வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள்
திருக்குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்படும் அத்தியாயம் தொடர்பாக அவைகளில் எவை ஆதாரப்பூர்வமானவை? எவை ஆதாரமற்றவை? என்பதை நாம் இத்தொடரில் பார்த்து வருகிறோம்.
இந்த தொடரில் வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக வரும் ஹதீஸ்களின் தரத்தைப் பற்றிப் பார்ப்போம்.
முழுமையான கல்வி நிறைந்த அத்தியாயம்
“ஆரம்பமானவர்களின் கல்வியையும், இறுதியானவர்களின் கல்வியையும் இவ்வுலக, மறு உலகக் கல்வியையும் அறிவது யாருக்கு மகிழ்ச்சி தருமோ அவர்கள் வாகிஆ அத்தியாயத்தை ஓதட்டும்” என்று மஸ்ரூக் என்பவர் கூறினார்.
நூல்: முஸன்னப் இப்னு அபீ ஸைபா (பாகம்: 7 பக்கம்: 148)
ஹில்யத்துல் அவ்லியா, பாகம்: 2, பக்கம்: 95)
இந்த ஹதீஸை மஸ்ரூக் என்பவர் அறிவித்துள்ளார். இவர் தாபியீ ஆவார். (நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தவர்) ஒரு அத்தியாயத்திற்குக் குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளது என்று கூற வேண்டுமானால் அல்லாஹ்வோ அல்லது அவனது தூதரோ மட்டுமே கூற முடியும். எனவே மஸ்ரூக் அவர்களின் கருத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
வறுமை ஏற்படாது
யார் ஒவ்வொரு இரவிலும் வாகிஆ அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு வறுமை ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத் (ரலி)
நூல்: ஷுஅபுல் ஈமான் பாகம்: 2, பக்கம்: 491
இதே கருத்து முஸ்னதுல் ஹாரிஸ், பாகம்: 2, பக்கம்: 729, பழாயிலுஸ்ஸஹாபா, பாகம்:2, பக்கம்:726ல் இடம் பெற்றுள்ளது.
ஷுஅபுல் ஈமானின் சில அறிவிப்புகளிலும், இன்னும் சில நூல்களிலும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தன்னுடைய பெண் குழந்தைகளுக்குக் கற்று கொடுப்பவர்களாக இருந்தார்கள் என்று கூடுதலாக இடம்பெறுகிறது.
இதன் எல்லா அறிவிப்புகளிலும் ஸுஜாவு என்பவரும் அஸ்ஸரிய்யு என்பவரும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் யாரென அறியப்படாதவர்கள் என்றும் இந்தச் செய்தி மறுக்கப்பட வேண்டிய செய்தி என்றும் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: அல்இலலுல் முதநாஹிய்யா, பாகம்: 1, பக்கம்: 112)
துகான் அத்தியாயத்தின் சிறப்புகள்
பாவமன்னிப்பு கிடைக்கும் அத்தியாயம்
“யார் (வெள்ளிக் கிழமை) இரவில் ஹாமீம் துகானை ஓதுகிறாரோ அவருக்காக எழுபதாயிரம் வானவர்கள் பாவ மன்னிப்புத் தேடுவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்:திர்மிதி (2813)
இந்த செய்தியில் இடம் பெறும் நான்காவது மற்றும் ஆறாவது அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள் ஆவார்கள்.
இச்செய்தியின் நான்காவது அறிவிப்பாளர் உமர் பின் அபீகஸ்அம் என்பவரைப் பற்றி இமாம் புகாரி அவர்கள், இவர் முற்றிலும் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். அபூஸுர்ஆ அவர்களும் இவரை மிகவும் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார். இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று இப்னு அதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: தஹ்தீப் தஹ்தீப் (பாகம்: 7, பக்கம்: 411)
இச்செய்தியின் ஆறாவது அறிவிப்பாளர் ஸுஃப்யான் பின் வகீவு என்பவரைப் பற்றி இமாம் புகாரி குறிப்பிடும் போது, இவர் மற்றவர்கள் எடுத்துக் கூறினால் அதையே கூறி விடுவார் என்பதால் அவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவர் பொய் சொல்பவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர் என்று அபூஸுர்ஆ அவர்கள் கூறுகிறார்கள். இவர் நம்பகமானவர் அல்ல என்றும், மற்றொரு இடத்தில் இவர் (ஹதீஸ்கலை அறிஞர்கள் பார்வையில்) ஒன்றுமில்லாதவர் என்றும் குறை கூறியுள்ளார்கள்.
நூல்: தஹ்தீப் தஹ்தீப் (பாகம்: 4 பக்கம்: 109)
மேலும் இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்கள், உமர் பின் கஸ்அம் என்பவர் பலவீனமாக்கப்பட்டவர் என்றும், இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று இமாம் புகாரி குறிப்பிட்டதையும் அதே ஹதீஸின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து செயல்பட முடியாது.
இதே கருத்தில் யார் வெள்ளிக்கிழமை இரவு ஹாமீம் துகான் அத்தியாயத்தை ஓதுவாரோ அவர் மன்னிக்கப்படுவார் என்று திர்மிதீயில் 2814வது செய்தியாகவும் இடம்பெற்றுள்ளது. இதைப் போன்று இமாம் பைஹகியின் ஷுஅபுல் ஈமான் என்ற நூலிலும் (பாகம் 2, பக்கம் 484) இடம் பெற்றுள்ளது.
இச்செய்தியில் இடம் பெற்றுள்ள மூன்றாவது அறிவிப்பாளர் ஹிஷாம் அபீ மிக்தாம் என்பவர் பலவீனமானவர் ஆவார்.
இமாம் அஹ்மத் அவர்களின் மகன் அப்துல்லாஹ் மற்றும் அபூ ஸுர்ஆ ஆகியோர் “இவர் ஹதீஸ்துறையில் பலவீனமானவர்’ என்றும், இப்னு மயீன் அவர்களும் இமாம் நஸயீ அவர்களும் “இவர் நம்பகமானவர் அல்ல’ என்றும் இமாம் புகாரி “இவரை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்’ என்றும், இமாம் திர்மிதி அவர்கள் இவரை பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.
இவர் பலவீனமானவர், வலிமை வாய்ந்தவர் அல்ல என்று அபூஹாத்திம் அவர்களும், இவர் நம்பகமானவர் வழியாக இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர்; எனவே இவரை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது என்று இப்னு ஹிப்பான் அவர்களும் கூறியுள்ளார்கள். மேலும் இஜ்லீ, யஃகூப் பின் ஸுஃப்யான் ஆகியோர் இவரைப் பலவீனமானவர் என்று குறை கூறியுள்ளார்கள்.
நூல்: தஹ்தீப் தஹ்தீப் (பாகம் 11, பக்கம் 36)
மேலும் இதை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹஸன் அவர்கள் அபூஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியுறவில்லை என்றும், ஹிஷாம் அபில் மிக்தாம் என்பவர் பலவீனமானவர் என்றும், இதைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே அந்தச் செய்தியின் இறுதியிலேயே குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்த செய்தியை அடிப்படையாக வைத்து செயல்பட முடியாது.
“யார் ஜும்ஆவுடைய இரவில் ஹாமீம் துகானை ஈமானோடும் அதை உண்மைப்படுத்தியவராகவும் ஓதுகிறாரோ அவனுடைய பாவம் மன்னிக்கப்பட்டவராக மாறி விடுவார்” என்று அப்துல்லாஹ் பின் ஈஸா என்பவர் கூறுகிறார்.
நூல்:தாரமி (3286)
இந்த கருத்தை அப்துல்லாஹ் பின் ஈஸா என்பவர் அறிவித்துள்ளார். இவர் தாபியீ ஆவார். (நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தவர்.) ஒரு அத்தியாயத்திற்குக் குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளது என்று கூற வேண்டுமானால் அல்லாஹ்வோ அல்லது அவனது தூதரோ மட்டுமே கூற முடியும். எனவே அப்துல்லாஹ் பின் ஈஸா என்பவரின் கருத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஹுருல் ஈன் பெண்கள் கிடைக்கும்
“யார் ஜும்ஆவின் இரவில் துகான் அத்தியாயத்தை ஓதுகிறாரோ அவருடைய பாவம் மன்னிக்கப்பட்டவராக மாறிவிடுவார். இன்னும் சொர்க்கத்தில் ஹுருல் ஈன் பெண்களை திருமணம் செய்து வைக்கப்படுவார்” என்று அபீராபிவு என்பவர் அறிவிக்கிறார்.
நூல்:தாரமி (3287)
இந்தச் செய்தியை அபூராஃபிவு என்பவர் தன் கருத்தாக அறிவித்துள்ளார். இவரும் தாபியீ ஆவார். எனவே இவரது கருத்தையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
சொர்க்கத்தில் ஒரு வீடு
“யார் ஹாமீம் துகானை ஜும்ஆவின் இரவிலோ ஜும்ஆ நாளிலோ ஓதுவாரோ அவருக்காக சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு வீட்டை கட்டுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஃஜமுல் கபீர் (பாகம்: 8, பக்கம்: 264)
இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் புலால் பின் ஜுபைர் என்பவர் இடம் பெறுகிறார் இவரை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.
“புலால் பின் ஜுபைர் என்பவர் அபூஉமாமா (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களை கேட்டுள்ளார் என்று எண்ணுகிறார்கள். இவரிடமிருந்து பஸராவாசிகள் ஹதீஸில் இல்லாததை அறிவிக்கிறார்கள். எனவே இவரை எந்த நிலையிலும் ஆதாரமாக எடுத்துக் கொள்வது கூடாது” என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்:அல் மஜ்ருஹீன் (பாகம்: 2, பக்கம்: 204)
எனவே இந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு செயல்படமுடியாது.