வங்கியில் ஆவண பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றலாமா?
வங்கியில் ஆவண பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றலாமா? இப்பிரிவில் ஆவணங்களைப் பாதுகாக்கின்ற வேலை மட்டும்தான் நடைபெறும். வட்டி வாங்குதல், கொடுத்தல், கணக்கெழுதுதல், சாட்சியாக இருத்தல் போன்ற எந்த ஒன்றிலும் நாம் பங்கு பெறுதல் வராது.
வங்கியில் தூய்மைப் பணிகளில் ஈடுபடக் கூடியவர், டீ காபி செய்து கொடுப்பவர் போன்ற பணிகளில் ஈடுபடலாம்; வட்டிக்கு கணக்கு எழுதக் கூடியவர்களாக, வட்டிக்கு சாட்சி சொல்லக்கூடிய பணிகளில் ஈடுபடக்கூடாது என்பது நம்முடைய ஜமாஅத்தின் நிலைப்பாடாக இருக்கும் போது, வங்கியில் இந்த ஆவணங்களைப் பாதுகாக்கும் துறையில் பணி செய்வது மார்க்க அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதா? என்பதை குர்ஆன் சுன்னா அடிப்படையில் தெளிவுபடுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம்.
ஒரு முஸ்லிம் எந்தெந்தப் பொருட்களை விற்பனை செய்யலாம்? எந்ததெந்த நிறுவனங்களில் வேலை செய்யலாம்? என்பது தொடர்பான ஏராளமான சந்தேகங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் நிறைந்து காணப்படுகிறது. இதற்கான பதிலை நாம் விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக மக்களுக்கு இது தொடர்பாக எழும் கேள்விகளைப் பின்வருமாறு நாம் வகைப்படுத்தலாம்.
- பாவமான காரியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தில் ஊழியராகச் சேர்ந்து அனுமதிக்கப்பட்ட வேலைகளைச் செய்யலாமா?
- நாம் விற்பனை செய்யும் பொருள் ஹலாலாக இருக்கும் போது நம்மிடம் இருந்து அதனை விலைக்கு வாங்குபவர் அதனைத் தடுக்கப்பட்ட காரியத்திற்கு பயன்படுத்தினால் நாம் தீமைக்கு துணை செய்தவராக ஆவோமா?
- நம்மிடம் உள்ள ஹலாலான ஒரு பொருளை பாவமான காரியங்கள் நடக்கும் ஒரு இடத்திற்கு தேடிச் சென்று விற்பனை செய்யலாமா?
என்பன போன்ற கேள்விகள் மக்களிடம் எழுகின்றன.
இக்கேள்விகளுக்கான விடையை நாம் ஒவ்வொன்றாகக் காண்போம்.
- பாவமான காரியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தில் ஊழியராகச் சேர்ந்து அனுமதிக்கப்பட்ட வேலைகளைச் செய்யலாமா?
வங்கிப் பணி குறித்த மேற்கண்ட கேள்வி இந்த வகையில் உள்ளது தான்.
வங்கியில் ஆவணங்களைப் பாதுகாப்பது குறித்து நுணுக்கமாக நாம் அறிந்து கொள்ள வேண்டும். இரு தரப்புக்கு மத்தியில் நடந்த வட்டி தொடர்பான ஆவணங்களை ஒருவர் பாதுகாக்கிறார் என்றால் அவர் வட்டியை எழுதியவராக மாட்டார். முன்னரே எழுதிக் கொண்ட தகவலைத் தான் இவர் பதிவு செய்கிறார்.
ஒருவர் பொருள் பாதுகாப்பு மையம் வைத்துள்ளார். அதில் கட்டணம் வாங்கிக் கொண்டு மக்களின் பொருட்களைப் பாதுகாத்து வருகிறார். அதில் வங்கிகள் தமது ஆவணங்களைப் பாதுகாக்க ஒப்படைத்தால் அதை அவர் பாதுகாக்கலாம். ஏனெனில் இவர் வட்டியை எழுதிய குற்றத்தைச் செய்யவில்லை. மாறாக முன்னரே எழுதிக் கொண்ட விபரத்தை தகவலைத்தான் பாதுகாக்கிறார்.
பெரிய வர்த்த நிறுவனங்களில் நாம் கொண்டு செல்லும் பொருட்களைப் பாதுகாக்கும் பிரிவு இருக்கும். நாம் கொடுக்கும் பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டு நமக்கு டோக்கன் தருவார்கள். நாம் திரும்பிச் செல்லும் பொது அந்த டோக்கனைக் கொடுத்து நமது பொருளைப் பெற்றுக் கொள்வோம்.
