வரதட்சணை ஒரு வன்கொடுமை

ஆண்கள் பொருளாதாரத்திற்குப் பொறுப்பேற்றுள்ள நமது சமூக அமைப்பில் திருமணத்தை ஒரு வியாபாரமாக ஆக்கிவிட்டது வேதனையான விஷயம். திருமணம் என்றால் ஆரம்பத்திலிருந்தே பெண்களிடம் வரதட்சணையின் பெயராலும், சீர்வரிசை, அன்பளிப்புகள், விருந்துகள் போன்ற பெயராலும் பெண் வீட்டாரை ஆண்கள் சுரண்டி வாழ்வதைப் பார்க்கிறோம். 

திருமணம் முடிந்து பல மாதங்கள் கடந்த பிறகும் குறிப்பிட்ட நாட்களின் பெயரைக் கூறி, அதிலும் முறை வைத்துப் பெண்ணிடமிருந்து மாப்பிள்ளை சீர் பெறுகின்றார்கள். குழந்தை பிறந்தால் அதனைக் காரணமாகக் காட்டி பெண்ணிடமிருந்து பொருளாதாரத்தைப் பிடுங்குவதெல்லாம் நம் சமூக அமைப்பில் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இது முற்றிலும் தவறானது; கண்டிக்கத்தது. 

பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது; அவர்களின் அனைத்துச் செலவுகளுக்கும் ஆண்கள்தான் பொறுப்பாளர்கள் என்று சொல்லும் மார்க்கத்தில், தங்களது தேவைகளுக்காகக் கணவனின் அனுமதியில்லாமல், கணவனைப் பாதிக்காத வகையில் சில பொருளாதாரத்தை மனைவி எடுத்துக் கொள்ளும் உரிமை வழங்கியிருக்கும் மார்க்கத்தில், பெண்கள் தங்களது பொருளாதாரத்தைத் தங்கள் விருப்பப்படி செலவு செய்வதற்கு ஆண்களிடம் கேட்க வேண்டியதில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிற மார்க்கத்தில் இருந்து கொண்டு பெண்களிடம் வரதட்சணை, சீர் வரிசை கேட்பது இஸ்லாம் மார்க்கத்திற்கு முற்றிலும் மாற்றமானது.

திருமணத்தில் பெண்களுக்கு ஆண்கள் பொருளாதாரத்தைக் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் சொன்னதற்குக் காரணம், பெண்கள் இல்லற வாழ்வில் பலவிதமான சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்பதாலும், அவர்கள் பலவீனர்களாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாலும் தான். திருமணத்திற்குப் பின்பு ஆண் பொறுப்பு ஏற்பதைப் போன்றே, திருமணத்திற்கு முன்பே மஹர் எனும் ஜீவனாம்சத் தொகை ஆண்மகனால் வழங்கப்பட வேண்டும் என திருக்குர்ஆன் கூறுகிறது.

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!

(அல்குர்ஆன்:4:4.)

ஆனால் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில்தான் வரதட்சணை பிற சமூக மக்களை விடவும் கடுமையாக தலைவிரித்தாடுகிறது. அதே நேரத்தில் இஸ்லாம் வரதட்சணையைக் கடுமையாக எதிர்த்து நின்று மனித சமுதாயத்தை வழிநடத்துகிறது. வேறு மதங்களில் வரதட்சணை வாங்கக் கூடாது என்று தெளிவான எந்தச் செய்திகளும் இல்லை. ஆண்கள் திருமணம் முடிக்கப் போகும் பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டும் என்ற சட்டமும் இஸ்லாத்தைத் தவிர வேறு மதக் கோட்பாடுகளிலும் கிடைக்கப் பெறவில்லை.

வரதட்சணை வாங்குவது அநியாயம்தான் என்றாலும் முஸ்லிமல்லாத பிற சமூக மக்கள் திருமணத்தின் போது தங்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அவைகளைக் கவனித்து குறைவாக வாங்கிக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் ஆண்கள்தான் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையுடைய நமது சமூகத்தில்தான் பெண்களிடமிருந்து இலட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் வாங்கும் அளவுக்கு வரதட்சணைக் கொடுமை தாண்டவமாடுகிறது.

