*வட்டிக்கு மார்க்கத்தில் அறவே அனுமதி இல்லையா?*
இஸ்லாமியப் பொருளாதாரத்தில் வட்டிக்கு அறவே அனுமதி இல்லை. *வட்டியில் இருந்து முற்றிலுமாக முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும்.*
வட்டியைக் குறித்து இஸ்லாம் கடுமையான போக்கைக் கொண்டுள்ளது. *வட்டி வாங்குவோர் அல்லாஹ்வுடன் போர் செய்பவர்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.*
மேலும் *வட்டி வாங்குவோருக்கு நிரந்தர நரகம்* எனவும் அல்லாஹ் எச்சரிக்கிறான்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் *வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்*! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் *அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்*! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.
திருக்குர்ஆன் 2:278, 279
கொடும் வட்டிதான் தடுக்கப்பட்டுள்ளது; சிறிய அளவிலான வட்டிக்குத் தடை இல்லை என்று சிலர் வாதிட்டு இதற்கு ஆதாரமாகப் பின்வரும் வசனத்தை எடுத்துக் காட்டுகின்றனர்.
நம்பிக்கைகொண்டோரே! *பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்*! இதனால் வெற்றி பெறுவீர்கள்.
திருக்குர்ஆன் 3:130
பன்மடங்கு வட்டி கூடாது என்றுதான் அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான்; எனவே சிறிய வட்டிக்கு அனுமதி உள்ளது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
*பன்மடங்காகப் பெருகும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள் என்ற சொற்றொடர் இவர்கள் கூறும் கருத்தில் பயன்படுத்தப்படவில்லை.* சிறிய வட்டியாக இருந்தாலும், பெரிய வட்டியாக இருந்தாலும் வட்டியின் தன்மையே பன்மடங்காகப் பெருகுவதுதான்.
ஒரு பொருளை ஒருவர் ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார். அதில் அவருக்கு ஐம்பது ரூபாய் லாபம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ஐம்பது ரூபாய் லாபத்துடன் அந்த வியாபாரம் முடிந்து விடுகிறது.
ஆனால் ஆயிரம் ரூபாயை ஒருவர் மாதம் ஐம்பது ரூபாய் என்று வட்டிக்குக் கொடுக்கிறார். மாதாமாதம் ஐம்பது ரூபாய் என்று அது பன்மடங்காகிக் கொண்டே இருக்கும். *பத்து ரூபாய் வட்டி என்று வைத்தாலும் அதுவும் பன்மடங்காகப் பெருகிக் கொண்டுதான் இருக்கும். வட்டியின் தன்மையே அதுதான். பெரிய வட்டி பெரிய அளவில் பன்மடங்காகும். சிறிய வட்டி சிறிய அளவில் பன்மடங்காகப் பெருகும்.*
இதுதான் சிறிய வட்டிக்கும் பெரிய வட்டிக்கும் உள்ள வேறுபாடு.
எனவேதான் பன்மடங்காகப் பெருகிக் கொண்டுள்ள நிலையில் வட்டியை உண்ணாதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். சிறிய வட்டியை அனுமதிக்கும் வகையில் இந்த வாசகம் அமையவில்லை.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! *நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வரவேண்டிய வட்டியை விட்டு விடுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.* பார்க்க 2:278,279
சிறிய வட்டி கூடும் என்றால் வரவேண்டிய வட்டியில் பெரிய வட்டியை விட்டு விடுங்கள் என்று அல்லாஹ் சொல்லி இருப்பான். வரவேண்டிய வட்டி சிறிதாக இருந்தாலும், பெரிதாக இருந்தாலும் அதை விட்டுவிட வேண்டும் என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளதால் வட்டி முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம்.
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது :
பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், *வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்*.
நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றையும் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
நூல் : புகாரி 2086 5347 5945
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், *வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதை எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள்* ஆவர் என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 4177