நாம் கொடுக்கும் பொருளை அவர்கள் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இங்கே அடிப்படை. அந்தப் பொருள் தடுக்கப்பட்ட முறையில் சம்பாதிக்கப்பட்ட பொருளாக இருந்தால் அவர்கள் அதனைப் பாதுகாப்பதினால் குற்றவாளியாக ஆகிவிட மாட்டார்கள். அந்தப் பொருள் வட்டி சம்பந்தமான ஆவணமாக இருக்கலாம். அப்படி இருந்தால் நாம் வட்டியை எழுதியவராக மாட்டோம்.
கணக்கர் வேலை பார்ப்பதும், ஆடிட்டர் வேலை பார்ப்பதும் இவ்வாறுதான்.
இந்த வகையில் ஆவணப்பாதுகாப்பு வட்டியை எழுதியதில் சேராது. இருவருக்கு மத்தியில் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்தின் போது அவர்களுக்கிடையே எழுதப்பட்ட வட்டி சம்பந்தமான ஆவணங்களை நம்மிடம் தருவார்கள். அதை நாம் பஞ்சாயத்து முடியும் வரை நாம் பாதுகாப்போம்.
அது போல் நமது வங்கிக் கணக்கின் வருடாந்திர ஸ்டேட்மெண்டை வாங்கி நாம் பாதுகாத்து வைப்போம். அந்த ஸ்டேட்மெண்டில் நமது வட்டி கணக்கும் எழுதப்பட்டு இருக்கும். நாம் வட்டியை வாங்காவிட்டாலும் அந்த ஸ்டேட்மெண்டில் வட்டியைக் குறிப்பிட்டு இருப்பார்கள்.
இவற்றைப் பாதுகாப்பதால் நாம் வட்டியை எழுதியவர்களாக ஆக மாட்டோம். மாறாக ஏற்கனவே எழுதப்பட்ட தகவலைத் தான் நாம் பாதுகாக்கிறோம்.
நான் இன்னாரிடம் கடன் வாங்கினேன். இவ்வளவு தொகைக்கு இவ்வளவு வட்டி போட்டார் என்று நமக்குக் கடிதம் வந்து அந்தக் கடிதத்தை நாம் பாதுகாத்தால் அது வட்டியை எழுதியதாக ஆகாது. மாறாக முன்னர் எழுதப்பட்ட தகவலை நாம் பாதுகாக்கிறோம் என்பதாகவே ஆகும்.
அறியாமைக் காலத்தில் வங்கியில் வட்டிக்குக் கடன் வாங்கியவர் இப்போது திருந்தி விட்டார்; ஆனால் வங்கிகள் இவரது கடனை வசூலித்தே தீரும் என்பதால் அது தொடர்பான கணக்கை இவர் எழுதி பாதுகாத்து வந்தால் வட்டியை எழுதிய குற்றத்தில் சேரமாட்டார்.
இது போல் இன்னும் பல விஷயங்கள் உள்ளன. அவை வட்டியை எழுதுதல் என்பதில் சேராது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.
ஒருவர் ஒரு கடையில் கணக்கராக அல்லது ஆடிட்டராக பணிபுரிகிறார். அந்தக் கடை உரிமையாளர் தன்னுடைய வங்கிக் கணக்கை எழுதுமாறு அல்லது தணிக்கை செய்யுமாறு தன்னுடைய பணியாளருக்குக் கூறுகிறார். அந்தக் கணக்கர் அல்லது ஆடிட்டர் அதனை எழுதினால் அல்லது தணிக்கை செய்தால் இவர்கள் கணக்கை எழுதுகிறார்கள் என்று ஆகுமே தவிர வட்டியை எழுதிய குற்றவாளிகளாக மாட்டார்கள்.
அது போல் தான் ஆவணங்களைப் பாதுகாப்பதும் வட்டியை எழுதிய குற்றத்தில் சேராது.
இது முதலில் தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.
ஆனால் மேற்கண்ட பணிகளை வங்கியின் ஊழியராக இருந்து கொண்டு இருந்து கொண்டு செய்தால் அப்போது அவர் வட்டிக்குத் துணை செய்த குற்றத்தைச் செய்தவராவார்.