இதுபோக, வேறு சமூகங்களில் வரதட்சணை என்பது வாங்குபவனுக்கும் கொடுப்பவனுக்கும் மத்தியில் மட்டும் நடக்கிற அநியாயமாகத்தான் இருக்கும். நமது முஸ்லிம் சமுதாயத்தில்தான் ஒட்டுமொத்த சமூகத்தின் அங்கீகாரத்துடனும், ஆசியுடனும், ஆதரவுடனும் வாங்கப்படுகிறது. அல்லாஹ்வை வணங்கும் பள்ளிவாசல்களில் வைத்தும், ஜமாஅத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் முன்னிலையில் சாட்சியுடனும், மார்க்க அறிஞர்களின் துணையுடனும் அல்பாத்திஹா என்று ஓதி ஆதரித்தும் மிகப் பெரிய தொகை வாங்கப்படுகிறது.

பிற சமூக மக்கள் வரதட்சணையை தங்களது மத வழிபாட்டுத் தளங்களான கோவில்களிலோ சர்ச்சுகளிலோ வைத்து வாங்க மாட்டார்கள். எந்தப் பூசாரிகளும், அர்ச்சகர்களும், பாதிரியார்களும் அதை முன்னின்று செய்ய மாட்டார்கள். ஆனால் நமது சமூகத்தில்தான் ஆலிம்களே முன்னின்று அதற்கு மார்க்கத்தின் அங்கீகாரத்தைக் கொடுத்து பெண்களுக்கு எதிரான அநீதம் அரங்கேற்றப்படுகிறது. பாத்திஹா ஓதி வரதட்சணை வாங்குவதும், ஆலிம்களே முன்னின்று செய்வதும், ஜமாஅத் நிர்வாகம் முன்னிற்பதும், பள்ளிவாசலில் இதைச் செய்வதும் சர்வசாதாரணமாக உள்ளது.

வரதட்சணை வாங்குதல் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்றும், மார்க்கக் கடமை என்றும் காட்டத்தான் இப்படி செய்கின்றனர். இப்படி நமது சமூகம் வரதட்சணை வாங்கி பெண்களைக் கொடுமைப்படுத்தியதுதான் இஸ்லாத்திற்குள் பிற சமூக மக்கள் வருவதற்கு முதல் தடையாக நிற்கிறது. இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கை பிற சமூக மக்களுக்குப் பிடித்திருக்கிறது, அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டும் தொழுகை போன்ற வணக்க வழிபாடுகள் பிடித்திருக்கின்றன, வணக்கம் செலுத்தும் போது செய்கிற சுத்தம், அமைதி போன்றவை பிற மார்க்கங்களில் இருக்காது. 

இப்படிக் கடவுள் கொள்கை, மூடநம்பிக்கை இல்லாதது, கொள்கையில் விட்டுக் கொடுக்காத தன்மை, சமத்துவம், பிறரை நேசித்தல், பழக்க வழக்கம், ஒழுக்கமான வாழ்வு என்று இஸ்லாம் பல வழிகளில் பிற சமூக மக்களுக்குப் பிடித்திருந்தாலும், இஸ்லாத்திற்குள் வருவதற்கான முதல் தயக்கம் இந்த சமூகத்தில் தாண்டவமாடும் வரதட்சணைக் கொடுமைதான்.

முஸ்லிம்களின் இந்தக் கேடுகெட்ட நிலையினால் இஸ்லாம் மார்க்கம் அதிக விலை கொடுக்க வேண்டிய மார்க்கமாகத் தெரிகிறது. அவர்களது சமூகத்தில் பெண்களைக் கல்யாணம் முடித்துக் கொடுப்பதாக இருந்தால் பத்தாயிரமோ இருபதாயிரமோ வரதட்சணை கொடுத்தால் திருமணம் முடித்துவிடலாம். இஸ்லாத்திற்குச் சென்றால், பல இலட்சம் கொடுக்க முடியாது என்பதால் இஸ்லாத்தை மனதளவில் ஏற்றுக் கொண்டும், சமூகத்தின் வரதட்சணைக் கொடுமையால் இஸ்லாத்திற்கு வர மறுக்கிறார்கள்.

