருதிக் கொள்வோரை நீர் அறியவில்லையா? மாறாக, தான் நாடியோரை அல்லாஹ்வே பரிசுத்தமாக்குகிறான். (அவர்கள்) அணுவளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 4:49
அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெற மாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு.
திருக்குர்ஆன் 5:41
உங்களில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக்கியிருப்பான். எனினும் உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (அவ்வாறு ஆக்கிடவில்லை) எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
திருக்குர்ஆன் 5:48
(முஹம்மதே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்குப் பெரிதாகத் தெரிந்தால் உமக்கு முடியுமானால் பூமியில் சுரங்கத்தை ஏற்படுத்தி, அல்லது வானத்தில் ஏணியை அமைத்து அவர்களிடம் அற்புதத்தைக் கொண்டு வாரும்! அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை நேர்வழியில் ஒன்று சேர்த்திருப்பான். அறியாதவராக நீர் ஆகி விடாதீர்!
திருக்குர்ஆன் 6:35
நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் செவிடர்கள்; ஊமைகள். இருள்களில் அவர்கள் உள்ளனர். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோரை நேரான பாதையில் செலுத்துகிறான்.
திருக்குர்ஆன் 6:39
அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை கற்பித்திருக்க மாட்டார்கள். உம்மை அவர்களுக்குக் காவலராக நாம் ஆக்கவில்லை. அவர்களுக்கு நீர் பொறுப்பாளரும் அல்லர்.
திருக்குர்ஆன் 6:107
அவர்களிடம் வானவர்களை நாம் இறக்கினாலும், இறந்தோர் அவர்களுடன் பேசினாலும், ஒவ்வொரு பொருளையும் அவர்களின் கண் முன்னே நாம் ஒன்று திரட்டினாலும், அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். எனினும் அவர்களில் அதிகமானோர் அறியாதவர்கள்.
திருக்குர்ஆன் 6:111
இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!
திருக்குர்ஆன் 6:112 வழிதவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான்.
திருக்குர்ஆன் 6:125
இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!
திருக்குர்ஆன் 6:137
“முழுமையான சான்று அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவீராக! அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான்.
திருக்குர்ஆன் 6:149
அவர்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் உம்மைக் கவர வேண்டாம். அவற்றின் மூலம் இவ்வுலக வாழ்க்கையில் அவர்களைத் தண்டிப்பதையும், அவர்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது உயிர்கள் பிரிவதையுமே அல்லாஹ் நாடுகிறான்.
திருக்குர்ஆன் 9:55
அவர்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் உம்மைக் கவர வேண்டாம். அதன் மூலம் இவ்வுலகில் அவர்களைத் தண்டிப்பதையும், அவர்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது உயிர்கள் பிரிவதையுமே அல்லாஹ் நாடுகிறான்.
திருக்குர்ஆன் 9:85
(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா?
திருக்குர்ஆன் 10:99
அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் நம்பிக்கை கொள்ள முடியாது. இதை விளங்காதோருக்கு வேதனையை அவன் அளிப்பான்.
திருக்குர்ஆன் 10:100
“நான் உங்கள் நலம் நாடினாலும் உங்களை வழிகேட்டில் விட்டு விட அல்லாஹ் நாடினால் எனது அறிவுரை உங்களுக்குப் பயன் தராது. அவனே உங்கள் இறைவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!” (என்றும் கூறினார்.)
திருக்குர்ஆன் 11:34
உமது இறைவன் நாடியிருந்தால் மனிதர்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். (அவ்வாறு நாடாததால்) உமது இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர மற்றவர்கள் முரண்பட்டோராகவே நீடிப்பார்கள். இதற்காகவே அவர்களை அவன் படைத்தான். “மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன்” என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையாகி விட்டது.
திருக்குர்ஆன் 11:118,119
மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும் போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.
திருக்குர்ஆன் 13:11
நேர்வழி அல்லாஹ்வின் பொறுப்பாகும். கோணல் வழியும் உள்ளது. அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான்.