பாவமான காரியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எந்த ஒரு நிறுவனத்திலும் ஊழியராகப் பணியாற்றுவது கூடாது. அந்த ஊழியர் செய்யும் பணி, பாவமில்லாத காரியமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தில் பணியாற்றுவது தீமையைச் செய்வதாகவே கருதப்படும்.
உதாரணமாக ஒருவர் மதுபானக் கடையில் ஊழியராகப் பணியாற்றுகிறார். ஆனால் அவர் மது குடிப்பவர்களுக்கு ஊறுகாய், மீன் வறுவல் மட்டுமே விற்பனை செய்கின்றார்.
ஊறுகாய், மீன் வறுவல் விற்பனை செய்வது ஹலாலாக இருந்தாலும் அதனை மதுபானக் கடை ஊழியராக இருந்து கொண்டு மதுபானக் கடையில் விற்பனை செய்தால், மதுபானம் விற்பது எப்படிக் குற்றமோ அதே குற்றம்தான் அந்த நிறுவனத்தில் ஊழியராக இருந்து கொண்டு ஹலாலான பொருளை விற்பனை செய்வதும் என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.
(அல்குர்ஆன் 4:140)
தீமையான காரியங்களை நாம் செய்யாவிட்டாலும் அக்காரியங்கள் நடைபெறும் இடங்களிலும், நிகழ்ச்சிகளிலும், வைபவங்களிலும் நாம் பங்கெடுத்தால் நாமும் அத்தீமையைச் செய்ததாகவே இறைவனால் கருதப்படுகின்றது என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
இது போன்றுதான் வங்கியில் ஆவண பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றுவதும்.
வங்கியின் ஆவணங்களைப் பாதுகாக்கின்ற ஆவணப் பிரிவில் பணியாற்றினாலும் அவர் வங்கியின் ஊழியரேயாவார். எனவே தீமையான காரியத்தைச் செய்கின்ற ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவரும் அந்தத் தீமையின் பங்குதாரராகவே கருதப்படுவார். எனவே வங்கியில் டாக்குமெண்டேசன் பிரிவில் பணியாற்றுவதும் தீமைக்கு துணை புரிவதாகும்.
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
அல்குர்ஆன் (5:2)
மேற்கண்ட வசனத்தில் நன்மையான காரியத்திலும், இறையச்சமான காரியத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளலாம் என்றும், பாவமான காரியத்திலும் வரம்பு மீறும் காரியத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்வது கூடாது என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
வட்டியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றுவது அந்த நிறுவனத்தின் பாவமான காரியத்திற்குத் துணை செய்வதாகத்தான் ஆகும்.
எனவே வங்கியில் ஆவணப் பாதுகாப்பு பிரிவு உட்பட எந்தப் பிரிவிலும் பணியாற்றுவது கூடாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், ‘‘இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (3258)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மது பானத்தையும், அதைப் பருகுபவரையும், பிறருக்கு பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும், அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்பவரையும், அதைச் சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: இப்னு மாஜா 3371
பாவமான காரியங்களுக்கு எந்த விதத்திலும் துணையாக இருப்பது கூடாது என்பதை மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
வங்கியில் வட்டி சாராத பணிகள் செய்யலாம் என்பதே இதற்கு முன்னர் நமது நிலைப்பாடாக இருந்தது. உதாரணமாக வங்கியில் வாட்ச்மேனாக வேலை பார்ப்பது, டீ வாங்கிக் கொடுப்பது இது போன்ற வேலைகளைச் செய்வது தவறில்லை என்று முன்னர் குறிப்பிட்டிருந்தோம். நீங்களும் உங்கள் கேள்வியில் அதனைக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
ஆனால் இதுபோன்ற வேலைகளுக்காக வங்கியில் ஒருவர் ஊழியராகப் பணியாற்றினாலும் அது கூடாது என்பதே மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் சரியானதாகும் என்பதை நாம் இங்கே தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.
ஒரு கட்டடப் பொறியாளர் வங்கியின் ஊழியராக ஆக்கப்பட்டு, அந்த வங்கியின் கட்டடத்தைப் பராமரிக்கும் வேலையைச் செய்தால் அது குற்றமாகும். ஆனால் அதன் ஊழியராக இல்லாமல் மற்றவர்களுக்குச் செய்து கொடுப்பது போல் வங்கிக்கும் கட்டடப் பராமரிப்பு செய்தால் அது குற்றமில்லை.
