வங்கி வெப்சைட்களின் குறைபாடுகளை சரிசெய்து கொடுக்கலாமா?
வட்டி தொடர்புடைய வேலைகளை நீங்கள் செய்து கொடுப்பதே தவறு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வட்டி தொடர்புடைய வேலைகளைச் செய்பவர்களைச் சபித்துள்ளார்கள்.
வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (3258)
வெப்சைட் என்பது ஒரு நல்ல சாதனம். அதனை சிலர் நன்மைக்கும் சிலர் தீமைக்கும் பயன்படுத்துகிறார்கள்.
ஒருவர் தீமையான காரியத்திற்கு பயன்படுத்தும் வெப்சைட்டுகளை நாம் தொழில் ரீதியாக சோதனை செய்து குறைபாடுகளைத் தெரிவிப்பது அந்தத் தீமையை ஆதரிப்பதாக ஆகாது.
உதராரணமாக தொலைக்காட்சியை நல்ல நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கும் பயன்படுத்தலாம். மார்க்கம் தடுத்துள்ள நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கும் பயன்படுத்தலாம்.
இந்நிலையில் தொலைக்காட்சியை ரிப்பேர் செய்து கொடுக்கும் தொழில் செய்கின்ற ஒருவரிடம் மார்க்கம் தடுத்துள்ள நிகழ்ச்சிகளைப் பார்க்கின்ற ஒருவர் தன்னுடைய தொலைக்காட்சியை சரி செய்வதற்காகக் கொடுக்கின்றார். இப்போது தொலைக்காட்சியை ரிப்பேர் செய்து கொடு்ப்பவரை தீமைக்கு துணை செய்பவர் என்று யாரும் கூறுவதில்லை.
ஒருவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்கின்றார். அதில் ஏறிய பயணி தன்னை சினிமா தியேட்டரில் விடுமாறு கூறினால் ஆட்டோ ஓட்டுநர் தீமைக்குத் துணை செய்து விட்டார் என்று யாரும் கூறுவதில்லை.
சோதனை செய்து குறைபாடுகளைத் தெரிவிக்கும் தொழில் செய்வது மார்க்கத்திற்கு எதிரானது கிடையாது . ஒருவர் நாம் சரி செய்து கொடுப்பவற்றை தவறான காரியத்திற்குப் பயன்படுத்தினால் அவர் தான் குற்றவாளியாகக் கருதப்படுவாரே தவிர நம் மீது குற்றமில்லை.