? *லஞ்சம் வாங்குபவர்களையும், கொடுப்பவர்களையும் அல்லாஹ் சபிப்பதாக ஹதீஸில் படித்தேன்.* ஆனால் இன்றைய நடைமுறை வாழ்க்கையில் மாநகராட்சி, அரசு மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் போன்ற அலுவலகங்களில் எண்ணற்ற வேலைகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறோம். *இதனால் அல்லாஹ்வுடைய சாபம் கிடைக்குமா? அல்லது அல்லாஹ் நம் சூழ்நிலையையும் உள்ளத்தையும் அறிந்து மன்னிப்பானா?*
*உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்!*
(அல்குர்ஆன் 2:188)
இந்த வசனத்தில், லஞ்சம் என்றால் என்ன என்பதற்கு ஒரு அளவுகோலை அல்லாஹ் கூறுகின்றான். *பிறரது பொருளை, அல்லது பிறரது உரிமையை அநியாயமாக அடைவதற்காக அதிகாரிகளிடம் கொடுக்கப்படும் லஞ்சமே இவ்வசனத்தில் தடை செய்யப்படுகிறது.*
உதாரணமாக, ரேஷன் கடைகளில் மக்களுக்குச் சலுகை விலையில் விற்பதற்காகப் பொருட்களை வைத்துள்ளார்கள். இந்தப் பொருட்களை நாமும் ரேஷன் முறையில் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் மேலதிகமாக நமக்குப் பொருள் தேவை என்பதால் ரேஷன் கடை ஊழியருக்குப் பணத்தைக் கொடுத்து, கூடுதல் பொருள் வாங்கக் கூடாது. காரணம், அது பிற மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய பொருளாகும். அதை லஞ்சம் கொடுத்து வாங்கக் கூடாது.
ஆனால் அதே சமயம், ரேஷன் கடையில் நமக்குத் தர வேண்டிய பொருளை வாங்குவதற்கே கூடுதல் தொகை கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். *இங்கு அடுத்தவர் பொருளை நாம் அடைவதற்காக லஞ்சம் கொடுக்கவில்லை. நமது பொருளைப் பெறுவதற்கே கூடுதல் தொகை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.* இதை நமது சக்திக்குட்பட்டு எதிர்த்துப் போராட வேண்டும் இது மற்றவர்களின் உரிமையைப் பறிக்காத லஞ்சமாகும். நம்முடைய வரிப்பணத்தில் ஊதியம் வாங்கிக் கொண்டு அந்தக் கடமையைச் செய்வதற்காக மக்களிடம் ஒரு தொகையைக் கேட்பது அநியாயம் என்பதால் இதையும் நாம் எதிர்க்க வேண்டும்.
நமது உரிமைகளையே பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கும் அளவில் ஒரு நாடு சீரழிந்திருந்தால் அப்போது நம் உரிமையைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பது சில வேளை நிர்ப்பந்தமாகி விடுகிறது. இது போன்ற நிலையை அடைவோர் *தங்களின் உரிமையைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தால் அது மன்னிக்கப்படும்.*
நமது நாட்டில் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் இந்த நிலை தான் உள்ளது. நமது உரிமையைப் பெறுவதற்காகவே நாம் கையூட்டு கொடுக்க வேண்டியுள்ளது. நாம் ஒரு வீடு கட்டுவதற்காக அனுமதி கோரி மாநகராட்சியை அணுகினால் அதற்கான கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு அனுமதி தருவது மாநகராட்சியின் கடமை. ஆனால் பெரும்பாலும் அவ்வாறு நடப்பதில்லை. வேண்டுமென்றே கால தாமதம் செய்து இழுத்தடிப்பது, தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்துவது, நடைமுறையில் இல்லாத கட்டுப்பாடுகளை விதிப்பது போன்ற காரியங்களில் மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபடுவார்கள். சம்திங் வெட்டினால் எல்லாம் சரியாகி விடும். கட்டட அனுமதி உடனே கிடைத்து விடும்.
இந்தச் சந்தர்ப்பத்தில், கையூட்டு கொடுக்காமலேயே நாம் நமது உரிமையைப் பெறுவதற்காகப் போராடலாம். லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்யலாம். அது தான் உண்மை முஸ்லிமின் வழிமுறையாகும். ஆனால் யாரைப் பற்றி நாம் புகார் தெரிவிக்கின்றோமோ அவரிடம் *லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முற்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு, அதற்குரிய சன்மானத்தை’ அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர். இந்நிலையில் புகார் தெரிவித்த நம் மீதே சட்டம் பாயும்.* எனவே இது ஒட்டுமொத்தமாக ஆட்சியாளர்களால் சரி செய்யப்பட வேண்டிய ஒரு சமூகத் தீமையாகும்.
இதனால் *நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் இது போன்ற கையூட்டுகளைக் கொடுத்தாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது.* இது மார்க்க அடிப்படையில் குற்றமாகாது.
ஆனால் அதே சமயம், *அடுத்தவரது உரிமையைப் பறித்து நாம் காரியம் சாதிப்பதற்காகப் பணம் கொடுத்தால் அது மார்க்க அடிப்படையில் குற்றமாகும். இதில் நிர்ப்பந்தம் என்ற நிலை ஏற்பட வாய்ப்பில்லை.* பத்து பேருக்குப் பின்னர், வரிசையில் வர வேண்டிய நமது விண்ணப்பத்தை, முதன்மைப்படுத்துவதற்காக நாம் பணம் கொடுத்தால் அதில் அந்தப் *பத்து பேரின் உரிமை பாதிக்கப்படுகின்றது. இதற்கு நிர்ப்பந்தம் என்ற காரணத்தைக் கூற முடியாது.* இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
*ஏகத்துவம்*