முதலாவது தீமை நடக்கும் நிறுவனத்தில் ஒருவராக இருந்து கொண்டு செய்த குற்றமாக உள்ளது. எல்லா நேரமும் அந்த நிறுவனத்தின் அங்கமாக இவர் இருக்கிறார். இது மேற்கண்ட வசனம் மூலம் தடுக்கப்படுகிறது. இரண்டாவதாக நாம் குறிப்பட்டவர் அதன் ஊழியராக இல்லாமல் மார்க்கம் அனுமதித்த காரியத்தைச் செய்தவுடன் அதன் உறவை முறித்து விடுகிறார்.
வங்கிக்கு பீரோ, ஸ்டேஸனரி பொருட்கள், டேபிள், சேர்கள் விற்பனை செய்வதும் குற்றமாகாது. ஏனெனில் அதன் ஊழியராக இல்லாத நிலையில் ஹலாலான பொருளைத் தான் அவர் விற்பனை செய்கிறார்.
- நாம் விற்பனை செய்யும் பொருள் ஹலாலாக இருக்கும் போது நம்மிடம் இருந்து அதனை விலைக்கும் வாங்குபவர் அதனைத் தடுக்கப்பட்ட காரியத்திற்குப் பயன்படுத்தினால் நாம் தீமைக்குத் துணை செய்தவராக ஆவோமா?
எந்தத் தீய காரியத்திற்காகவும் ஒரு முஸ்லிம் துணை போகக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.
நீங்கள் நல்ல காரியங்களுக்கும், இறையச்சத்திலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! தீய காரியத்திலும் வரம்பு மீறலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளக் கூடாது.
(பார்க்க: அல்குர்ஆன் 5:2)
தீமையான காரியங்களுக்கு உதவக் கூடாது என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் தீமையான காரியங்களுக்கு உதவுவது என்பதைப் புரிந்து கொள்வதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.
தீமைக்குத் துணை போகக் கூடாது என்று கூறும் மேற்கண்ட வசனத்தில் நன்மைக்கு உதவுமாறும் கூறப்படுகிறது. நன்மைக்கு உதவுதல் என்பதை எவ்வாறு புரிந்து கொள்கிறோமோ அவ்வாறு தான் தீமைக்குத் துணை செய்தல் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் பள்ளிவாசல் ஒன்றைக் கட்ட எண்ணுகிறார். அதற்கான வேலையிலும் ஈடுபடுகிறார். பள்ளிவாசல் கட்டுவது நல்ல காரியம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தக் கட்டடத்திற்குத் தேவையான பொருட்களை ஒரு வணிகரிடம் அவர் வாங்குகிறார். பள்ளிவாசல் கட்டும் நல்ல பணிக்காக அந்த வணிகர் தமது சரக்குகளை விற்றதால் அவர் நன்மைக்குத் துணை செய்தவராக முடியாது. ‘இவர் தான் பள்ளிவாசல் கட்ட உதவியவர்’ என்று அவரைப் பற்றி நாம் குறிப்பிடுவதில்லை. அந்த வணிகர் இலவசமாக அவற்றை வழங்கினால் அல்லது பள்ளிவாசல் கட்டும் பணி என்பதற்காக மற்ற எவருக்கும் விற்பதை விட சலுகை விலைகளில் வழங்கினால் மட்டுமே அவர் பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு உதவினார் என்போம்.
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட பொருளை நாம் விற்பனை செய்கிறோம். நம்மிடம் அப்பொருளை வாங்கியவர் தீய காரியத்துக்குப் பயன்படுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். இது தீமைக்குத் துணை புரிவதாக ஆகாது. ஒரு சிலை நிறுவுவதற்காக அதே வணிகரிடம் கட்டுமானப் பொருட்களை வாங்குகின்றனர். அந்த வணிகர் இலவசமாக அப்பொருளைக் கொடுத்தாலோ அது சிறந்த பணி என்று கருதி விலையில் சலுகை அளித்தாலோ அப்போது அவர் தீமைக்குத் துணை செய்தவராவார். அவ்வாறு இல்லாமல் மற்ற பணிகளுக்கு விற்பது போல் அவர் விற்பனை செய்தால் அவர் தீமைக்குத் துணை போனவராக மாட்டார்.