திருக்குர்ஆன் 16:9
அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். மாறாக தான் நாடியோரை அவன் வழிகேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
திருக்குர்ஆன் 16:93
நாம் நினைத்திருந்தால் ஒவ்வொருவருக்கும் அவருக்கான நேர்வழியைக் கொடுத்திருப்போம். மாறாக “அனைத்து மனிதர்களாலும், ஜின்களாலும் நரகத்தை நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து சொல் முந்தி விட்டது.
திருக்குர்ஆன் 32:13
அல்லாஹ் நினைத்திருந்தால் அவர்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். மாறாக தான் நாடியோரை தனது அருளில் நுழையச் செய்கிறான். அநீதி இழைத்தோருக்குப் பாதுகாவலனும், உதவியாளனும் இல்லை.
திருக்குர்ஆன் 42:8
அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் படிப்பினை பெறுவதில்லை. அவனே அஞ்சத் தக்கவன்; மன்னித்தல் உடையவன்.
திருக்குர்ஆன் 74:56
அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் நாடுவதில்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 76:30
அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் நாடுவதில்லை.
திருக்குர்ஆன் 81:29
யார் நேர்வழி பெறுவார்கள் என்பதும், யார் நேர்வழிக்கு வர மாட்டார்கள் என்பதும் முன்னரே இறைவன் தீர்மானித்தபடியே நடக்கின்றன; மனிதனுக்கு எந்தச் சுதந்திரமும் இல்லை என்பதை இந்த வசனங்கள் மிகத் தெளிவாகக் கூறுகின்றன.
நாம் மனதால் ஒன்றை நினைத்தாலும் அது கூட நமது அதிகாரத்தில் உள்ளது அல்ல. மாறாக நாம் எதை நினைக்க வேண்டும் என்பதையும் அல்லாஹ் தான் தீர்மானிக்கிறான். நாம் எதை நினைக்க வேண்டும் என அல்லாஹ் நினைக்கிறானோ அதைத் தான் நாம் நினைக்க முடியும் எனவும் இவ்வசனங்கள் கூறுகின்றன.
மனிதனுக்கு நேர்வழி காட்டுவதும் நான் தான். அவர்களை வழிகேட்டில் விடுபவனும் நானே என அல்லாஹ் கூறும் வசனங்களும் திருக்குர்ஆனில் உள்ளன.
நயவஞ்சகர்கள் பற்றி (முடிவு செய்வதில்) இரண்டு கூட்டத்தினராக ஏன் ஆகி விட்டீர்கள்? அவர்கள் செய்தவற்றின் காரணமாக அவர்களை அல்லாஹ் கவிழ்த்து விட்டான். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்ட நாடுகிறீர்களா? அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு எந்த வழியையும் நீர் காண மாட்டீர்!
திருக்குர்ஆன் 4:88
அவர்களுடனும் இல்லாமல் இவர்களுடனும் இல்லாமல் இதற்கிடையே தடுமாறிக் கொண்டுள்ளனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு எந்த வழியையும் நீர் காண மாட்டீர்!
திருக்குர்ஆன் 4:143
அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவரே நஷ்டமடைந்தவர்.
திருக்குர்ஆன் 7:178
அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு வழி காட்டுபவர் யாருமில்லை. அவர்களை அவர்களது அத்துமீறலில் தடுமாற விட்டு விடுவான்
திருக்குர்ஆன் 7:186
“இவருக்கு, இவரது இறைவனிடமிருந்து சான்று அருளப்பட வேண்டாமா?” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கேட்கின்றனர். “தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். திருந்தியோருக்கு, தன் பக்கம் வழி காட்டுகிறான்” என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 13:27
அவர்கள் (நல்) வழியிலிருந்து தடுக்கப்பட்டு விட்டனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு வழி காட்டுபவன் இல்லை.
திருக்குர்ஆன் 13:33
எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
திருக்குர்ஆன் 14:4
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு அவனன்றி வேறு பாதுகாவலர்களை நீர் காண மாட்டீர். அவர்களை முகம் கவிழச் செய்து குருடர்களாக, ஊமைகளாக, செவிடர்களாக கியாமத் நாளில் எழுப்புவோம். அவர்களின் தங்குமிடம் நரகம். அது தணியும் போதெல்லாம் தீயை அதிகமாக்குவோம்.
