நம்முடைய அமல்கள் இக்காரியத்தினால் அழிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிற முதல் நிலையில் இருப்பது இந்த செல்ஃபி மோகமாகத்தான் இருக்க முடியும்
பொதுவாகவே வணக்கங்கள் அனைத்தையும் இறைவனுக்காகவே செய்ய வேண்டும். தொழுகையோ, நோன்போ, ஹஜ்/ உம்ரா போன்ற எந்த வணக்கமாக இருந்தாலும் அதை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்காக நிறைவேற்ற வேண்டும். அதில் முகஸ்துதி, விளம்பர நோக்கு கலந்து விடக் கூடாது.
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப் படவில்லை. இதுவே நேரான மார்க்கம். (அல்குர்ஆன் 98:5)
வணக்கத்தை உளத் தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை நான் வணங்க வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் முதலாமவனாக நான் ஆக வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன் எனக் கூறுவீராக! என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனைக்கு அஞ்சுகிறேன் என்றும் கூறுவீராக! உளத்தூய்மையுடன் எனது வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனையே வணங்குவேன் எனவும் கூறுவீராக! (அல்குர்ஆன் 39:11-14)
இந்த வசனங்கள் வணக்கத்தைக் கலப்பற்றதாக்கி வணங்க வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
ஹஜ்ஜைப் பற்றி இறைவன் கூறும் போது, அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! (அல்குர்ஆன் 2:196) என்று கூறுகின்றான்.
மேலே சுட்டிக்காட்டப்பட்ட இறை போதனைகள் அனைத்தும் வணக்கங்கள் உளத்தூய்மையுடன் இருக்க வேண்டுமென கட்டளையிடுகிறது.
ஆகவே இந்த செல்ஃபி எடுத்து சமூக வளையத்தளங்களில் பகிர்வதை தவிர்த்துக் கொள்வது (اَقۡرَبُ لِلتَّقۡوٰى) இறையச்சத்திற்கு நெருக்கமானது
الله اعلم