நன்மையான காரியத்துக்கு உதவுதல் என்பதில் ‘உதவுதல்’ என்பதை எந்தப் பொருளில் நாம் விளங்குகிறோமோ அதே பொருளில் தான் தீமையான காரியங்களுக்கு உதவுதல் என்பதிலும் ‘உதவுதல்’ என்பதற்குப் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் தீமைக்கு உதவக் கூடாது என்று சொல்வதற்கு ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்படும் 5:2 வசனம் தான் நன்மைக்கு உதவ வேண்டும் எனவும் கூறுகின்றது. இரண்டிலும் ஒரே வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் முக்கியமான நிபந்தனையை நாம் கவனத்தில் கொள்ள வைக்க வேண்டும். விற்பனை செய்யப்படும் பொருள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பூவைப் பயன்படுத்துவதற்கு இஸ்லாம் தடை விதிக்கவில்லை. எனவே பூவை நாம் எவருக்கும் விற்கலாம். வாங்குபவர் அதைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு நாம் பொறுப்பாளியாக மாட்டோம்.
இலவசமாகவோ, மற்ற காரியங்களை விட சலுகை விலையிலோ வழங்கும் போது தான் எந்தக் காரியங்களுக்குப் பயன்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஒரு ஜவுளிக் கடையில் துணி விற்பனை செய்யும் போது வாங்கும் மனிதன் அதனைக் கற்சிலைக்கு அணிவிப்பதற்காகப் பயன்படுத்துவானோ வேறு எதற்கும் பயன்படுத்துவானோ என்றெல்லாம் நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. தேங்காய் வியாபாரி, தன்னிடம் வாங்கப்படும் தேங்காய்கள் சிலைகள் முன்னே உடைக்கப்படுமோ என்றெல்லாம் புலன் விசாரணை செய்ய வேண்டியதில்லை.
ஒருவரின் வண்டியில் வாடகை கொடுத்து பயணிப்பவர் எந்த நோக்கத்திற்காக பயணிக்கிறார் என்பதை வண்டி ஓட்டுபவர் கவனிக்க வேண்டியதில்லை.
போர்க்களத்தில் அணிந்து கொள்ளும் தமது கவசத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் அடகு வைத்துள்ளார்கள்.
புகாரி: 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467
அந்தக் கவசம் அந்த யூதரால் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை.
உண்ணவும், பருகவும், பயன்படுத்தவும், வைத்திருக்கவும் எப்பொருட்களுக்கு இஸ்லாம் தடை விதித்து விட்டதோ அவற்றை மட்டுமே விற்கலாகாது. நன்மை தீமை ஆகிய இரண்டு வழிகளிலும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ள பொருட்களை நாம் விற்க எந்தத் தடையும் இல்லை. வாங்குபவன் தீமைக்குப் பயன்படுத்துவதற்கு நாம் பொறுப்பாளியாக முடியாது.
எந்த நிலையிலும் தாயத்து விற்கலாகாது. அதில் நன்மைக்குப் பயன்படுதல் என்ற அம்சம் கிடையாது. அது முழுக்க முழுக்க பித்தலாட்டமாகும்.
எந்தப் பொருளை உண்ணவோ, பருகவோ, பயன்படுத்தவோ இறைவன் தடை விதித்து விட்டானோ அவற்றை விற்பதும் கூடாத ஒன்றாகும்.
யூதர்கள் மீது கொழுப்பை இறைவன் ஹராமாக்கியிருந்தான். அவர்கள் அதை விற்று அதன் கிரயத்தை உண்ணலானார்கள். அவர்களை அல்லாஹ் அழிப்பானாக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி),
நூல்: புகாரி 2223, 2234, 2236, 3460, 4633
ஒரு சமுதாயத்தின் மீது ஒரு பொருளை உண்பதற்கு இறைவன் தடுத்து விட்டால் அதை வியாபாரம் செய்வதையும் தடுத்து விடுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: அபூதாவூத் 3026, அஹ்மத் 2111
நாய் விற்ற கிரயத்தையும், விபச்சாரத்தின் கூலியையும், சோதிடன் பெருகின்ற பொருளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: உக்பா இப்னு அம்ரு (ரலி),
நூல்: புகாரி 2237, 2282, 5346, 5761
முற்றிலும் தடுக்கப்பட்ட காரியத்துக்காக நமது கட்டடத்தை வாடகைக்கு விடக் கூடாது. நமக்குச் சொந்தமான இடத்தை விபச்சார விடுதி நடத்த நாம் வாடகைக்கு விடுவது கூடாது. அது போன்று பேங்க் நடத்துவதற்கும் நம்முடைய கட்டடத்தை வாடகைக்கு விடுவது கூடாது.