அப்படி தமிழகத்தில் பல தலைவர்களே அவர்கள் சமூகத்து மக்களை இஸ்லாத்திற்குள் அனுப்பி வைத்துக் கொண்டு, இஸ்லாம் குறித்து பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தாலும் உள்ளே வரமறுப்பதற்குக் காரணம் இந்த வரதட்சணைக் கொடுமைதான். அப்படியே வருவதாக இருந்தால் பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு பிறகு இஸ்லாத்திற்கு வருவதாகச் சொல்கிறார்கள். தங்களது பிள்ளைகளையும் சேர்த்து இஸ்லாத்திற்குள் கொண்டு வரத் தயாராக இல்லை.

இந்தளவுக்கு பிற சமூக மக்களை இஸ்லாத்திற்குள் வரவிடாமல் தடுக்கும் காரணம் வரதட்சணைதான் என்பதை முஸ்லிம்கள் விளங்கிச் செயலாற்ற வேண்டும். ஆண்களும், ஆண்களைப் பெற்றவர்களும் வரதட்சணை வாங்குவது பெருங்குற்றம் என்றும், பெண்களும் பெண்களைப் பெற்றவர்களும் வரதட்சணை கொடுப்பது என்றும் விளங்கி நடக்க வேண்டும்.

நமது மகளுக்குத்தானே கொடுக்கிறோம் என்று தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக் கொள்வதும் வரதட்சணை எனும் குற்றத்தைத் தூண்டும் பாவம் என்பதை வரதட்சணை இல்லா சமூகத்தை உருவாக்க உதவிட வேண்டும். வரதட்சணை என்ற தீமை இஸ்லாத்தின் வளர்ச்சியை மட்டும் கெடுக்கவில்லை. 

இன்னும் ஏராளமான தீங்குகளை உருவாக்கிவிட்டது. ஒரு பெண் பூப்பெய்கிற போது இல்லற வாழ்கைக்குத் தயாராகிவிட்டாள் என்பது உண்மைதான். 12 அல்லது 13 வயதில் பூப்பெய்தாலும் ஓரளவுக்காவது பக்குவப்படுவதற்கு குறைந்த பட்சமாக பதினெட்டு அல்லது 20 வயதாவது பூர்த்தியடைய வேண்டும். இப்படி அரசாங்கமே சொல்கிற 21 வயதுக்குள் ஒரு பெண்ணின் திருமணம் நடந்தேறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பெண்ணுக்கும், அவளது கணவனின் இல்லறத்திற்கும், அவளது ஆரோக்கியத்திற்கும் நல்லது.

இன்றைய காலத்தில் பெண்களின் திருமணம் தள்ளிப்போவதற்குக் காரணம் பொருளாதாரப் பிரச்சனைதான். நிறைய மாப்பிள்ளைமார்கள் பெண் பார்க்கும் போது அதிகமான தொகையை வரதட்சணையாகக் கேட்பதால், பெண்ணின் திருமணம் பொருளாதாரத்திற்காகத் தள்ளிவைக்கப்படுகிறது.

பெண்ணின் தந்தை எவ்வளவு தொகை வைத்துள்ளாரோ அந்தத் தொகைக்குத் தக்க மாப்பிள்ளை வரும் வரை காத்திருப்போம் என்று கடத்துகிறார். இப்படிக் காசு வாங்கிக் கொண்டு பெண்களை திருமணம் முடிக்கும் கபோதிகளால் பெண்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றார்கள். இப்படியே காலங்கள் கடந்து, கடைசியில் பெண்ணுக்கு வயதாகிவிடுகிறது. இந்நிலையில் பெண் தவறான வழியில் உடல் சுகம் அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இன்றைய காலத்தில் பருவ வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் தங்களது கற்பைப் பேணுவது மிகவும் சிரமம் என்றாகிவிட்டது. 

ஏனெனில் தொலைக்காட்சியாக இருந்தாலும், பத்திரிக்கைகளாக இருந்தாலும், புத்தகங்களாக இருந்தாலும், சாதாரணமாக வானொலியைக் கேட்பதாக இருந்தாலும் கூட அது பாலின உணர்வுகளை தூண்டக் கூடிய வகையில் மாறிவிட்டது. எதிலும் நல்ல கருத்துக்களுக்கு மரியாதையில்லாமல் போய்விட்டது. மனிதனை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைக்கும் செய்திகளெல்லாம் இலட்சத்தில் ஒன்று போலாகிவிட்டது. இவ்வளவு மோசமான காலத்தில் திருமணம் தள்ளிப் போனால் அது அந்தப் பெண்ணை ஒழுக்கக் கேட்டிற்குக் கொண்டுசென்றுவிடும்.

