இவ்வசனங்களில் (13:2, 31:10, 22:65) நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்தான் எனக் கூறப்படுகிறது.
“வானங்களுக்கும், பூமிக்கும் தூண்கள் உள்ளன; ஆனால் அவைகளை உங்களால் பார்க்க முடியாது” என்ற கருத்தில் இவ்வசனங்கள் அமைந்துள்ளன.
பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இருக்கின்றன. உலகத்தில் இருக்கின்ற பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும் அவற்றிற்குரிய இடங்களில் நீந்துவதற்கு, அவற்றைக் குறிப்பிட்ட வேகத்துடன் இழுத்துப் பிடித்திருக்கின்ற ஒரு ஈர்ப்புவிசை எல்லாப் பகுதியிலும் பரவியிருப்பது தான் காரணம்.
உதாரணமாக நாம் வாழ்கின்ற பூமி, மணிக்கு 1670 கி.மீ. வேகத்தில் தன்னைத் தானே சுற்றுகிறது. அதே சமயம் சூரியனை, மணிக்கு 1,07,000 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகின்றது.
இவ்வளவு வேகமாக தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் பூமி சுற்றும் பொழுது அதை ஈர்த்துப் பிடிக்கும் ஒரு சக்தி இல்லாவிட்டால் தனது நீள்வட்டப் பாதையிலிருந்து இப்பூமி தூக்கி வீசப்பட்டு விடும்.
பூமியின் எடை (நிறை) 6,000,000,000,000,000,000,000,000 கிலோ கிராம் (6க்குப் பின் 24 பூஜ்யங்கள்) ஆகும்.
இந்த வேகத்தில் சுற்றும் இவ்வளவு பாரமான ஒரு பொருளை அதன் பாதையை விட்டு விலகாமல் தடுத்து நிறுத்த வேண்டுமானால், ஐந்து மீட்டர் குறுக்களவு கொண்ட ஒரு லட்சம் கோடி உருக்குக் கம்பிகளாலான தூண்களைக் கொண்டு பூமியிலிருந்து சூரியனை இணைக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
அந்தத் தூண்கள் இல்லாமலேயே பூமி, தனது பாதையிலிருந்து விலகாமல் இருப்பதற்கு ஈர்ப்பு விசை என்ற கண்ணுக்குத் தெரியாத தூண்களே காரணம்.
இந்த அறிவியல் உண்மையைத்தான், “நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி” என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இந்த ஈர்ப்பு விசையின் காரணமாகத்தான் ஒவ்வொரு கோளும் அந்தரத்தில் எவ்விதப் பிடிமானமும் இன்றி தொங்கும் காட்சியைப் பார்க்கின்றோம்.
எனவே 17வது நூற்றாண்டில் மனிதன் கண்டறிந்த ஈர்ப்பு விசை எனும் கண்டுபிடிப்பை, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது.
வானத்திற்கும், பூமிக்கும் எந்தத் தூண்களும் இல்லை என்று தெளிவாகத் தெரியும்போது, “பார்க்கின்ற தூண்களின்றி” என்ற வார்த்தையைத் தேவையில்லாமல் பயன்படுத்தி இருக்க முடியாது.
இந்த வானங்களையும், பூமியையும் படைத்தவன் பேசுகின்ற வார்த்தையாக இது இருப்பதால் தான் “பார்க்கின்ற தூண்களின்றி” என்ற சொல்லைப் பயன்படுத்தி, பார்க்காத தூண்கள் இருக்கின்றன என்ற உண்மையை மறைமுகமாகக் குறிப்பிடுகிறான்.
திருக்குர்ஆன், முஹம்மது நபியின் கற்பனையல்ல; ஏகஇறைவனின் கூற்றுத்தான் என்பதற்கு மற்றுமொரு சான்றாக இது அமைந்துள்ளது.