ஒரு முஸ்லிம் அல்லாதவர் குடியிருப்பதற்காக நம்முடைய வீட்டை வாடகைக்குக் கேட்கிறார். குடியிருப்பதற்கு வாடகைக்கு விடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும். ஆனால் வாடகைக்கு வாங்கியவர் அந்த வீட்டில் ஷிர்க்கான காரியங்களைச் செய்தால் நாம் குற்றவாளி ஆகமாட்டோம்.
ஒருவருக்கு ஒரு வீட்டை நாம் விற்பனை செய்த பிறகு அதில் அவர் பாவமான காரியங்களைச் செய்தால் எப்படி அக்குற்றம் நம்மைச் சாராதோ அது போன்று பாவமில்லாத காரியத்திற்காக வாடகைக்கு பெற்றவர் அந்த வாடகைக் காலத்தில் பாவமான காரியங்களைச் செய்தால் நம்மீது குற்றம் ஏற்படாது. இது தீமைக்குத் துணை செய்தலாக ஆகாது.
ஒரு வியாபாரி விற்பனை செய்யும் பொருட்களில் நன்மைக்கும் தீமைக்கும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஏராளமாக உள்ளன. உதாரணமாக மஞ்சள் தூள், சாம்பிராணி, ஊதுபத்தி, பேரீச்சை, நல்லெண்ணை, நெய், தீப்பெட்டி போன்றவற்றைக் குறிப்பிடலாம். (உதாரணத்திற்குத்தான் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளோம்)
இவற்றை நல்ல காரியத்திற்கும், தீய காரியத்திற்கும் பயன்படுத்தலாம். இது போன்றவைகளை விற்பனை செய்வதில் எந்தக் குற்றமுமில்லை. உங்களிடம் இந்தப் பொருட்களை வாங்கிய ஒருவன் பூஜை போன்ற பாவமான காரியங்களுக்குப் பயன்படுத்தினால் விற்பவன் மீது எந்தக் குற்றமும் ஏற்படாது.
அது போல் தீமைக்கு மட்டுமே பயன்படக் கூடிய பொருட்களும் உள்ளன. அவற்றை விற்பனை செய்வது கூடாது. அப்படி விற்பனை செய்தால் அது தீமைக்குத் துணை செய்வதாகும். உதாரணமாக விபூதி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இந்தப் பொருட்களை இஸ்லாமிய அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட எந்தக் காரியத்திற்கும் யாரும் பயன்படுத்துவதில்லை. இவை முழுக்க முழுக்க மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே இது போன்று தீமைக்கு மட்டுமே பயன்படும் பொருட்களை விற்பனை செய்வது ஹராம் ஆகும்.
- நம்மிடம் உள்ள ஹலாலான ஒரு பொருளை பாவமான காரியங்கள் நடக்கும் ஒரு இடத்திற்குத் தேடிச் சென்று விற்பனை செய்யலாமா?
மார்க்கம் அனுமதித்த பொருட்களை வாங்கிச் செல்பவன் அதைத் தவறான வியாபாரத்துக்குப் பயன்படுத்தினால் அதனால் நமக்கு குற்றம் வராது.
உதாரணமாக ஒரு மதுபானக் கடையில் மதுவுடன் ஊறுகாய், மீன் வறுவல், ஈரல் வறுவல் எனப் பல பொருட்களை வழங்குவார்கள். இவர்களுக்காக நாம் ஊறுகாய், மீன், இறைச்சி போன்றவற்றை விற்பது குற்றமாகாது.
ஆனால் ஹராமான காரியம் நடக்கும் இடத்தைத் தேடிச் என்று சப்ளை செய்வதை தவிர்க்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப் பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடைவிதிக்கப்பட்டவையே.
அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரி 52
மேற்கண்ட ஹதீஸில் வேலியோரங்களில் கால்நடைகளை மேய்ப்பவர், வேலிக்குள்ளேயே கால்நடைகளை மேயவிட நேரும் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளதால் சாராயக்கடையைத் தேடிச் சென்று சப்ளை செய்தால் நாமே அதனுள் விழுந்து விட வாய்ப்பு உண்டு என்ற நபியின் எச்சரிக்கைப்படி தேடிச் என்று கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
விபச்சார விடுதிக்கு ஹலாலான பொருட்களை நாம் சப்ளை செய்தாலும் அதில் நாம் விழுந்து விடும் அபாயம் உள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதால் அதைத் தவிர்க்க வேண்டும். ஹலாலான பொருட்களை விபச்சார விடுதிக்காக நம்மைத் தேடி வந்து வாங்கினால் அதில் குற்றம் ஏதும் இல்லை.