திருக்குர்ஆன் 17:97
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவர் நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்டும் பொறுப்பாளரைக் காண மாட்டீர்.
திருக்குர்ஆன் 18:17
அல்லாஹ், தான் நாடியோரை வழிகேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.
திருக்குர்ஆன் 35:8
இதுவே அல்லாஹ்வின் நேர்வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர்வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை.
திருக்குர்ஆன் 39:23
தனது அடியாருக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா? அவனல்லாதோரைப் பற்றி அவர்கள் உம்மை அச்சுறுத்துகின்றனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டானோ அவருக்கு நேர்வழி காட்டுபவன் இல்லை.
திருக்குர்ஆன் 39:36
அந்நாளில் புறங்காட்டி ஓடுவீர்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பவன் இருக்க மாட்டான். யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு நேர்வழி காட்டுபவன் இல்லை.
திருக்குர்ஆன் 40:33
அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவனுக்கு அவனன்றி எந்த உதவியாளனும் இல்லை. அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும் போது “தப்பிக்க ஏதும் வழி உண்டா?” எனக் கூறுவதை நீர் காண்பீர்.
திருக்குர்ஆன் 42:44
அல்லாஹ்வையன்றி உதவி செய்யும் பாதுகாவலர்கள் எவரும் அவர்களுக்கு இல்லை. அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு எந்த வழியும் இல்லை.
திருக்குர்ஆன் 42:46
இவ்வாறே தான் நாடியோரை அல்லாஹ் வழி தவறச் செய்கிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். உமது இறைவனின் படையை அவனைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். இது மனிதனுக்கு அறிவுரை தவிர வேறு இல்லை.
திருக்குர்ஆன் 74:31
நேர்வழிக்கு வராத தீயவர்கள் ஏன் நேர்வழிக்கு வரவில்லை என்பதற்கான காரணத்தை அல்லாஹ் கூறும் போது அவர்களின் உள்ளங்களில் நான் முத்திரை இட்டது தான் காரணம் என்று கூறுகிறான். நேர்வழிக்கு வரக் கூடாது என்று அல்லாஹ் முத்திரை இட்டால் மனிதன் நினைத்தாலும் நேர்வழிக்கு வர முடியாது. மனிதனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை இந்தக் கருத்தில் அமைந்த வசனங்கள் தெரிவிக்கின்றன.
அல்லாஹ்வின் வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்பட்டு, அதைப் புறக்கணித்து, தான் செய்த வினையை மறந்தவனை விட அநீதி இழைத்தவன் யார்? அவர்களின் உள்ளங்கள் புரிந்து கொள்ளாதவாறு அவற்றின் மீது மூடிகளையும், செவிகளில் அடைப்பையும் நாம் ஏற்படுத்தினோம். நேர்வழிக்கு அவர்களை நீர் அழைத்தால் அவர்கள் ஒரு போதும் நேர்வழி பெற மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 18:57
அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்குப் பின்னேயும் ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களை மூடி விட்டோம். எனவே அவர்கள் பார்க்க முடியாது.
திருக்குர்ஆன் 36:9
அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான்.
திருக்குர்ஆன் 47:23
அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.
திருக்குர்ஆன் 2:7
(முஹம்மதே!) உம்மிடம் (வந்து) செவிமடுப்போரும் அவர்களில் உள்ளனர். அதைப் புரிந்து கொள்ளாத வகையில் அவர்களின் உள்ளங்கள் மீது திரைகளையும், காதுகளில் செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தி விட்டோம். அத்தனை சான்றுகளையும் அவர்கள் பார்த்தாலும் அதை நம்ப மாட்டார்கள். (நம்மை) மறுப்போர் உம்மிடம் வரும் போது “இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை” எனக் கூறி உம்மிடம் தர்க்கம் செய்வார்கள்.
திருக்குர்ஆன் 6:25
பூமிக்கு உரியவர்களிடமிருந்து (அவர்கள் அழிக்கப்பட்ட பின்) அதைக் கைப்பற்றிக் கொண்டவர்களை அவர்களது பாவங்களின் காரணமாகத் நாம் நாடியிருந்தால் தண்டித்திருப்போம் என்பதும், அவர்கள் செவியுறாதவாறு அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரையிடுவோம் என்பதும் விளங்கவில்லையா?
திருக்குர்ஆன் 7:100
(முஹம்மதே!) இந்த ஊர்கள் பற்றிய செய்திகளை உமக்குக் கூறுகிறோம். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். முன்னரே அவர்கள் பொய்யெனக் கருதியதால் அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே (தன்னை) மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
திருக்குர்ஆன் 7:101
வீட்டோடு இருக்கும் பெண்களைப் போல் இருப்பதையே அவர்கள் பொருந்திக் கொண்டனர். அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது. எனவே அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 9:87
வசதி படைத்திருந்தும், உம்மிடம் அனுமதி கேட்டவர்கள் மீதே (தண்டிக்க) வழி உண்டு. அவர்கள் வீட்டோடு இருக்கும் பெண்களைப் போல் இருப்பதைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். எனவே அவர்கள் அறிய மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 9:93
அவருக்குப் பின்னர் பல தூதர்களை அவரவர் சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் முன்னரே பொய்யெனக் கருதியதால் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. வரம்பு மீறியோரின் உள்ளங்கள் மீது இவ்வாறே முத்திரையிடுவோம்.
திருக்குர்ஆன் 10:74
அவர்களின் உள்ளங்கள் மீதும், செவியின் மீதும், பார்வைகள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களே விளங்காதவர்கள்.
திருக்குர்ஆன் 16:108
அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும், செவிகளில் அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.
திருக்குர்ஆன் 17:46
இவ்வாறே அறியாதவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
திருக்குர்ஆன் 30:59
(முஹம்மதே!) உம்மிடமிருந்து செவியேற்பவரும் அவர்களில் உள்ளனர். உம்மை விட்டு அவர்கள் வெளியேறியவுடன் “இவர் சற்று முன் என்ன தான் கூறினார்?” என்று கல்வி வழங்கப்பட்டோரிடம் (கேலியாக) கேட்கின்றனர். அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்கள் தமது மனோஇச்சைகளைப் பின்பற்றினார்கள்.
திருக்குர்ஆன் 47:16
அவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் (ஏக இறைவனை) மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களது உள்ளங்களுக்கு முத்திரையிடப்பட்டு விட்டது. அதனால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 63:3
அவர்கள் தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றனர். அல்லாஹ்விடமும், நம்பிக்கை கொண்டோரிடமும் இது பெரும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியது. இவ்வாறே பெருமையடித்து அடக்கியாளும் ஒவ்வொரு உள்ளத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
திருக்குர்ஆன் 40:35
“அல்லாஹ்வின் மீது இவர் இட்டுக்கட்டி விட்டார்” எனக் கூறுகிறார்களா? (முஹம்மதே!) அல்லாஹ் நாடினால் உமது உள்ளத்தில் முத்திரையிடுவான். அல்லாஹ் பொய்யை அழிக்கிறான். தனது கட்டளைகளால் உண்மையை நிலைக்கச் செய்கிறான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.
திருக்குர்ஆன் 42:24
தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக்கிக் கொண்டவனைப் பார்த்தீரா? தெரிந்தே அவனை அல்லாஹ் வழி கெடுத்தான். அவனது செவியிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டான். அவனது பார்வையின் மீது மூடியை அமைத்தான். அல்லாஹ்வுக்குப் பின் அவனுக்கு வழி காட்டுபவன் யார்? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
திருக்குர்ஆன் 45:23
நம்பிக்கை கொள்ளாத தீயவர்களைப் பற்றி அல்லாஹ் கூறும் போது “இவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்பது தீர்மானமாகி விட்டது; முன்னரே முடிவாகி விட்டது” என்ற பொருள்பட பல வசனங்களில் குறிப்பிடுகிறான். மனிதனுக்கு முடிவெடுக்கும் சுதந்திரமோ அதிகாரமோ இல்லை என்று அந்த வசனங்களும் தெரிவிக்கின்றன.
அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்’என்ற உமது இறைவனின் வாக்கு குற்றம் புரிவோர் மீது இவ்வாறு உறுதியாகி விட்டது.
திருக்குர்ஆன் 10:33
யாருக்கு எதிராக அல்லாஹ்வின் கட்டளை உறுதியாகி விட்டதோ அவர்கள் எந்தச் சான்று தம்மிடம் வந்த போதும், துன்புறுத்தும் வேதனையைக் காணாத வரை நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 10:96,97
“அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!” என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம். அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரும் அச்சமுதாயத்தில் இருந்தனர். வழிகேடு உறுதியானவர்களும் இருந்தனர். எனவே பூமியில் பிரயாணம் செய்து பொய்யெனக் கருதியோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனியுங்கள்!
திருக்குர்ஆன் 16:36
(ஏக இறைவனை) மறுத்தோர் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்ததும் அதன் வாசல்கள் திறக்கப்படும். “உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்தே உங்களுக்கு வரவில்லையா? இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும் என்பதை உங்களுக்கு அவர்கள் எச்சரிக்கவில்லையா?” என்று அதன் காவலர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் “ஆம்” என்பார்கள். எனினும் (ஏக இறைவனை) மறுப்போருக்கு வேதனை என்ற கட்டளை உறுதியாகி விட்டது.
திருக்குர்ஆன் 39:71
(ஏக இறைவனை) மறுப்போர் நரகவாசிகளே என்ற உமது இறைவனின் கட்டளை உறுதியாகி விட்டது.
திருக்குர்ஆன் 40:6
ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம்.
திருக்குர்ஆன் 7:179
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் பல சமுதாயத்தவர்கள் அழிக்கப்பட்டனர். நபிமார்களின் அறிவுரையை அவர்கள் ஏற்க மறுத்து, நபிமார்களையும், நல்லவர்களையும் துன்புறுத்தியதால் அவர்களுக்கு இறைவனின் வேதனை இறங்கியது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
இதைப் பற்றி அல்லாஹ் கூறும் போது “இவர்கள் நபிமார்களை ஏற்க மறுப்பார்கள் என்பதும், இவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதும் முன்னரே செய்யப்பட்ட முடிவின்படியே நடந்தது” என்று பல வசனங்களில் கூறுகிறான்.
அதாவது அவர்கள் கெட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் அல்லாஹ் விதித்த விதி என்கிறான்.
எந்த ஊராக இருந்தாலும் கியாமத் நாளுக்கு முன் அதை அழிக்காமலோ, கடுமையாகத் தண்டிக்காமலோ நாம் இருக்க மாட்டோம். இது பதிவேட்டில் வரையப்பட்டதாக இருக்கிறது.
திருக்குர்ஆன் 17:58
நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது “ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!” என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.
திருக்குர்ஆன் 11:40
மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது. உமது இறைவனிடமிருந்து விதி முந்தியிருக்காவிட்டால் அவர்களிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். அவர்கள் அதில் பெரும் சந்தேகத்திலேயே உள்ளனர்.
திருக்குர்ஆன் 11:110
“நமது மேற்பார்வையிலும் நமது அறிவிப்பின்படியும், கப்பலைச் செய்வீராக! நமது உத்தரவு வந்து தண்ணீர் பொங்க ஆரம்பித்தால் ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், யாருக்கு எதிராகக் கட்டளை முந்தி விட்டதோ அவர்களைத் தவிர ஏனைய உமது குடும்பத்தாரையும் அதில் ஏற்றிக் கொள்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுபவர்கள்” என்று அவருக்கு அறிவித்தோம்.
திருக்குர்ஆன் 23:27
ஒரு மனிதன் நல்லவனாக வாழ்வதும் தீயவனாகிப் போவதும் அவன் கையில் இல்லை. மனிதனைப் படைப்பதற்கு முன்பே சிலரை நரகத்துக்கு எனவும், மற்றும் சிலரை சொர்க்கத்துக்கு எனவும் அல்லாஹ் படைத்துள்ளான் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றன.