தகப்பனால் திருமணம் முடித்துத் தர முடியாமல் போனதற்கு ஒரு பெண் காரணங்களை ஆய்வு செய்வாள். தகப்பனாரின் பொருளாதாரம் சாப்பாட்டுக்குத்தான் உதவும். பல இலட்சங்கள் கேட்கும் இந்த சமூக ஆண்களிடம் நம்மைத் திருமணம் முடிக்க நினைத்தால் நம் தந்தையால் அது இயலாது என்று முடிவெடுத்து சிலபேர் எந்த சமூகத்து ஆணாக இருந்தாலும் நாமே நமது துணையை குறுக்கு வழியில் தேடிக் கொள்ள வேண்டியதுதான் என்று எடுத்தேறிச் செல்வதைப் பார்க்கிறோம்.

அப்படி யாரேனும் ஒருசில பெண்கள் முஸ்லிம் சமூகத்தை விட்டு எடுத்தேறிச் செல்லும் போது பல பேருக்குக் கோபம் கொத்தளிக்கும். பேச்சுக்களெல்லாம் காரசாரமாகப் பேசுவார்கள். அந்தப் பெண் சமூகத்தைத் தாண்டிச் செல்வதற்கு நம்மைப் போன்ற இளைஞர்கள்தான் காரணம் என்பதை ஏனோ உணர மறுக்கிறார்கள். அல்லது இளைஞர்களைப் பெற்ற பெற்றோர்கள்தான் காரணம் என்பதை உணர மறுக்கிறார்கள்.

இப்படிக் குறை சொல்பவர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் முடிக்க நான் தயார் என்று வந்தால் பெண் இப்படியான முடிவை ஒருபோதும் எடுத்திருக்கவே மாட்டாள். வரதட்சணை கேட்கக் கூடாது, தந்தாலும் வாங்க மாட்டோம் என்ற முடிவை சமூகத்திலுள்ள அனைவரும் எடுத்தால் எடுத்தேறிச் செல்லும் போக்கு நடக்காது. எனவே பெண்களிடம் வரதட்சணை கேட்பது அந்தப் பெண்கள் இஸ்லாத்தை விட்டுவிட்டு பிறமதத்தில் துணையைத் தேடுவதற்கு வழிவகை செய்யும் தீமையாக இருக்கிறது.

பொருளாதாரம் இல்லாமல் வரதட்சணை தாண்டவத்தால் பாதிக்கப்பட்டோரில் சிலர், திருமணத்தின் மூலமாக இல்லறத்தை அனுபவிக்க முடியாமல் குறுக்கு வழியில் ஒழுக்கக் கேட்டில் விழுந்துவிடுவதையும் பார்க்கிறோம். ஒழுக்கக் கேட்டை நாம் ஒரு போதும் ஆதரிக்க முடியாது. இருப்பினும் அதற்கான காரணங்களைக் களைய வேண்டும். ஆணோ பெண்ணோ குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் முடிக்கவில்லையெனில் அவர்களது உணர்வுகள் தூண்டப்படும். மனிதன் உணர்வுகளுடன்தான் படைக்கப்பட்டிருக்கிறான். 

எனவே திருமணம் என்ற வடிகால் கிடைக்காவிட்டால் தப்பான முறையைத்தான் தேடுவான். ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்தத் தண்ணீர் ஏரியிலிருந்து வெளியேறுவதற்கு ஆங்காங்கே சில மதகுகளைத் திறந்து தண்ணீரின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி மதகுகளைத் திறக்காவிட்டால் ஏரியே உடைந்து காட்டாற்று வெள்ளமாக அடித்துச் சென்றுவிடுவது இயற்கை.

அதுபோன்றுதான் மனிதர்களின் உணர்வுகளும் உணர்ச்சிகளும். அதற்கான பருவம் வரும் போது அதை மதகு போன்ற வடிகாலை அதாவது திருமணம் என்ற வடிகாலை வைத்துச் சரிசெய்யாவிட்டால் தாறுமாறாக உடைந்துவிடும் என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களின் திருமணத்திற்குத் தடையாக அமைந்துள்ள வரதட்சணை என்ற அரக்கனை அழிக்க முன்வரவேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *