வழிப்பறிக் கொள்ளைகள் தடுக்கப்படும் என்ற முன்னறிவிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து வழிப்பறிக் கொள்ளை பற்றி முறையீடு செய்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் ‘ஹீரா என்ற ஊர் உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள்.
‘கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘கஃபாவை வலம் வருவதற்காக ஒரு பெண் ஹீரா எனும் ஊரிலிருந்து ஒட்டகத்தில் பயணம் செய்து வருவாள். அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்ச மாட்டாள். உன் வாழ்நாள் அதிகரித்தால் நீ இதைக் காண்பாய்’ என்று என்னிடம் கூறினார்கள்.
‘வழிப்பறிக் கொள்ளை செய்வதில் வல்லவரான தய்யி கோத்திரத்தார் அப்போது எங்கே சென்றிருப்பார்கள்?’ என்று எனக்குள் நான் கூறிக் கொண்டேன் என்று அதீ பின் ஹாதிம் (ரலி) கூறுகிறார்.
நூல் : புகாரி 3595
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறும் போது ஹீரா என்ற ஊருக்கும், மக்காவுக்கும் இடையே வாழ்ந்த தய்யி எனும் கோத்திரத்தார் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். இந்தக் கூட்டம் ஒடுக்கப்படும் என்றும், ஹீரா முதல் மக்கா வரை உள்ள பகுதிகள் முஸ்லிம்களின் கைவசம் வரும் என்றும், மிகச் சீக்கிரத்தில் இது ஏற்படும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.
அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சியில் ஹீரா எனும் பகுதியும் தய்யி கூட்டத்தர் வாழ்ந்த பகுதியும் முஸ்லிம்கள் கைவசம் வந்தன. கொள்ளைக் கூட்டம் ஒடுக்கப்பட்டது. எவ்வித அச்சமுமின்றி தன்னந்தனியாக ஒரு பெண் ஹீராவிலிருந்து மக்கா வரை எவ்வித அச்சமுமின்றி வந்து செல்லும் உன்னதமான நிலை ஏற்பட்டது. அதீ பின் ஹாதிம் (ரலி) வாழ்நாளிலேயே இது நிறைவேறியது.